Friday 30 December 2011

காப்பதற்கு!



ஆபாச நூலொன்றைப் படித்தாய்என்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்மகளை!
மோதிரங் காணோம், திருடிஎன்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்மகனை!

பாட்டிலைப் பார்த்ததால் குடிகாரிஎன்றீர்,
மெளனித்தேன் காப்பதற்கு உம்கணவரை!
அன்றொருநாள் அவரடியைத் தடுத்து விட்டேன்,
வலியினின்று காப்பதற்கு உம்உடம்பை!

என்னசெய்தும் உங்கொடுமை குறையக் காணோம்.
திருந்தாத பிறவிநீர்! தெளிந்து விட்டேன்.
மணவிலங்கை முறிப்பதுதான் தீர்வோ என்றன்
மனநிம் மதிதன்னைக் காப்பதற்கு?


(படம் - கூகுள் உபயம்)

Thursday 29 December 2011

மூன்று பழமொழிகள்


தமிழின் ஆயிரக்கணக்கான பழமொழிகளுள் பற்பல பொருள் சரிவர விளங்காமல் மூடு மந்திரமாக உள்ளன.அவற்றுள் நான் புரிந்துகொண்ட மூன்றை விளக்குகிறேன்:

1 - ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்

முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.


2 - . மயிலே மயிலே என்றால் இறகு போடாது.

சித்த மருத்துவம் பயன்படுத்தும் மருந்துச் சரக்குகளுள் மயிலிறகும் ஒன்று. இது தேவைப்படும்போது மரத்தின் மீது அமர்ந்திருக்கும் மயிலை நோக்கி, "மயிலே, மயிலே, இறகு ஒன்றைப் போடேன்" என்று கெஞ்சிக் கேட்டால், "இந்தா, எடுத்துக் கொள்" எனச் சொல்லித் தன் இறகையொடித்து அது போடுமா? போடாது. அதைத் துரத்திப் பிடித்து அமுக்கி இறகைப் பிடுங்கிக் கொள்ளவேண்டும் என்று இப்பழமொழி போதிக்கிறது.

நயமாகப் பேசினால் இணங்காதவரை வன்முறையால் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது கருத்து.

வன்முறையை ஆதரிக்கிற பழமொழிகளைப் பரப்புவது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் தீங்கு பயக்கும்.


3-. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள், குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும் அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா ஆயினர்.

தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பொன் செய்யும் மருந்தைக் கண்டுபிடிக்கமுடியும் என அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும் (அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.

வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோ கத்தையும்
வேதித்து விற்றுண் ணலாம்

என்று அவர் பாடியுள்ளார்.

இதன் பொருள் : தழலில் - தீயில். இரதம் வைத்து - இரசம் வைத்து (அதாவது பாதரசம் பயன்படுத்தி). ஐந்து உலோகத்தையும் - ஐம்பொன் எனப்படுகிற செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளி, (சிறுஅளவில்) தங்கமாகிய ஐந்து உலோகங்களையும். வேதித்து - வேதியியல் முறைப்படிப் பொன்னாக மாற்றி. விற்றுண்ணலாம்- விற்றுச் செல்வம் சேர்க்கலாம்.

சிறிய அளவில் பொன், பெரிய அளவில் மற்ற உலோகங்கள் சேர்த்து எல்லாவற்றையும் தங்கமாக்க எண்ணுவது பேராசை அல்லவா?

ரசவாதிகளை நோக்கி யாரோ ஓர் அறிவாளி கூறிய உபதேசந்தான் இந்தப் பழமொழி.

"பொன் செய்யும் மருந்து தேடிப் படாத பாடுபடுகிறீர்களே! நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்கள் பேராசை மேன்மேலும் பொன் வேண்டும் என்று தூண்டுமாதலால் மன நிறைவு ஒருகாலும் ஏற்படாது. போதும் என்ற மனத்தைப் பெறுங்கள். உள்ளதை வைத்துக்கொண்டு திருப்தியாக வாழலாம்" என்ற அவரது புத்திமதி ரசவாதிகளுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே எக்காலத்தும் பொருந்துகிற பொன்னுரையாகும்.

(நிலாச்சாரல் இணைய தளத்தில் வெளியான என் கட்டுரையின் ஒரு பகுதி)



அழுகை பெய்கிறது


போல் வெர்லேன் ( Paul Verlaine ) 19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர். வாழ்க்கையில் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் அனுபவித்தவர். அவரது சோகக்கவிதையொன்றின் நேரடி மொழிபெயர்ப்பைக் கீழே படிக்கலாம்:

அழுகை பெய்கிறது இதயத்துக்குள்
ஊரிலே மாரி ஊற்றுவது மாதிரி.
என்றன் இதயத்தைத் துளைக்கின்ற
அந்த ஒடுக்காற்றல்தான் என்ன?

தரைமீதுங் கூரை மீதும்
மழையின் இதமான ஒலி!
மகிழ்ச்சியிழந்த நெஞ்சுக்கு
மழையின் தாலாட்டு!
தன்னையே வெறுக்கும் இந்த இதயத்தில்
பெய்கிறது அழுகை காரணம் இன்றி.

எதுவுமே புரியவில்லை.
இந்தத் துயருக்கு இல்லை காரணம்.
அன்போ பகையோ இல்லாமலே
துன்பம் எவ்வளவு மனத்துக்கு!
இது ஏன் என்பதை அறியாததைவிடப்
பெரிய துன்பம் வேறொன்றுமில்லை.

மை படுத்திய பாடு



என் காலத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இறகு பேனாவைத்தான் எழுதுவதற்குப் பயன்படுத்தினோம். கையெழுத்தை, ஊற்று பேனா கெடுத்துவிடும் என்று ஆசிரியர்கள் தடை விதித்தமையால் உயர்நிலைப்பள்ளியில் கால்வைக்கும்வரை இறகு பேனாவே கதி.

இறகை (உலோகத்தால் ஆன நிப்பை)ச் செருகும் மரக்கட்டை ஒரு சாண் நீளமும் உருளை வடிவுங் கொண்டு ஒருபாதி தடிமனாயும் ஒருபாதி ஒல்லியாயும் இருந்தது. பருத்த முனையின் குடைவான உட்பகுதியில் சிறு உலோக ஸ்பிரிங் அமைப்பு உண்டு. அதில் இறகைச் செருகினால் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.

மை பாட்டிலின் மையைத் தொட்டுத் தொட்டு எழுதவேண்டும். ஒரு தடவைக்கு நாலைந்து எழுத்து மட்டுமே உருவாகும். மை விரைவில் உலராதாகையால் தவறுதலாய் விரல் பட்டால் எழுத்துகள் கலைந்துவிடும். தாளைப் புரட்டும்போது அடுத்தப் பக்கத்தில் எழுத்துகள் பட்டுச் சிதையும். இதைத்தடுக்க ஒற்று தாள் (blotting paper) தேவை. கடையில் வாங்கிக் கைவசம் வைத்துக்கொண்டு பக்கம் புரட்டுமுன்பு எழுத்துகளின் மீது மெதுவாகப் பக்குவமாக வைத்தால் மையை அது உறிஞ்சிவிடும். (படாரென்று வைத்து அழுத்தினால் மை பரவி எழுத்துகளை உருத்தெரியாமல் அழிக்கும்.)

மைப்புட்டியை மேசை (டெஸ்க்) மீது வைத்து இடக்கையால் பிடித்துக்கொள்ளாவிட்டால் மேசை அசையும்போது அது தரையில் விழுந்து உடையும். முன்பெஞ்சு மாணவனின் முதுகு பட்டாலும் விழுந்துநொறுங்கும். கீழே விழாமல் நம் பக்கம் சாயுமானால் மை முழுதும் நம்முடைய சுவடி மற்றும் புத்தகங்களின் மேல் பட்டையாய்க் கோடு போட்டுவிட்டு வழிந்து உடையிலும் முத்திரை பதிக்கும்.

(என் இரண்டாம் வகுப்பாசிரியர் மதிப்புமிகு சுப்பிரமணிய அய்யர் நினைவுக்கு வருகிறார். தேவைப்பட்டபோதெல்லாம் யாராவது ஒரு மாணவனை அழைத்து அருகில் நிற்கவைத்து, அவன் கையில் புட்டியைத் தந்து தொட்டெழுதிய முன் ஜாக்கிரதைக்காரர் அவர்.)

பள்ளி செல்லும்போதும் திரும்பிவரும்போதும் பாட்டிலைக் கையில் எடுத்துச் சென்றோம். மத்தியான வெயிலில் மை பொங்கிக் கசிந்து வழிந்து கையைக் கறைப்படுத்துவது பெருந்தொல்லை.

இதைத் தவிர்க்க ஒரு வழி இருந்தது. சாராயத்துக்குப் பெயர் போன எங்கள் ஊரின் கடைகளுக்கு பிரான்சிலிருந்து உயர்தர மது வரும். பாட்டிலின் பாதுகாப்புக்காக அதைச் சுற்றி அலுமினியக் கம்பிவலை போட்டிருக்கும். பாட்டிலைப் பயன்படுத்துமுன்பு அதை அகற்றிவிடுவார்கள். அது இனாமாகக் கிடைக்கும். (சில சமயம் தரமாட்டார்கள்) கால் பாட்டிலுக்கான சிறுவலையொன்றைப் பெற்று அதனுள் மைப்புட்டியை வைத்து வலையை இறுக்கி உச்சி வளையத்தினுள் விரல் நுழைத்துக் கிளிக்கூடு போல் தூக்கிப்போனோம்.

வகுப்பிலேயே வைத்துவிடலாமே என்ற எளிய யோசனை கூடத் தோன்றாத அளவுக்கு மக்குகளாகவா இருந்தோம்? அப்படிச் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பதைச் சிலரது அனுபவத்தால் அறிந்திருந்தோம். இடைவேளை நேரத்தில் பள்ளியில் தங்கியுள்ள வெளியூர் மாணவர்கள் மையைத் தம் புட்டியில் ஊற்றிக்கொண்டு நமது பாட்டிலைக் காலியாக்கிவிடுவார்கள். அல்லது முதலுக்கே மோசமாய் அது மாயமாய் மறைந்துவிடும். யாரைக் கேட்பது? அதனால்தான் சுமந்தலைந்தோம்.

சேவகரால் பட்டதுன்பம் மிகவுண்டு கண்டீர்,
சேவக ரில்லாவிடிலோ வேலைநடப் பதில்லை.

என்று பாரதியார் பாடியது போல

மையினால் பட்டதுன்பம் மிகவுண்டு கண்டீர்,
மையே இல்லாவிடிலோ எழுத முடிந்ததில்லை

எனப்பாடுதல் பொருந்தும்.

(படம் தந்துதவிய கூகுளுக்கு நன்றி)

Sunday 25 December 2011

போதை தந்த உந்துதல் - பிரெஞ்சு சிறுகதை


(அல்போன்ஸ் தொதே (Alphonse Daudet))
(பிரெஞ்சிலிருந்து தமிழில் - சொ.ஞானசம்பந்தன்)


 ************************************************************************

அங்கே என்ன நடக்கிறது?

கதவொன்றின் முன் பெண்கள் கூட்டம்; நிற்பதும் உரையாடுவதுமாய் இருக்கிறார்கள். ஒரு காவலர், கும்பலின் நடுவில் நின்று கைச்சுவடியில் எழுதுகிறார்.

படகுகாரர் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடன் தெருவைக் கடக்கிறார்.

என்ன விஷயம்?

நாய் அரைபட்டதோ? வண்டி ஏதாவது சிக்கிக் கொண்டதா? வாய்க்காலில் குடிகாரன் எவனாவது விழுந்தானோ? அப்படியொன்றும் சுவாரசியம் இல்லை....

இல்லை! ஒரு சிறு குழந்தை மர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறது. கலைந்த தலைமயிர், ஜாம் அப்பிய கன்னங்கள், கை முட்டிகளால் கண்களைக் கசக்கியபடி அழுகிறது. சரியாய்க் கழுவாத பரிதாப முகத்தில் வழிந்த கண்ணீர்த் துளிகள் விசித்திரக் கோடுகளை வரைந்துள்ளன. உணர்ச்சி எதுவும் இன்றியும் ஒரு குற்றவாளியை விசாரிக்கும் தோரணையுடனும், காவலர் அந்தக் குழந்தையிடம் கேள்வி கேட்டுக் குறித்துக் கொள்கிறார்.

"உன் பெயர் என்ன?"

"தொத்தோர்"

"சரி, விக்தோர். என்ன விக்தோர்?"

பதிலில்லை. குழந்தை முன்னிலும் அதிகமாய் அழுது கத்துகிறது: "அம்மா! அம்மா!"

அப்போது அந்தப் பக்கம் வந்த மிக விகாரமான, மிக அசுத்தமான குப்பத்துப் பெண்ணொருத்தி இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டு கும்பலிலிருந்து வெளிப்பட்டுக் காவலரிடம்,

"என்னிடம் விடுங்கள்" என்று சொல்லிய பின்பு மண்டியிட்டுக் குழந்தையின் மூக்கையும் கண்களையும் துடைத்துப் பிசுப்பிசுப்புக் கன்னங்களில் முத்தமிட்டுக் கேட்டாள்:

"அம்மா பேர் என்ன கண்ணு?"

அதற்குத் தெரியவில்லை.

அக்கம்பக்கத்தாரிடம் காவலர் விசாரித்தார்.

"இந்தாங்க, வாட்ச்மேன்! அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?"

அவர்களின் பெயர் யாருக்கும் தெரியாது. வீட்டிலே எத்தனையோ பேர் குடி வருகிறார்கள். போகிறார்கள். தெரிந்ததெல்லாம், அவர்கள் ஒரு மாதமாய் வசித்தார்கள், வாடகை பரம் பைசா கொடுக்கவில்லை, உரிமையாளர் அவர்களைத் துரத்தினார், ஒரு பெரிய இடைஞ்சல் நீங்கியது என்பது தான்.

"என்ன வேலை பார்த்தார்கள்?"

"ஒன்றுமில்லை"

"இரண்டு பேரும் பகலைக் குடிப்பதிலும், இரவைச் சண்டை போடுவதிலும் கழித்தார்கள். பிள்ளைகளை அடிப்பதில் தான் அவர்களுக்குள் ஒற்றுமை. இரண்டு பையன்கள்: பிச்சை எடுப்பதும், கடைகளில் திருடுவதும் தொழில். எப்பேர்ப்பட்ட குடும்பம், புரிகிறதா?"

"குழந்தையைத் தேடி வருவார்கள் என்று நம்புகிறீர்களா?"

"நிச்சயமாக இல்லை"

இவனைக் கைகழுவுவதற்குக் குடி போகிற நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். வாடகை கொடுக்க வேண்டிய சமயத்தில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

காவலர் கேட்டார்:

"அப்படியானால் அவர்கள் போனதை யாரும் பார்க்கவில்லையா?"

விடியற்காலையிலேயே அவர்கள் போய் விட்டார்கள், கணவர் வண்டியைத் தள்ளிக் கொண்டு, மனைவி கவுனில் ஒரு பொக்கேவுடன், பையன்கள் கால்சட்டைப் பைகளுள் கைகளுடன். அவர்களைப் பிடிக்க முடியாது.

அநியாயம் என்ற எண்ணத்துடன் மக்கள் நடந்து சென்றார்கள்.

பாவம் அந்தக் குழந்தை! அதன் தாய் நாற்காலியில் உட்கார வைத்து, "சமர்த்தாக இரு!" என்று சொல்லி இருந்தாள். அப்போது முதல் அது காத்திருந்தது.

பசியால் அழவே எதிர்ப் பழக் கடைக்காரி ஜாம் தடவிய ரொட்டித் துண்டு தந்திருந்தாள். அது தீர்ந்து போய் நெடு நேரம் ஆகிவிட்டது. குழந்தை மீண்டும் அழத் தொடங்கிற்று. நிரபராதியான அந்தப் பரிதாபக்குழந்தைக்குப் பயம். தன்னைச் சுற்றிச் சுற்றி வந்த நாய்களால் பயம்; நெருங்கிக் கொண்டிருந்த இரவால் பயம்; தன்னிடம் பேசிய முன் பின் தெரியாதவர்களால் பயம்.

சாகப் போகின்ற குருவியொன்றின் இதயம் போல் அதன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அதைச் சுற்றிக் கூட்டம் அதிகரித்தது.

எரிச்சலுற்ற காவலர் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல குழந்தையின் கைகளைப் பற்றினார்.

"என்ன, இதை யாரும் கோரவில்லையே?"

"ஒரு நிமிஷம்!"

எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். செப்பு வளையங்கள் தொங்கிய காதுகள்வரை, வாய்விரிய அசட்டுச்சிரிப்பு சிரித்த ஒரு தடிமனான மற்றும் முகத்தில் சிவப்பேறிய ஆசாமியொருவரைக் கண்டனர்.

"ஒரு நிமிஷம்! யாரும் விரும்பவில்லையென்றால் நான் எடுத்துக் கொள்கிறேன்!"

கூட்டம் குதூகலக் குரல் எழுப்பியது. "பாராட்டு!", "பெரிய நன்மை, நீங்கள் செய்வது" "நீங்கள் நல்ல மனிதர்!"

திரு லுவோ, வெள்ளை ஒயினாலும், வாணிக லாபத்தாலும் எல்லாரது ஆமோதிப்பாலும் வெகுவாய்த் தூண்டப்பட்டுக் கைகளைக் கட்டிக் கொண்டு நடுவில் நிமிரிந்து நின்றார்.

"என்னங்க! என்ன சொல்றீங்க? இது சாதாரண விஷயம்".

காவல் நிலையம் வரை ஆர்வலர்கள் அவரைத் தொடர்ந்தார்கள், அவரது ஊக்கம் குன்றிவிடாதபடி பார்த்துக் கொண்டு.

அங்கே, இப்படிப்பட்ட கேஸ்களில் வழக்கமாய் நிகழ்வது போல், விசாரணை நடைபெற்றது.

"உங்கள் பெயர்?"

"பிரான்சுவா லுவோ, கமிஷனர் சார். கல்யாணம் ஆனவன். இன்னுஞ் சொல்லப் போனால் மனவுறுதியுள்ள ஒருத்தியைக் கட்டிக் கொண்டவன். அது எனக்கு அதிர்ஷ்டம், கமிஷனர் சார். ஏனென்றால் நான் ரொம்பப் பலசாலியல்ல, அல்ல. ஹா! ஹா! தெரியுதுங்களா? நான் ஒரு பருந்தல்ல. என் பெண்சாதி சொல்வது போல, "பிரான்சுவா பருந்தல்ல".

அவர் இந்த அளவு பேச்சு வன்மை உடையவராய் ஒரு போதும் இருந்ததில்லை. தளை நீங்கிய நாக்கும் லாபகரமான பேரமொன்றை முடித்த மற்றும் ஒரு பாட்டில் வெள்ளை ஒயின் பருகிய மனிதனின் திடமும் தம்மிடம் இருப்பதாய் அவர் உணர்ந்தார்.

"உங்கள் தொழில்?"

"படகுகாரன், கமிஷனர் சார். செமை படகான 'அழகிய நிவேர்னேஸ்' படகின் சொந்தக்காரன். அருமையான ஆட்கள் அதில் வேலை செய்கிறார்கள். ஆகா! பேர் பெற்ற தொழிலாளிகள்! மரி பாலத்திலிருந்து கிளாம்சி வரையுள்ள டோல்கேட் காரர்களைக் கேட்டுப் பாருங்களேன். கிளாம்சி தெரியுமா உங்களுக்கு, கமிஷனர் சார்?"

சுற்றி நின்றவர்கள் புன்முறுவல் பூத்தார்கள். லுவோ தொடர்ந்தார், தெளிவு குறைவாய், சொற்களின் பகுதிகளை விழுங்கியவாறு:

"கவர்ச்சியான இடம் ஆயிற்றே, கிளாம்சி! வழி முழுக்க மரம். அழகான மரம். வேலைக்கு ஆகிற மரம். எல்லாத் தச்சர்களுக்கும் தெரியும். அங்கே தான் எனக்கு வேண்டிய மரம் வாங்குவேன். ஹா! ஹா! தேர்ந்தெடுப்பதிலே நான் சூரன். என் பார்வை அப்படி, என்ன? நான் பலசாலி என்று அர்த்தமல்ல. நிச்சயமாய் நான் பருந்தல்ல, என் பெண்டாட்டி சொல்வது போல. ஆனால், பாருங்க, பார்வை போதும். எப்படின்னா, உங்களைப் போலத் தடியான- மரியாதைக் குறைவு என்று நினைக்காதீர்கள், கமிஷனர் சார்- ஒரு மரத்தைப் பார்க்கிறேன். ஒரு கயிற்றால் அதைச் சுற்றுகிறேன், இப்படி....."

காவலரை யணைத்துத் தம் பையிலிருந்து எடுத்த கயிற்றால் சுற்றினார். காவலர் விடுபட முயன்றார்:

"விடுய்யா, என்னை!"

"விட்டுடறேன், விட்டுடறேன், கமிஷனர் சாருக்குக் காட்டுவதற்குத் தான். இப்படிச் சுற்றுகிறேனா, அளந்த உடனே பெருக்குகிறேன், பெருக்குகிறேன்........எதால் பெருக்குகிறேன் என்று நினைவில்லை. என் பெண்சாதிக்குத் தான் கணக்கு தெரியும். நல்ல மண்டை என் வீட்டுக்காரிக்கு".

கூட்டம் மிகச் சுவைத்து ரசித்துக் கொண்டிருந்தது. கமிஷனரும் புன்சிரித்தார். கலகலப்பு சிறிது அடங்கியதும் கேட்டார்:

"இந்தப் பிள்ளையை என்னவாக ஆக்குவீர்கள்?"

"பணக்காரன் ஆக்கமாட்டேன் நிச்சயமாக. என் வம்சத்தில் பணக்காரர்கள் இருந்ததேயில்லை. படகுகாரன் ஆக்குவேன், ஒரு நல்ல படகுகாரன், மற்ற பிள்ளைகளைப் போல."

"உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?"

"நன்றாய்க் கேட்டீர்கள்! இவனைச் சேர்த்து நாலு ஆகும். ஆகட்டுமே! மூன்று பேர்க்கு உண்டு என்றால் நான்கு பேருக்கு உண்டு. கொஞ்சம் அமுக்கும். பெல்ட்டை இறுக்கிக் கொள்வேன்; மரத்தைக் கூடுதல் விலைக்கு விற்க முயல்வேன்."

சுற்றியிருந்தவர்கள் மீது திருப்தி நிறைந்த பார்வையைப் படரவிட்டபடி, அவர் சிரித்த பெருஞ் சிரிப்பில் காது வளையங்கள் ஆடின. தடிமனான ஒரு ரிஜிஸ்டரை அவருக்கு எதிரில் தள்ளினார் கமிஷனர்.

எழுதத் தெரியாமையால் அடிப்பக்கத்தில் பெருக்கல் குறியிட்டார்.

அவரிடம் குழந்தையைக் கமிஷனர் ஒப்படைத்தார்:

"அழைத்துப் போங்கள், பிரான்சுவா லுவோ. நல்லபடி வளருங்கள். இவனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் உங்களுக்குத் தெரிவிப்பேன். நீங்கள் நல்ல மனிதராகத் தெரிகிறீர்கள். உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எப்போதும் போல் பெண்சாதிக்குக் கீழ்ப்படியுங்கள். போய் வாருங்கள்! வெள்ளை ஒயினை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதீர்கள்"

Friday 23 December 2011

மலரும் 'பள்ளி நினைவு'


எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், மாதா பிதா குரு தெய்வம் என்றும் ஆசிரியர்களைப் போற்றுவது நம் மரபு. ஆசிரியர் என்பதற்கு (ஆசு+இரியர்) குற்றங்களைபவர் என்று பொருள். நமக்கு அறிவூட்டி, நல்லொழுக்க வழி காட்டி, குணங் கண்டவிடத்து ஊக்கியும் பாராட்டியும், குற்றமுண்டாயின் கண்டித்தும் தண்டித்தும் நம்மை உருவாக்கிய நல்லாசிரியர்களை மறக்கவே கூடாது.

நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிற ஆசிரியர்களுள் இரண்டாம் வகுப்பில் போதித்த மரியாதைக்குரிய சுப்பிரமணிய அய்யர் ஒருவர். கட்டுக்குடுமியும் கடுக்கனும் கோட்டும் பஞ்சக்கச்சமுமாய் அவரது தோற்றமென் மனக்கண்ணில் தெளிவாகக் காட்சியளிக்கிறது.

வகுப்பில் எழுதுவதற்காக (class work) 40 பக்க நோட் ஒன்றை ஒவ்வொருவரும் அவரிடம் கொடுத்திருந்தோம். எழுதி முடித்த பின்பு வாங்கி வைத்துக் கொள்வார். ஒருநாள் சுவடிகளை அவர் வழங்கியதும் அவரவரும் தேதியைக் குறித்துக்கொண்டிருந்த போது ஓங்கி ஒலித்ததே ஒரு குரல்!

"சார், என் நோட்டில் ஒரு தாள் குறையுது!"

அவ்வளவுதான்! தாள் எண்ணுவதில் அனைவரும் மும்முரமாய் ஈடுபட்டோம். என்ன வியப்பு! ஒரு தாளைக் காணோம்!

"எனக்குங் குறையுது! எனக்குங் குறையுது!" அடுத்தடுத்து ஓலம்!

அப்புறம்? ஆசிரியர் என்ன பதில் சொன்னார்? எவ்வாறு மாணவர்கள் சமாதானம் அடைந்தோம்? நினைவில்லை.

ஆசிரியரின் மகன் வாசுதேவன் எங்களுடன் படித்தான்.

(அவன் பெயரை யாருஞ் சொல்லக்கூடாது, தம்பியென்றுதான் அழைக்க வேண்டும் எனத் தொடக்கத்திலேயே ஆசிரியர் கட்டளையிட்டிருந்தார்.)

ஒருநாள் தற்செயலாய் அவனது சுவடியைப் பார்த்தபோது தாள் வேறுபாட்டைக் கவனித்தேன். பளிச்சென்று வெள்ளைத்தாள், நிறம் மங்கிய பழுப்புத்தாள், மார்ஜின் போட்டது, போடாதது, வரிகளுக்கிடையே வெவ்வேறு அகலம் எனக் கலந்துகட்டி!

என் மூளைக்கு அப்போது விளங்கவில்லை, அந்தத் தாள்களுக்கும் எங்களுக்கும் இருந்த உறவு. மேலும் வளர்ந்த பின்புதான் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபொழுது புரிந்துகொண்டேன். சுவடிகளிலிருந்து ஒவ்வொரு தாளை எடுத்து மகனுக்கு நோட் தைத்துத் தந்திருக்கிறார்.

சுவடிகளை வீட்டிற்கு எடுத்துப் போய் நூலை அறுத்துவிட்டு ஒரு தாளை உருவி மீண்டும் தைத்து! எவ்வளவு மெனக்கெட்ட வேலை! அவரே செய்தாரா அல்லது மனைவியை ஏவினாரா?

ஒரு சின்னஞ் சிறுவனுக்குத் தாளை எண்ணிப் பார்க்கவேண்டும் என்ற கெட்டிக்காரத்தனம் இருந்ததை எப்போது நினைத்தாலும் வியக்கிறேன். ஆசிரியரிடம் புகார் செய்ய அவனுக்கு எவ்வளவு துணிச்சலும் இருந்திருக்க வேண்டும்!

(அப்போதெல்லாம் ஆசிரியரிடம் பேசவே அச்சம்)


(நிலாச்சாரலில் "ஆசிரியரே, ஆசிரியரே" என்ற தலைப்பில் 30-11-09 இல் வெளியான என் கட்டுரை.)