Tuesday 20 December 2011

வால்மீன்கள்



மின் என்ற பகுதியிலிருந்து உருவாகிற சொற்கள் மின்னல், மின்னுதல், மின்மினி, மின்சாரம், மினுக்குதல், (மேனி) மினுக்கி,மீன்.

நடசத்திரத்தை விண்மீன் என்கிறோம். அவ்வப்போது வானில் தோன்றிச் சில நாள் கழித்து மறைவது வால்மீன். வட மொழியில் தூமகேது. பழந் தமிழில் தூமம், புகைக்கொடி.

வால்மீன் பற்றிய சில விவரங்களைக் கீழே காணலாம்:

எல்லா விண்மீன்களும் நீள்வட்டப் பாதையில் ஞாயிற்றைச் சுற்றுகின்றன. அவற்றின் வேகம் கற்பனைக்கு எட்டாதது. மிகப் பெரும்பாலானவை வெற்றுக் கண்களுக்குத் தெரிவதில்லை.

எவ்வளவு காலத்துக்குப் பின் திரும்பிவரும் என்று ஏறக்குறைய 40 விண்மீன்கள் பற்றிக் கணக்கிட்டிருக்கிறார்கள். 3 ஆண்டுக்கு ஒரு முறை வரும் விண்மீனும் உண்டு. 164 ஆண்டுக்கு ஒரு முறை வருகிற விண்மீனும் இருக்கிறது. அந்த 40இல் ஒன்று ஹாலி விண்மீன்.

இது 1986 ஜூனில் தெரிந்தது. உங்களுள் சிலராவது பார்த்துக் களித்திருக்கலாம்.

வால்மீன்களில் தலை என ஒரு பகுதி உண்டு. இது பனிக்கட்டியும் தூசும் கலந்த கலவை. சூரியனை நெருங்க நெருங்கப் பனிக்கட்டி உருகி வாயு ஆகி சூரியனின் கதிர்களால் எதிர்ப்புறம் தள்ளப்பட்டு நீளமான வாலாக மாறுகிறது.

வெற்றுக் கண்களுக்கு வால்மீனின் தலையும் வாலும் மட்டுமே தெரியும். தொலை நோக்கி மூலம் நோக்கினால் 3 பகுதிகள் தெரியுமாம்; தலை, கரு, வால். தலையின் நடுப் பகுதி கரு எனப்படுகிறது. அது சில சமயம் இரண்டாகவோ பலவாகவோ பிளவுபடலாம்.

1744 இல் காணப்பட்ட செஜோக்ஸ் ( Chezeaux ) வால்மீனுக்கு 6 வால் இருந்தன. அவை பகலிலும் தெரிந்தன. 1843 இல் புலப்பட்ட ஒரு வால்மீனின் வால் அகலக் குறைவான நாடா ஒன்றைப் போல் 32 கி.மீ. தொலைவு நீண்டிருந்தது.இதைவிட அதிக நீளமான வால் வேறு மீனுக்கு இருந்ததில்லை.

ஞாயிற்றைச் சுற்றிப் பல தடவை பயணம் செய்தபின் வால்மீன்கள் அழிந்துபோகின்றன. சூரியனின் ஈர்ப்பாற்றலால் தலையின் ஒரு பகுதி தனியாய்ப் பிரிந்து போகிறது. நாளடைவில் அத் தலை பல்வேறு சிறு சிறு பாகங்களாய்ச் சிதைந்து வான் பாதையில் தொடர்ந்து சுற்றுகிறது. அவை காற்று மண்டலத்தில் நுழையும்போது எரிமீன் எனப்படும். ஆகஸ்டு 9, 10, 11 ஆம் நாளிரவில் பெர்சியூஸ் ( perseus ) என்னும் விண்மீன் கூட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான எரிமீன்கள் மழை போலப் பொழியும். நவம்பர் இரவுகளில் சிங்க விண்மீன் குழுவிலிருந்து அவை வீழும். அவை சிங்கமுக எரிமீன்கள் எனப்படுகின்றன. 1866இல் தெரிந்த டெம்பல் (tempel) வால்மீனின் சிதைவுகள் இவை; முன் சொன்னவை 1862 இல் தோன்றிய ஒரு பெரிய வால்மீனின் மிச்ச சொச்சங்கள். இந்த இரு வால்மீன்களும் மறுபடி வரவில்லை.

ஜெமினிட் மீன்மழை 13-12-10 இரவில் கீழ் வானில் பெய்யும் என நாளேட்டில் செய்தி வந்தது. மேக மூட்டத்தால் நான் அதைப் பார்க்க இயலவில்லை. இது வால்மீன் அல்ல. 3200 ஃபேட்டான் (phaeton) என்று பெயரிடப்பட்டுள்ள சின்னஞ் சிறிய கோளின் சிதைவாகிய இது ஜெமினி (மிதுனம்)யிலிருந்து புறப்படுவதாகத் தோன்றுவதால் ஜெமினிட் எனப் பெயர்.

( பெரும்பாலான தகவல்கள் ஒரு பிரஞ்சு நூலிலிருந்து திரட்டியவை)

1 comment:

  1. வால்மீன்கள் பற்றி அறிந்திராத பல புதியத் தகவல்களை அறியத்தந்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete