Sunday 18 December 2011

மறு பிறவி



அப்பா, அப்பா, நலமா அப்பா?” என்று பாசத்தோடு கேட்டுக்கொண்டே நுழைந்த இளைஞனை முனிசாமி வியப்புடன் நோக்கினார்.


அம்மா எங்கே அப்பா?” அவனது அடுத்த கேள்வி.

திகைத்து நின்ற அவர் சுதாரித்துக் கொண்டு, யாரப்பா நீ? என்று திருப்பிக் கேட்டார்.

என்னை அடையாளம் தெரியாதுதான். நாந்தான் ஒங்க மாரியப்பன்

நீ என்னா சொல்லுறே?”

எட்டு வயசுலே செத்துப்போன ஒங்க மவன் நான் தான்.

என்ன்ன்னாது?”

ஆமாம் அப்பா. நாந்தான் மாரியப்பன். நான் இறந்த பின்பு கொல்கத்தாவிலே கனகசபை இங்கிற தமிழருக்குப் பிள்ளையாய்ப் பிறந்து இவ்வளவு காலம் அவரோட குடும்பத்திலே ஒருத்தனாய் வாழ்ந்தேன். அங்க ஒட்டி வாழ என்னாலே முடியாமலே இருந்தது.

திடீரென்று ஒரு நாள் ஒங்களைப் பத்தி நெனைப்பு வந்துது.அதைத் தொடர்ந்து என் போன பொறப்புப் பத்தின எல்லா வெவரமும் சினிமாவுலே பாக்கிறாப் போல என் மனக் கண்ணில் தெரிஞ்சது. ஏதோ ஒரு சக்தி ஒங்களை நோக்கி என்னை இழுத்துக்கிட்யே இருந்தது. இதோ ஓடி வந்துட்டேன்.

முனிசாமியால் தம் காதுகளை நம்ப முடியவில்லை. இறந்துபோன ஒரே மகன் திரும்ப வருவதா? அப்போது நுழைந்த மீனாட்சியைப் பார்த்தான் இளைஞன்.

இதோ அம்மா வர்ராங்களெ! நலமா அம்மா? நான் ஒங்க மவம்மா

யாருங்க இது?”

நம்ம மவன் இங்கிறாரு.மாரியப்பனோட மறு பொறப்பாம். எனக்கொண்ணும் புரியலே

அம்மா, அப்பா, சத்தியமா சொல்றேன்.நீங்க தெனம் கும்பிடுற முருகன்மேலே ஆணையாச் சொல்றேன்.நான் போன பொறப்பிலே மாரியப்பந்தான்.அம்மாவோடே ஆத்துக்குக் குளிக்கப் போனப்ப தண்ணியிலே மூழ்கிட்டேனே! மாரிக்கண்ணு, மாரிக்கண்ணு இன்னு செல்லமாக் கூப்பிடுவீங்களே! வெள்ளிக் கிண்ணத்திலே சோறு ஊட்டுவீங்களே!நம்ப ஊர்த் திரு விழாவிலே ஒரு தடவை காணாமப் போய் அப்புறமா ஆப்பிடலையா? அதெல்லாம் எனக்கு இப்ப நடந்தாப்பிலே இருக்கு.நான் பொறந்த அன்னைக்கு நம்ப தோட்டத்திலே நீங்க ஊணினதாச் சொன்ன தென்னங் கண்ணு இப்ப பலன் தருதா அம்மா?

இவ்வளவு சரியாய் விவரங்கள் சொல்கிற இவன் மாரியப்பன் அல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?

ராமசாமி, போய் உடனே அய்யரைக் கூட்டிக்கிட்டு வாமுனிசாமி வேலையாளை ஏவினார்.

என்னா, பிள்ளைவாள்! மகன் வந்திருக்கிறானாமே?”

ஆமாங்க. இந்தப் புள்ளையாண்டான் மாரியப்பனோட மறு பொறப்பு இங்குது.பழைய கதையை எல்லாம் ஞாபகமா சொல்லுது.எனக்கு ஒரே அதிசயமா இருக்கு.அதான் ஒங்களைக் கூட்டியாரச் சொன்னேன்.

பிள்ளைவாள்! மறு ஜன்மம் இங்கிறது நெஜம்.நாம எத்தனையோ ஜன்மம் எடுக்கிறோம். ஒரு ஜன்மத்திலே செய்யிற பாவ புண்ணியத்தோட பலனை அடுத்த ஜன்மத்தில அனுபவிக்கிறோம். இதெல்லாம் சாஸ்திரத்திலே இருக்குது. சாஸ்திரத்தை நம்பாதவா நாஸ்த்திகாள். அவா நரகத்துக்குப் போறது சர்வ நிச்சயம். எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் இன்னு பெரியவா பாடி இருக்கா. ஜன்மம் வாணாம், ஜன்மம் வாணாம் இன்னு பெரிய பக்தா எல்லாரும் ஈஸ்வரனை வேண்டிண்டிருக்காளோல்லியோ? ஆகச்சே இந்தப் பையன் போன ஜன்மத்தில ஒங்க மவனா இருந்திருக்கலாம்

அது சரிங்க. ஆனால் போன பொறப்பு எப்படிங்க ஞாபகத்துக்கு வரும்?”

கோடியிலே ஒருத்தருக்கு அப்படி வர்ரதுண்டு. ஈஸ்வர லீலையை யாராலே புரிஞ்சுண்டிட முடியும்? பத்திரிகையிலே இது மாதிரி அடிக்கடி சேதி வருமே! நீர் பாத்ததில்லியோ?”

இல்லீங்க. அதான் எனக்கு ஒரே கொழப்பம்.அதை நீங்க தீத்து வைப்பீங்க இன்னு நெனைச்சுத்தான் ஒங்களைக் கூட்டியாரச் சொன்னேன்.

சரி. தீத்துடரேன். ஏண்டாப்பா, நான் கேக்கிறதுக்குப் பதில் சொல்லு பாப்போம்.ஆறு வயசுலே ஒனக்கு ஒரு விபத்து நடந்துச்சு. அது என்னா?

ஒரு சைக்கிள் என்னை மோதித் தள்ளிடுச்சி.என் நெத்தியிலே காயம் பட்டுச்சு.

சின்ன வயசுலே ஒனக்குப் புடிச்ச தின்பண்டம் என்னா?”

பல்லி மிட்டாய்

ஒன் கூடச் சேந்து விளையாடினவா யார் யாரு?”

அது நெனப்பில்லெ

இந்த ஆத்திலே இன்னம் யார் யார் இருந்தா?”

பாட்டி பர்வதத்தம்மா, பெரியப்பா மாசானம்

"பிள்ளைவாள், சந்தேகமே இல்லை.ஒங்க மகன் ஒங்க கிட்டே வந்துட்டான். நீர் மகா அதிர்ஷ்டசாலி. ஒங்க பெருஞ் சொத்துக்கு இருந்த ஒரே வாரிசு போயிடுத்தேன்னு நீர் பட்ட கஷ்டம் நிவாரணம் ஆயிடுத்து. எல்லாம் கடவுள் கிருபை. நூறு பிராமணாளுக்குப் பந்தி போஜனம் போடும்”.

முனிசாமி அவ்வாறே செய்தார். மகன் மீண்டு வந்ததைப் பெரிய விழா எடுத்துக் கொண்டாடினார். இதை விடப் பெரிய பேறு என்ன இருக்கமுடியும்?அதிசயம் அற்புதம் என்றெல்லாம் நாளேடுகளும் கல்லீரல் கனைக்கிறதுமுதலிய வார ஏடுகளும் படங்கள் பிரசுரித்துச் செயதிகளுங் கட்டுரைகளும் வெளியிட்டன.

சில நாள் இன்பமாகக் கடந்தன, ஒரு நாள் அதிகாலை மாரியப்பனைக் காணோம். 75 பவுன் நகையும் ஒரு வீடு வாங்க வங்கியிலிருந்து எடுத்து வைத்திருந்த பணத்தையும் காணோம். காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. ஆளும் அகப்படவில்லை, அவன் அடித்துச் சென்றதும் கிடைக்கவில்லை.

மலேசியாவில் மாசானத்துடன் வேலை பார்த்தவன் நாச்சிமுத்து. அவர் மூலமாய் முனிசாமியின் குடும்ப விவரங்களை தெர்ந்திருந்ததுடன் குடும்பத்தாரி ஒளிப் படங்களையும் பார்த்திருந்தான்.


மறு பிறவி பற்றிய நம்பிக்கையைப் பயன்படுத்தி இப் பிறவியில் தான் குபேரனாய் வாழ்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டுவிட்டான்.

இப்போதெல்லாம் போன பிறவி பற்றிப் பேச்செடுத்தால் முனிசாமிக்கு வருகிற கோபத்தை பார்க்கவேண்டுமே!

1 comment:

  1. மூடநம்பிக்கைக்கு நல்ல பாடம். இனியாவது இதைப்போன்ற நம்பிக்கைகளுக்கு இடம் கொடாமல் இருப்பார்களா அந்த அனுபவப்பட்டவர்கள் என்றால் அது சந்தேகமே. நல்ல கதை. பாராட்டுகள்..

    ReplyDelete