Monday, 27 November 2017

கலப்பு மணத்திற்கு ஆதரவாக ஒரு காவியம்

நூல்களிலிருந்து – 16

   (அருணன் இயற்றிய “தமிழ் இலக்கிய (வழி) வரலாறு” என்ற நூலிலிருந்து (2009) ‘கலப்பு மணத்திற்கு ஆதரவாக ஒரு காவியம்’ என்னுங் கட்டுரையின் முன் பகுதியை இங்கே பதிகிறேன்).   கலப்பு மணத்தைக் கருவாக வைத்து ஒரு காவியம் எழுந்திருக்கிறது; அதுதான் வளையாபதி. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. காலமென்னுங் கறையான் அரித்தது போக மிஞ்சியிருப்பவை 66 செய்யுள்களே.

   இதன் கதை வைசீய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் புராணத்தில் இது இடம்பெற்றிருப்பதில் மிகுந்த அர்த்தம் உண்டு. கதையின் நாயகன் வளையாபதி ஒரு வைசியன். சமண மதத்தின் புரவலர்களாய் வைசியர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் காவியம் அந்த மதத்தின் பெருமைகளைப் பேசுகிறது.

   கதைச் சுருக்கம் இதுதான்; மகப்பேறு இல்லாத வளையாபதி, பத்தினி என்ற வேளாளர் குலப் பெண்ணை இரண்டாந் தாரமாய் மணக்கிறான். பின்னர், எங்கே தன்னைச் சாதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்று பயந்து அவளை விரட்டிவிடுகிறான். அப்போது அவள் இவனது கருவைச் சுமந்துகொண்டிருந்தாள். ஆண் குழந்தை பிறந்து உத்தமன் எனப் பெயர் சூட்டப்பட்டு வளர்ந்து பெரியவனாகிறான். இங்கோ, மூத்தாள் ஒரு தாசியின் பிள்ளையைத் தன் பிள்ளை எனச் சொல்லி வளையாபதியை வஞ்சிக்கிறாள். முடிவில் சூழ்ச்சி அம்பலமாகிறது. மகப்பேற்றுக்காகத் தாழ்ந்த குலப் பெண்ணை மணந்தது தவறல்ல என்று வைசிய சாதிப் பெரியோர் கூறி, உத்தமனே வளையாபதியின் வாரிசு எனத் தீர்ப்பளிக்கிறார்கள்; எனினும் அவனுடன் பத்தினி சேர்ந்து வாழவில்லை; துறவி ஆகிவிடுகிறாள்.

   கறாரான வைதிக அடுக்கில் சமணம் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை வேண்டியிருக்கிறது என்பதன் இலக்கிய வெளிப்பாடாய் இந்தக் காப்பியம் திகழ்கிறது. நம் காலத்திலேயே சாதி விட்டுத் திருமணஞ் செய்வது அபூர்வமாய் இருக்கும்போது அந்தக் காலத்தில் சொல்ல வேண்டியதில்லை; ஆனால் அன்றே இப்படியோர் இலக்கியம் பிறந்தது, எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் சமத்துவச் சிந்தனையானது அவ்வப்போது திமிறிக் கொண்டு எழும் என்பதை உணர்த்துகிறது. நல் பெயர்களைச் சூட்டுவதிலிருந்தே நல்ல கதா பாத்திரங்களை அடையாளங் காட்டும் உத்தியை “பத்தினி, உத்தமன்” என்கிற பெயர்களிலிருந்து காணலாம்.


   பணம் படைத்த வைசியர்களுக்குத் தம் செல்வத்தை விட்டுச் செல்ல வாரிசு அவசியம். எவருமே மக்கட்பேற்றை விரும்பத்தான் செய்வர்; அந்த இயல்பான விருப்பத்துடன் சொத்தைக் கட்டியாள மகன் வேண்டும் என்கிற எண்ணமுஞ் சேர்ந்துகொள்கிறது.

&&&& 

Wednesday, 15 November 2017

வடமொழியின் ஆதிக்கம்
  கிடைத்த பண்டைத் தமிழ் நூல்களுள் மிகத் தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தின் காலம் பொ.யு.மு. 3-ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிட்டுள்ளனர். அதற்கும் முன்பே தமிழில் வடசொற்கள் கலந்துவிட்டிருந்தமையால் தொல்காப்பியர் ஒரு விதி வகுத்தார்:

   வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
   எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884)

இதன் பொருள்:
வடசொற்களை அவற்றுக்கேயுரிய எழுத்துகளை நீக்கிப் பொருத்தமான தமிழெழுத்துகளைப் பெய்து ஏற்க.

  இவ்விதிப்படி,

    பங்கஜம் – பங்கயம்
    விஷம்  - விடம்
    ஹீனம்  - ஈனம்

என்றெல்லாம் தமிழ்ப் புலவர்கள் எழுதினார்கள். சமற்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியவர்கள் அம்மொழியின் கருத்துகளையும் கற்பனைகளையுங்கூடத் தழுவிக் கொண்டார்கள்.

   ஆறுகளைப் பெண்ணாய்க் கருதிய ஆரியர், அவறுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா எனப் பொருத்தமான பெயர் சூட்டினர். அவர்களைப் பின்பற்றி நாமும் காவேரி, அமராவதி, பவானி எனப் பெயர் வைத்தோம்.

   ---------------  நடந்தாய் வாழி காவேரி
   நடந்த எல்லாம் நின் கணவன்  (சிலம்பு, கானல்வரி)

என்று இளங்கோ காவேரிக்குக் கணவனாகச் சோழனைக் கற்பனை செய்தார். வையையையும் அவர் பெண்ணாய்ப் பாவித்தார்.

   புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
   வையை என்னும் பொய்யாக் குலக்கொடி (புறஞ்சேரி 169,170)

  ஆரியர் உலகையும் மங்கையாக உருவகித்து பூமாதேவி என்றதற்கிணங்க நாமும் அவ்வாறே கொண்டோம்;

1.   நிலம் என்னும் நல்லாள் நகும் (குறள் 1040)
2.   பூதலம் என்னும் நங்கை (கம்பர் 7401)
3.   நீராருங் கடலுடுத்த நிலமடந்தை (மனோன்மணீயம்)

   பூமியின் மகன் நரகாசுரன் என்பதை நம்புகிறோம். அவன் இறந்த நாளைத் தீபாவளியெனக் குதூகலத்துடன் கொண்டாடுகிறோம். அவன் நமக்கு என்ன தீங்கு செய்தான்? ஒருவன் பரம எதிரியே ஆனாலும் அவனது சாவுக்கு மகிழ்வது பண்பாடல்ல என்று 21-ஆம் நூற்றாண்டிலும் நமக்குத் தோன்றவில்லை.

   நாணம் என்ற பண்பைத் திருவள்ளுவர், “நாண் என்னும் நல்லாள்” எனப் பெண்ணாகக் கூறியதேன்? பரிமேலழகர் காரணஞ்சொல்கிறார்; “பெண்பால் ஆக்கியது வடமொழி முறைமையைப் பற்றி.”

   அதாவது, சமற்கிருதத்தில் நாணம் ‘லஜ்ஜா’ எனப் படுகிறது; இது பெண்பாற்சொல். ஆகவே, நாண் ஒரு பெண்!

  பழைய இலக்கிய, இலக்கணப் படைப்புகளுக்கும் நாம் சமற்கிருதத்துக்குப் பெரிதுங் கடன்பட்டுள்ளோம்;

  கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் ஆகியவற்றுக்கு மூலம் வடமொழியிதிகாசங்கள் என்பது யாவரும் அறிந்தது; திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி, பெருங்கதை, நைடதம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், கந்த புராணம், குசேலோபாக்கியானம், அரிச்சந்திர புராணம், நளவெண்பா, தூது இலக்கியங்கள், மண்ணியல் சிறுதேர், தண்டியலங்காரம் முதலான படைப்புகளும் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் அல்லது சமற்கிருதத் தாக்கம் பெற்றவை.

   தொல்காப்பியங்கூட இந்திரன் என்பான் இயற்றி ஐந்திரம் என்ற வடமொழி இலக்கணத்தைத் தழுவியது என்பதை அதன் பாயிரம், “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனக் கூறுவதால் அறிகிறோம். குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடு வடமொழிப் பரத சாத்திரத்திலிருந்து பெறப்பட்டதாம். தொல்காப்பியர்,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெரும்புனல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள்-5)

என்று நால்வகை நிலத்துக்கும் தலைவர்களாக ஆரிய தெய்வங்களைத்தானே குறிக்கிறார்?
(வேந்தன் – தேவர்களின் மன்னன் – இந்திரன்)

  இந்திர விழா, பழந்தமிழரின் விழாக்களுள் குறிப்பிடத்தக்கது. கோவலன் – மாதவி பிரிவு இந்திர விழாவில்தான்.

  தமிழ் மன்னர்கள் அமல்படுத்தியது மனுச்சட்டம். ஆதித்த கரிகாலனைக் கொன்ற நான்கு பார்ப்பனர்களுக்குக் கொலைத்தண்டனை விதிக்கப்படாதது ஏன்? மனுச்சட்டம், பார்ப்பானைக் கொல்லக்கூடாது என்கிறதே! நமக்குப் பொருந்திய புதுச்சட்டங்களை இயற்ற வேண்டுமென ராஜராஜனுக்குக் கூடத் தோன்றவில்லை.

   இவ்வாறு நாம் சமற்கிருத ஆக்கங்களை முன்னோடியாய்க் கொண்டிருப்பதால், Tamil Literature is dependent on Sankskrit literature என்னும் ஆய்வு முடிவுக்கு வந்த மேனாட்டார் வடமொழிக்கே முக்கியந்தந்து போற்றுகின்றனர், கற்கின்றனர்.

  “கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பது” நல்லதுதான்; ஆனால், வடமொழி உரைநடை இலக்கியங்களைக் கற்றுக் களித்துத் தமிழில் அவற்றைத் தோற்றுவிக்காமற் போனது தமிழ்ப் புலவர்களின் தவறு; அப்படிச் செய்திருந்தால் வரலாறு, நாடகம், கட்டுரை, மருத்துவம், கதை, புதினம் முதலான புது வகைகளுள் சிலவாவது பிறந்து மொழியை வளப்படுத்தியிருக்கும். இதற்காக 19-ஆம் நூற்றாண்டு வரை, வெள்ளையர் வருகை வரைக்கும், காத்திருக்க வேண்டியதாயிற்று. 

&&&&&&& 
படம் உதவி - இணையம்

Friday, 27 October 2017

பாவம் அந்தப் பெண்கள்!
   

மங்கையர் பலருடன் தொடர்பு கொண்டு வாழ்ந்தவனைக் ‘காதல் மன்னன்’ என்று ஊடகங்கள் பெருமைப்படுத்தின; பல ஆடவருடன் பழகுகிற ஒருத்தியைக் ‘காதல் அரசி’ எனப் பாராட்டுவார்களா? மாட்டார்கள். மாறாக, ‘வேசி, விபசாரி, ஒழுக்கங்கெட்டவள்’ எனத் தூற்றுவார்கள்.

   காதல் மன்னனின் மகள் ஒரு பேட்டியில், “எங்கப்பா அழகானவர். அதனாலேயே பெண்கள் அவரை நாடினார்கள்” என்று பெருமை பொங்கக் கூறினார். அம்மா அழகாயிருந்து ஆண்கள் மொய்த்திருந்தால், பீற்றிக் கொள்வாரா?

   ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு வேறு நீதி.

   பெண்களுள் ஒரு சாராரைத் திருவள்ளுவர் ‘பொருட்பெண்டிர்’ என இழிவுபடுத்திப் பத்துக் குறள்கள் இயற்றினார். ஆண்களுக்கு அவரது அறிவுரை இரண்டுதான்;

1.   வரைவின் மகளிரைக் கூடாதீர்;
2.   பிறன் மனைவியை நாடாதீர்.

   மற்றபடி எத்தனைக் கன்னியர், கைம்பெண்களுடனும் பழகலாம்; அதை அவர் எதிர்க்கவில்லை. ஆண் அல்லவா? கற்பு என்ற ஒன்றைப் பெண்ணுக்கு வற்புறுத்திய ஆணாதிக்கச் சமுதாயம் ஆணுக்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை. பாரதி மட்டுந்தான் நியாயக்குரல் எழுப்பினார்:

   கற்புநெறி யென்று சொல்லவந்தார் இரு
   கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.

   பரத்தையர் பற்றிச் சங்க இலக்கியம் பலபடக் கூறுகிறது:

  மூன்று வகைப் பரத்தையர் இருந்தனர்:

1.   பொதுப் பரத்தை அல்லது ஊர்ப் பரத்தை – பொருள் தருவார்க்கு உரியவள்;

2.   காதற் பரத்தை – ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்;

3.   இற் பரத்தை – இல்லத்துக்கே கொண்டுவரப் பட்டவள்.
 
  காட்டு மயிலுக்குப் போர்வை நல்கிய வள்ளல் பேகன் வீட்டு மயிலைப் புறக்கணித்துப் பரத்தை யொருத்தியின் இல்லத்தில் தங்கி வாழலானான்; அதை யறிந்த புலவர்கள் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர், கால இடைவெளியில் அவனிடம் சென்று, அவனுடைய மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி அவளிடம் திரும்பிப் போய் வாழும்படி அறிவுறுத்தினர். அவனைக் கண்டிக்கவில்லை; சமூகத்தால் ஏற்கப்பட்ட வழக்கம் ஆயிற்றே! பேகன் திருந்தவில்லை யெனத் தெரிகிறது; அதனால்தான் புலவர்கள் அடுத்தடுத்து முயன்றிருக்கிறார்கள்.

   கோவலனைத் தந்தையோ கவுந்தியடிகளோ பிறரோ கண்டித்ததாய்த் தகவல் இல்லை. கண்ணகி மட்டுமே “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என நளினமாய்ச் சாடினாள்.

   விலைமாதரைச் சகட்டுமேனிக்கு இழித்தல் தவறு.

1.   பொட்டுக் கட்டும் வழக்கம் பெண்களை வலுகட்டமாய்த் தாசிகளாக்கிற்று. அந்தக் கொடிய வழக்கம் ஆந்திராவின் சில பகுதிகளில் இன்றுங் கடைப்பிடிக்கப் படுவதாக அண்மைய Hindu–வில் (8.10.17) செய்தி விவரமாய்ப் பிரசுரமாகியுள்ளது.

2.   வறுமை போக்கத் தொழிலில் இறங்குவோர் உண்டு; அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

3.   கடத்தப்பட்டு / விற்கப்பட்டுச் சிவப்பு விளக்கு சிறையில் சிக்கி அல்லல் உழப்போர் ஆணாதிக்கத்துக்கு பலியானவர்கள், இரக்கத்துக்குப் பாத்திரங்கள்.


   ஆணுக்கு, அன்றுஞ் சரி, இன்றுஞ் சரி, முழுச் சுதந்தரம் இருந்தது, இருக்கிறது. வள்ளுவர் சொன்னாலென்ன, அவர் தாத்தா சொன்னாலென்ன, ஒழுக்கந் தவறி வாழும் ஆடவர் பற்பலர் உண்டு. அதைச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. “அவன் ஆம்பிளே!” என்ற சொற்றொடருக்கு அர்த்தங்கள் ஆயிரம். 

***************
(படம் உதவி - இணையம்)

Sunday, 24 September 2017

ஓநாயின் இறப்பு

  
(19-ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர் விஞ்ஞி - Vigny -  அவரது La mort du loup - லா மோர் துய் லூ - என்ற கவிதையின்  மொழிபெயர்ப்பு)
ஓடின முகில்கள் ஒளிநிறை மதிமேல்
தீவிபத்தில் குறுக்கே விரைகின்ற புகைபோல்.
தோப்புகள் கருநிறத்தில் தொடுவானம் வரைக்கும்.
நடந்தோம் பேச்சின்றி சில்லென்ற புல்மீது,
அடர்த்தியாய் உயர்ந்த புதர்களின்  ஊடே.
துரத்திப் போன ஓநாய்க ளுடைய
பெரிய நகங்களின் சுவடுகள் தம்மைக்
கண்டோம் ஊசியிலை மரங்களின் கீழே.
தீட்டினோம் காதை, நடையை நிறுத்தி,  
மூச்சையும் அடக்கி.

ஒலியெதையும் எழுப்பவில்லை தோப்போ சமவெளியோ.
உயரத்தில் கத்திற்று காற்றுத் திசைகாட்டி மாத்திரம்.
ஏனெனில் மிகமேலே எழும்பிப்போய்க் காற்று
ஓங்குயர் கோபுரங்கள் தமைமட்டும் வருடிற்று.
கீழிருந்த மரங்களோ பாறைகள்மேல் சாய்ந்து
ஊன்றி முழங்கையை உறங்கினபோல் தோன்றின.
ஆகவே ஓசையொன்றும் கேட்கவில்லை வேட்டையருள்
மூத்தவர் தரைமீது படுப்பதுபோல் குனிந்து
நோக்கினார்இதுவரை யொருபோதும் தவறாகக்
கணிக்காத வல்லுநர் தெரிவித்தார் தாழ்குரலில்:
"புத்தம்புதுத் தடயங்கள் இருபெரிய ஓநாய்கள்
மற்றுமிரு குட்டிகளின் வலுமிக்க நகங்களது
சுவடுகள் தான்" என்றே. யாவரும் கத்திகளைக்
கைக்கொண்டு பளிச்சென்று ஒளிவீசும் துப்பாக்கி
களைமறைத் தடிமேல் அடிவைத்து நடந்தோம்
கிளைகளை விலக்கிமூவர் நின்றுவிட,
அவர்கள் நோக்கியதை நானறிய முயன்றேன்:

சிறுதொலைவில் கண்டேன் விலங்குருவம் நான்கு;
தலைவன் நின்றிருக்க அப்பால் மரமொன்றின்
அருகில் அதன்துணை ஓய்வுகொண் டிருந்தது;
ரொமுலுஸ்க்கும் ரெமுஸ்க்கும் தன்பாலை யீந்து
வளர்த்த தன்றோ ஓரோநாய்?
தெய்வமென ரோமர் வழிபட்ட அவ்விலங்கின்
சலவைக்கல் சிலைபோல நின்றதது.

ஆணோநாய் அமர்ந்தது பின்னங்கால் மடித்து
வளைந்த நகங்கள் மண்ணுள் புதைய.
அறிந்து கொண்டது: அபாயச் சூழ்நிலை,
அடைபட்ட பாதைகள், எதிர்பாராத் தாக்குதல்!
எழுந்து கவ்விற்று இருந்ததிலே மிகுதியான
துணிச்சல் கொண்ட நாய்தன்னின் குரல்வளையை;
உடம்பை ரவைகள் ஊடுருவும் நிலையிலும்
கூரிய கத்திகள் குறடுகள் போன்று
அகன்ற வயிற்றைத் துளைத்த போதிலும்
காலமான நாயினுடல் காலடியில் வீழ்ந்த
அந்தக் கடைசி  நிமிடம் வரைக்கும்
தளர்த்தவே யில்லை சிறிதேனும்
தன்னிரும்பு ஈறுகளின் இறுக்கத்தை.
பின்பதை விட்டுவிட்டுப் பார்த்தது எங்களை;

ஆழமாய் விலாவில் செருகிய கத்திகள்
சாய்த்தன புற்றரையில் குருதிவெள் ளத்தில்.
தொடர்ந்து பார்த்தபின் படுத்தது வாயில்
படர்ந்த குருதியை நக்கிய வாறே.
மூடி அகல்விழிமெளனமாய் இறந்தது.
துப்பாக்கி மேலே நெற்றியை வைத்து
சிந்தனையில் ஆழ்ந்தேன்ஓநாய்க்குக் காத்திருந்த
துணைவி குட்டிகள் ஆகிய மூன்றையும்
துரத்திப் போகும் முடிவெடுக்க முடியவில்லை;

என்னெண்ணம்: தன்துணைவன் தன்னந் தனியாய்ப்
போராட நிச்சயமாய் விட்டிராது அதன்பெட்டை
பிள்ளைகள் மட்டும் இல்லாமற் போயிருந்தால்.
அதன்கடமை அவைதம்மைக் காப்பாற்றி நன்றாகப்
பசிதாங்கிக் கொள்ளவும்காட்டினுக்கு உரியவரை
அழிப்பதற்கு மனிதனுடன் சேர்ந்துவரும் அடிமை 
விலங்குகள் அவனோடு இரைக்காகச் செய்துள்ள
ஒப்பந்தம் தன்னில் ஒருநாளும் சிக்காமல்
இருக்கவுங் கற்பித்தல்.

அந்தோ! மாந்தரெனும் மாண்புமிகு பேருடையோம் 
என்றாலும் நாணுகிறேன் எம்மை யெண்ணி.
பலவீனர் நாங்கள்! வாழ்வினின்றும் அதன்சகல
துயர்களில் இருந்தும் விடுபடும் வழியினை
நீங்கள்தான் அறிகின்றீர் மேன்மைமிகு விலங்குகளே!
என்னவாய் இருந்தோம் உலகில்?
எச்சமாய் எதைவிடுத் தேகிறோம் முடிவில்?
எண்ணிப் பார்த்தால் புரியும்:

"மெளன மொன்றே வலியதுமற்ற தெல்லாம் பலவீனம்."
காடுவாழ் பயணியே! அறிந்தேன் நன்றாக
உன்றனைநீபார்த்த இறுதிப் பார்வை
என்னிதயம் தைத்ததுஅதுகூ றிற்று:
"வனத்தில் பிறந்தநான் வானெட்டுந் தரமுள்ள
மனத்தின் திண்மையும் பெருமிதமும் பெற்றேன்;
மானிடா! இயலுமேல் உழைப்பால் சிந்தனையால்
அடையச்செய் உச்சத்தை உன்றன் உள்ளம்;
செருமல் அழுதல் பிரார்த்தனை செய்தல்
எல்லாமே சமமான கோழைச் செயல்;
உனக்கான பாதையில் உறுதியுடன் ஆற்று
கடினம்நிறை கடமைகளைகாலத்தின் முடிவில்
உற்றநோய் நோன்று உயிர்விடு மெளனமாய்
என்னைப் போல!"
===============================