Friday 14 December 2012

சங்கச் சான்றோர்


 மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்கப் புலவர்களுள் சிலர்,  தேவைப்பட்டபோது அவர்களுக்குத் தக்க அறிவுரை புகன்று நன்னெறியில் செலுத்தினர் என்பது புற நானூற்றால் தெரிகிறது.  

1 - உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை குறித்துச் சிந்தித்த குடபுலவியனார் அதற்கு அடிப்படை நில வளம்நீர் வளம் என்பதை ஓர்ந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் கூறினார்:
 
 

நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்; நீரையும் நிலத்தையும் ஒன்றாய்க் கூட்டியவர்கள் குடிமக்களின் உடலையும் உயிரையும் காத்தவர் ஆவார்கள். மழையை  எதிர்பார்க்கும் புன்செய் எவ்வளவு அகன்றதாயினும் முயற்சிக்குத் தக்க பலன் தராது. ஆதலால் மழைநீர், ஆற்றுநீரைக் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுதையும் வளப்படுத்து. இவ்வாறு  செய்த வேந்தர்கள் உலக இன்பமும் நிலைத்த புகழும் எய்துவார்கள்; செய்யாதார் அவற்றைப் பெறார்.
 
 
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
( பா 18 ). 

2 - பிசிராந்தையார் பற்றிப் பலரும் அறிந்திருப்பர். பாண்டியன் அறிவுடைநம்பி வரி வசூலிப்பதற்கு உரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட பிசிராந்தையார் அவனிடம், "அரசனொருவன் அறிவுள்ளவனாய் ஏற்ற வழியில் வரி வாங்கினால் பெரிய அளவில் பொருள் சேரும்; மக்களும் மேம்படுவார்கள்" என்று சொல்லி அதை விளக்குவதற்கு அருமையான எடுத்துக்காட்டும் தந்தார்:
 

" முற்றிய நெல்லை அறுவடை செய்து கவளங் கவளமாய் யானைக்கு ஊட்டினால் ஒரு மாவுக்கும் குறைந்த வயலின் விளைச்சலாயினும் பல நாளுக்கு வரும்மாறாக நூறு வேலி நிலமானாலும் தானே போய் மேயும்படி அதை விட்டால் அதன் வாயில் நுழையும் உணவைவிடக் காலால் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்" என்பது அந்தக் காட்டு.
 
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும், பன் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
 ( புறம் 184 ) 

சங்கப் புலவர்கள் நல்லமைச்சர்போல் மன்னர்களை அறவழியில் செலுத்தியமைக்கு அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையே காரணம்;   நாட்டின் முன்னேற்றம் , மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால் அவர்களைச் சங்கச் சான்றோர் என அழைக்கிறோம்.
 
(படங்கள் உதவி; இணையம்)
 

Saturday 24 November 2012

ஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )

 

கைதியிடம், "இரு" எனச் சொல்லிவிட்டு தருய் அறைக்குப் போனார். வாயிலைக் கடந்தபோது எண்ணம் மாறி ரிவால்வரை எடுத்துத் தம் பையில் திணித்தார்; பின்பு திரும்பிப் பாராமல் அறைக்குள் நுழைந்தார்.

சோபாவில் நெடு நேரம் படுத்துக்கொண்டு வானம் கொஞ்சஞ் கொஞ்சமாய் மூடுவதையும் அமைதி நிலவுவதையும் கவனித்தார்.

அவர் எழுந்தபோது வகுப்பறையிலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அராபியர் ஓடியிருப்பார், எந்த முடிவும் செய்யத் தேவை இன்றி மீண்டும் தனிமையும் தாமுமாய் இருக்கப் போகிறோம் என்ற அந்த ஒரே எண்ணம் விளைவித்த மகிழ்ச்சி அவருக்கே வியப்பளித்தது. ஆனால் கைதி அங்கே இருந்தார். "வா" என்றார் தருய். அராபியர் பின்தொடர்ந்தார்.அறையில் ஒரு நாற்காலியை ஆசிரியர் அவருக்குக் காட்டினார் . அராபியர் அமர்ந்தார்.

- பசிக்கிறதா?

- ஆமாம்.

தருய் கேக் செய்து ஆம்லெட்டும் தயாரித்தார். பையில் இருந்த ரிவால்வரில் கை இடித்தது. வகுப்பறை போய் மேசையின் இழுப்பறையில் வைத்துவிட்டு வந்தார்.

இரவு கவிந்தது. விளக்கு ஏறிவிட்டுப் பரிமாறினார்.

- சாப்பிடு .

- நீ?

- உனக்குப் பின்பு சாப்பிடுவேன்.

உண்டதற்கு அப்புறம் கேட்டார்:

- நீயா நீதிபதி?

- இல்லை; நாளைவரை உன்னைக் காக்கிறேன். ஏன் அவனைக் கொன்றாய்?

- அவன் ஓடினான்; நானும் பின்னால் ஓடினேன். இப்போது என்னை என்ன செய்யப்போகிறார்கள்?

- பயப்படுகிறாயா? கழிவிரக்கம் கொள்கிறாயா?

அராபியர் ஆசிரியரை நோக்கினார்; அவருக்குப் புரியவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது.

தருய் ஒரு மடக்குக் கட்டிலை விரித்து," படுத்துக்கொள். இது உன் கட்டில்" என்றார்.

- பட்டாளத்தார் நாளை வருவாரா?

- தெரியாது.

- எங்களுடன் நீ வருகிறாயா?

- தெரியாது; ஏன்?

- எங்களுடன் வா.

நள்ளிரவு ஆகியும் தருய் தூங்கவில்லை. முன்னமே கட்டிலில் படுத்துவிட்டார். தயக்கமாய் இருந்தது: தாக்குதலுக்கு ஆளாகலாம் என உணர்ந்தார். பின்பு தோள்களைக் குலுக்கிக்கொண்டார். விளக்கை அணைத்தபோது இருள் உடனடியாய் இறுகினாற்போல் தோன்றிற்று.

கொஞ்ச நேரத்துக்குப் பின் அராபியர் லேசாய் அசைந்தபோது ஆசிரியர் விழித்துத்தான் இருந்தார் . கைதியின் இரண்டாம் அசைவு கண்டு எச்சரிக்கை கொண்டார். அவர் மெதுவாய் எழுந்து சிறிதுஞ் சந்தடி செய்யாமல் கதவை நோக்கி நடந்து தாழ்ப்பாளை ஓசையின்றி நீக்கித் திறந்து வெளியேறினார்.

"நழுவுகிறான், சங்கடம் தீர்ந்தது" என்று தருய் நினைத்தார். சிறிது நேரத்தில் அராபியர் உள்ளே வந்து கவனமாய்க் கதவைச் சாத்திவிட்டு ஓசையின்றிப் படுத்துக்கொண்டார். அப்போது தருய் மறுபக்கம் திரும்பி உறங்கினார்.

பின்பும் ஒரு தடவை ஆழ்ந்த தூக்கத்தினிடையே பள்ளியைச் சுற்றித் திருட்டுத்தனமான காலடி ஒலிகள் கேட்டதாய்த் தோன்றிற்று. "கனவு, கனவு" எனச் சொல்லிக்கொண்டே தூங்கினார்.

விழித்தபோது வானம் தெளிந்திருந்தது. இருவரும் ரொட்டி தின்று காப்பி பருகினர்.

ஆசிரியர் வெளியில் போனார். நீல வானில் சூரியன் ஏறியிருந்தான். அராபியரின் முட்டாள்தனமான குற்றம் அவருக்கு வெறுப்பூட்டியது; ஆனால் அவரை ஒப்படைப்பது தம் கெளரவத்துக்குப் பாதகம். அராபியரைத் தம்மிடம் அனுப்பிய தம்மவரையும் கொல்லத் துணிந்த ஆனால் தப்பியோட அறியா இந்த ஆளையும் ஒரே சமயத்தில் சபித்தார். பள்ளியுள் நுழைந்தார். அறைக்குள் சென்று ரஸ்க் ரொட்டி, பேரீச்சை, சீனி ஆகியவற்றை ஒரு பார்சலாக்கினார். இருவரும் வெளியேறும் முன்பு, ஆசிரியர் வகுப்பறையில் மேசைக்கெதிரில் ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு வாயிலைத் தாண்டிக் கதவைப் பூட்டினார்.

"இந்தப் பக்கமாய்" என்று சொல்லிக் கிழக்கு நோக்கி நடந்தார், கைதி பின்தொடர. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது இளைப்பாறி மேலும் ஒரு மணி நேரம் நடந்தனர். தருய் பார்சலை அராபியரிடம் அளித்தார்: "எடுத்துக்கொள்; பேரீச்சை, ரொட்டி இருக்கிறது; இரண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கலாம். இதோ ஆயிரம் பிரானும்" அராபியர் பெற்றுக்கொண்டார்.

கிழக்குத் திக்கைக் காட்டி ஆசிரியர் கூறினார்: "இதுதான் தைங்கித்துக்குப் போகிற பாதை. இரண்டு மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அங்கே அரசும் காவல்துறையும் உனக்காகக் காத்திருப்பார்கள்."

அவரைத் தெற்கு நோக்கித் திருப்பி, "அதோ அது பீடபூமியைக் கடக்கும் அடிச்சுவடு. ஒரு நாள் நடந்தபின் நாடோடிகளைக் காண்பாய்; அவர்கள் உன்னை வரவேற்று அவர்களின் சட்டப்படி உனக்குப் புகலிடம் அளிப்பார்கள்" என்றார்.

அராபியர் தருய் பக்கம் திரும்பினார் முகத்தில் ஒருவித பீதி படர்ந்தது . " நான் சொல்வதைக் கேள் " என்றார் .

தருய் தலையை ஆட்டி, " வேண்டாம், ஒன்றுஞ் சொல்லாதே . இப்போது உன்னைவிட்டு நான் போகிறேன்" எனக் கூறிவிட்டுப் பள்ளியை நோக்கி இரண்டு பெரிய அடி வைத்து அசையாமல் நின்றிருந்த அராபியரைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டுப் புறப்பட்டார். நீண்ட தொலைவுக்குப் பின்தான் திரும்பிப் பார்த்தார்.குன்றின்மீது யாருமில்லை; தருய் தயங்கினார்; திரும்பி வந்தார். சிறைக்குப் போகுஞ் சாலையில் மெதுவாய் நடந்துகொண்டிருந்த அராபியரைக் கனத்த இதயத்துடன் கண்டார்.

பிற்பாடு பள்ளிச் சன்னலின் எதிரே நின்றபடி வானின் உச்சியிலிருந்து பீடபூமியின் முழுப் பரப்பிலும் வீழ்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தை மேலோட்டமாய்ப் பார்த்தார். அவருக்குப் பின்புறம் கரும்பலகையில் , பிரஞ்சு ஆறுகளின் வளைவுகளுக்கு இடையே, திறமை குறைந்த கையொன்றால் எழுதப்பெற்றிருந்தது ஒரு சுண்ணக்கட்டி வாசகம்:

"எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய்; விலை கொடுப்பாய்"

அதைச் சற்று முன்தான் தருய் வாசித்திருந்தார்.

(முற்றும்) 

Friday 9 November 2012

ஒரு கைதியின் பயணம்

 


Albeert Camus - அல்பேர் கமுய் -1913 / 1960 - இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ( 1957 ).

பிரான்சின் காலனியாய் இருந்த அல்ஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். பத்து ஆண்டுக்குமேல் நீடித்த போராட்டத்தின் விளைவாய் அந்நாடு விடுதலை அடைந்தது.

அவர் 1957 இல் இயற்றிய ஒரு சிறுகதை "விருந்தாளி" என்ற தலைப்புடையது; இதை நான் பிரஞ்சிலிருந்து மொழிபெயர்த்தேன். முழுப் பெயர்ப்பும் 2012 ஆகஸ்ட் மாத "மஞ்சரி" இதழில், "ஒரு கைதியின் பயணம்" என்னும் தலைப்பில் வெளிவந்தது. சுருக்கமான பெயர்ப்பை மன்றத்தில் பதிகிறேன்.

கதை அல்ஜீரியாவில் நிகழ்கிறது.



இருவரும் தம்மை நோக்கி ஏறி வருவதை ஆசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார்: குதிரை மீது ஒருவர், கால்நடையாய் மற்றவர். குன்றின் ஓர் ஓரத்தில் கட்டியிருந்த பள்ளிக்கூடத்துக்கு இட்டுச் செல்லும் பாதையை அவர்கள் இன்னம் அடையவில்லை. உயரமான மற்றும் வறண்ட அந்தப் பரந்த பீடபூமியில் இருந்த கற்களின் இடையே, பனித்தரையில், அவர்கள் சிரமத்துடன் மெதுவாய் முன்னேறினார்கள்.

பகல் இரண்டு மணி. காலை இப்போதுதான் தொடங்குகிறது என்று சொல்லலாம்போல் இருந்தது. ஒரே குளிர்! கம்பளிச் சட்டையை எடுக்கப் பள்ளிக்குள் நுழைந்தார். காலியாயும் சில்லெனவும் இருந்த வகுப்பறையைக் கடந்தார். கரும்பலகையில் வெவ்வேறு நிறச் சுண்ணக் கட்டிகளால் வரைந்த பிரான்சின் ஆறுகள் நான்கும் கழிமுகம் நோக்கி மூன்று நாளாய் ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாத வறட்சிக்குப் பின்பு, இடையில் பெய்யவேண்டிய மழை பொய்த்து, அக்டோபர் பாதியில் பனி கடுமையாய்ப் பொழிந்தது. பீடபூமியில் சிதறிக் கிடந்த சிற்றூர்களின் இருபது மாணவர்களும் நின்றுவிட்டார்கள்.

வகுப்பறைக்குப் பக்கத்திலிருந்த தமது ஒற்றையறை வசிப்பிடத்தை மட்டும் சூடேற்றிவிட்டு தருய் வெளியே வந்தார். இருவரும் பாதி ஏறிவிட்டனர். தாம் நெடுங்காலமாய் அறிந்திருந்த முதிய பட்டாளத்தார் பல்துய்க்சிதான் குதிரை ஊர்கிறார் என அடையாளங் கண்டார். பல்துய்க்சி, தமக்குப் பின்னால், கைகள் கட்டப்பட்டுத் தலை குனிந்து நடந்த ஓர் அராபியரைப் பிணித்த கயிற்றைக் கையில் பற்றியிருந்தார்.

கூப்பிடு தொலைவில் வந்ததும் அவர் கத்தினார்: "ஒரு மணிநேரம் எல் அமரிலிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்துவர!"

அவர்கள் வந்ததும், தருய், "சலாம், உங்களைச் சூடுபடுத்திக்கொள்ள உள்ளே வாருங்கள்" என்றார்.

பல்துய்க்சி சோபாவிலும் அராபியர் கணப்பின் அருகே தரையிலும் உட்கார்ந்தனர்.

"புதினா டீ போட்டுத் தருவேன்" என்று ஆசிரியர் சொல்ல, பல்துய்க்சி, "நன்றி. என்ன மாதிரியான வேலை! சீக்கிரமே ஓய்வு பெற முடியும் என நினைக்கிறேன்" என்றார்.

அராபியர்க்கும் டீ கிளாசை நீட்டிய தருய், அவரது கைக்கட்டைப் பார்த்து, "அவிழ்த்துவிடலாம் என நினைக்கிறேன்" என்றதற்குப் பல்துய்க்சி, "நிச்சயமாக; பயணத்துக்குத்தான் அது" என்று பதில் சொன்னார்.

- சரி; இப்படி எங்கே போகிறீர்கள் நீங்கள்?

- இங்கே, மகனே.

- விந்தையான மாணவர்கள்! இங்கு இரவைக் கழிப்பீர்களா?

- இல்லை; நான் திரும்பிப் போகிறேன். நீ இந்த ஆளைத் தைங்கித்தில் ஒப்படைப்பாய்: அங்கே இவனுக்காகக் காத்திருப்பார்கள்.

- என்ன கதையிது? என்னைக் கிண்டல் பண்ணுகிறாயா?

- இல்லை, மகனே, கட்டளை.

- கட்டளையா? நான் என்ன...

தருய் தயங்கினார்; முதியவரின் மனத்தைச் சங்கடப்படுத்த அவர் விரும்பவில்லை. "இருக்கட்டும், இது என் வேலை அல்ல" என்று முடித்தார்.

- என்னது? இதற்கென்ன அர்த்தம்? போரில் எல்லா வேலையும் செய்யவேண்டும். கட்டளை போட்டிருக்கிறார்கள்; அது உன்னையும் கட்டுப்படுத்தும். எதுவோ நடப்பதாகத் தெரிகிறது. புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறார்கள்; ஒரு வகையில் பார்த்தால் நாம் அணிவகுப்பில் இருக்கிறோம்.

தருயின் எதிர்ப்பு முகபாவம் நீடித்தது.

பல்துய்க்சி கூறினார்: "கேள் மகனே, நான் உன்னை நேசிக்கிறேன். நீ புரிந்துகொள்ளவேண்டும். எல் அமரில் பெரிய பிரதேசமொன்றில் ரோந்துப்பணி ஆற்ற நாங்கள் ஒரு டஜன் பேர் இருக்கிறோம். நான் போகவேண்டும். இந்த வரிக்குதிரையை உன்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தாமதம் இல்லாமல் வந்துவிடும்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இவனை அங்கே வைத்திருக்க முடியவில்லை. கிராமம் கிளர்ச்சி செய்தது, இவனை மீட்க விரும்பினார்கள். நாளை பகலில் இவனைத் தைங்கித்துக்கு நீ அழைத்துப் போகவேண்டும். உன்னைப் போன்ற பலசாலிக்கு ஒரு இருபது கிலோமீட்டர் பயம் தராது. அப்புறம், எல்லாம் முடிந்துவிடும். உன் மாணவர்களையும் இன்ப வாழ்க்கையையும் நீ மறுபடி பெறுவாய்.

- இவன் என்னதான் செய்தான்?

பட்டாளத்தார் வாய் திறக்கும் முன்பே, "பிரஞ்சு பேசுகிறானா?" எனவும் தருய் வினவினார்.

- ஊகூம், ஒரு வார்தைகூட இல்லை. ஒரு மாதமாய்த் தேடினோம்; மறைத்து வைத்திருந்தார்கள். மச்சானைக் கொன்றுவிட்டான்.

- நமக்கு எதிரியா?

- நான் அப்படி நினைக்கவில்லை; ஆனால் உறுதியாக ஒருபோதும் சொல்லமுடியாது.

- ஏன் கொன்றான்?

- குடும்பத் தகராறு என்று நினைக்கிறேன்.

தருய் மீண்டும் டீ தந்தார்.

- நன்றி, அன்பனே. இப்போது நான் போகிறேன்.

பட்டாளத்தார் எழுந்து அராபியரை நோக்கிச் சென்றார், பையிலிருந்து ஒரு கயிற்றை இழுத்தபடி.

- என்ன செய்கிறாய்?

வெறுப்புடன் கேட்டார் ஆசிரியர்; வியப்புற்ற பல்துய்க்சி கயிற்றைக் காட்டினார்.

- தேவையில்லை.

பட்டாளத்தர் தயங்கினார்:

- உன் விருப்பம். ஆயுதம் வைத்திருக்கிறாய் அல்லவா?

- வேட்டைத் துப்பாக்கி இருக்கிறது.

- எங்கே?

- பெட்டியில்.

- கட்டிலருகே வைத்திருக்க வேண்டும்.

- ஏன்? நான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

- கிறுக்கனாய் இருக்கிறாய், மகனே. அவர்கள் கிளர்ந்தெழுந்தால் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. நம் எல்லாருக்கும் ஒரே கதி.

- நான் என்னைக் காத்துக்கொள்வேன். அவர்கள் வருவதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரம் இருக்கும்.

- உனக்கு நேரம் இருக்குமா? நல்லது; அதுதான் நான் சொன்னது; நீ எப்போதும் கொஞ்சம் கிறுக்காய்த்தான் இருந்திருக்கிறாய். அதற்காகவே எனக்கு உன்மேல் அதிக அன்பு; என் மகன் இப்படியிருந்தான்.

தம் ரிவால்வரை மேசைமீது வைத்து, "இதை எடுத்துக்கொள்; இங்கிருந்து எல் அமர் போக இரண்டு ஆயுதம் எனக்குத் தேவையில்லை" என்றார்.

- கேள், பல்துய்க்சி, இதெல்லாம் எனக்கு வெறுப்பூட்டுகிறது. இவனை ஒப்படைக்கமாட்டேன்.

- மடத்தனம். எனக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை ஒரு மனிதனைக் கயிற்றால் கட்டுவது. எத்தனையோ ஆண்டுகள் அப்படிச் செய்தும் பழகிப்போகவில்லை; சொல்லப்போனால், ஆமாம், வெட்கமாக இருக்கிறது; ஆனால் அவர்களை அவர்கள் போக்கில் விடமுடியாது.

- ஒப்படைக்க மாட்டேன்.

- இது உத்தரவு, மகனே, மீண்டும் சொல்கிறேன். நீ இப்போது தாளில் கையெழுத்து போடப்போகிறாய்.

தருய் கையொப்பம் இட்ட தாளைப் பட்டாளத்தார் கவனமுடன் மடித்துக் கைப்பையில் வைத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தார். "போய் வருகிறேன், மகனே" என்றார். அவருக்குப் பின்னால் கதவு மூடிற்று.
 

( தொடரும்)

Tuesday 2 October 2012

பக்கே ( Bacchae)


 

யூரிப்பிடீசின் தலைசிறந்த நாடகம் பக்கே என்கிறார்கள். வெள்ளையரின் பண்பாட்டு மாளிகைக்கான உறுதி வாய்ந்த அடித்தளங்களுள் ஒன்றாக இந்நாடகத்தைத் திறனிகள் மேற்கோள் காட்டுகின்றனர். 

இதில் ஆசிரியர்,
அளவு கடந்த பக்தி - வெறியாக மாறும்;
எல்லை தாண்டிய ஒழுங்கு - சமுதாயச் சர்வாதிகாரம் ஆகிவிடும்;
வரம்பு இழந்த கருத்துச் சுதந்தரம் - குழப்பம் விளைவிக்கும் 

என்று எடுத்துச் சொல்லி பக்திக்கும் பகுத்தறிவுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் கருத்துச் சுதந்தரத்துக்கும் சமநிலை தேவை என வற்புறுத்தியுள்ளாராம்.

 இக்கருத்துகளை நாகரிக உலகு நடைமுறைப்படுத்தக் காண்கிறோம். 

"அழகு என்றும் இன்பம்" என இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ள கருத்தை, 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ் தம் எண்டீமியான் ( Endymion ) என்னும் கவிதையின் முதலடியாக அமைத்துள்ளார். 

"அழகுப் பொருள் என்றும் இன்பம்" ( A thing of beauty is a joy for ever ) என்ற இந்த முதலடி ஆங்கில இலக்கிய உலகில் பெரிதும் பாராட்டப்படுகிறது. 

எண்டீமியான் கிரேக்கத் தொன்மத்தில் ஒரு பாத்திரம். இவனைத் தண்டிக்க எண்ணிய சீயஸ்இறப்பு அல்லது மீளா உறக்கம்இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கக் கட்டளை இட்டபோதுதூக்கத்தைத் தேர்ந்தான். 

நம் கும்பகர்ணன் நினைவுக்கு வருகிறான்: கடவுளிடம் நித்யம் (அழியாமை) என்னும் வரம் கோர விரும்பிய அவன் வாய் தவறி, நித்திரை என்று கேட்டுவிட்டானாம்.

திருமணத்தைப் பற்றி...


 

 
 
 
 திருமணம் என்பது ஒரு விசித்திரமான வட்டம். வெளியே இருப்பவர் உள்ளே நுழைய ஆர்வமாக இருக்கிறார்; உள் இருப்பவர் வெளிவர முடியாமல் தவிக்கிறார்.



 

பெண் நல்லவளோ கெட்டவளோ, கட்டாயம் திருமணம் செய்துகொள். நல்லவளாய் இருப்பின், வாழ்க்கை இன்ப மயம்; கெட்டவளாய் இருந்தால், நீ ஞானி ஆவாய்.
 
யாரோ சொன்னவை...
 

Saturday 22 September 2012

வள்ளல்கள்


 
 
பழங்காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் ஏழு பேர் என்ற பொருளில் கடையெழு வள்ளல்கள் என்கிறோம். ஆனால் அப்போது புலவர்களைப் புரந்த வேறு பலரும் சங்க இலக்கியங்களுள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
 

அவர்கள் கொண்கானங்கிழான், சிறுகுடி கிழான் பண்ணன், தோயன் மாறன், நல்லியக் கோடன், நன்னன் சேய் நன்னன், நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன், வல்லார் கிழான் பண்ணன் ஆகியோர்.
 

குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் ஏழு வள்ளல்களைப் பற்றி மட்டும் தம் பாவில் குறிப்பிட்டதால் கடையெழு வள்ளல் என்கிற தொடர் பிறந்தது. மற்ற வள்ளல்களை ஏன் அவர் சேர்க்கவில்லை? அந்த எழுவரை மாத்திரமே அவர் அறிந்திருக்கலாம்.

மீன் தருவதை விட ............


 

ஒருவருக்கு மீன் தருவதைக் காட்டிலும் அவருக்கு மீனைப் பிடிக்கக் கற்றுத் தருவது மேல் என்ற அறிவுரை கேள்விப்பட்டிருக்கிறோம். 

அதைச் சொன்னவர் கி. மு. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனத் தத்துவ அறிஞர் லாவோ ட்சு ( LAO TZU ).
 

அவர் கூறியது: 

" நீங்கள் ஒரு மனிதனுக்கு ஒரு மீனை ஈவது ஒரு நாளுணவை அளிப்பதாகும்; மீன் பிடிக்க அவனுக்குக் கற்றுத் தருதல் வாழ் நாள் முழுதும் உணவு வழங்குவதாகும்"

 

Sunday 16 September 2012

அருங்காட்சியகக் காட்சிகள்

ஐரோப்பியப் பயணத்தின்போது  எடுத்தப் புகைப்படங்கள் (தொடர்ச்சி)

லண்டனில் உள்ள மதாம் துஸே (Madame Tusseau)  மெழுகுக் காட்சியகக் காட்சிகள்.

 
 
 




பாரீஸ் லூவ்ரு அருங்காட்சியகக் காட்சிகள் கீழே:













 
 
 

Thursday 13 September 2012

பிரஸ்ஸல்ஸ் அரண்மனைத்தோட்ட மலர்க்காட்சி

2008 -ஆம் ஆண்டு மேற்கொண்ட ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்களைத் தொடர்ந்து பகிரவிருக்கிறேன்.


முதலில் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள அரண்மனைத் தோட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 











 
 
 
 
 
 























 

Monday 10 September 2012

உருவப் பொம்மை எரிப்பு


 

தமிழகத்து ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் உருவப் பொம்மை எரிப்பது உண்டு. அப்படி எரிப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பது எரிப்பவர்களுக்குத் தெரியுமா? ஐயம்தான்.
 
தாம் வெறுக்கிற ஒருவரை நேரடியாகத் துன்புறுத்துவதற்கு அஞ்சுகிற அல்லது  இயலாதவர்களுள் சிலர், அரை நூற்றாண்டுக்குமுன், மந்திரவாதியை அணுகினர்.
 
பணமும்  தகவலும் பெற்றுக்கொண்ட மந்திரவாதி ஒரு துணிப் பொம்மை செய்து தெய்வத்தின்முன்  வைத்து, மந்திரம் ஓதி, பூஜை செய்வார்.
 
பின்பு பொம்மையின்மீது சில இடங்களில் ஊசியால் குத்துவார். இது செய்வினை எனப்பட்டது. இதன் பயனாய்ப் பகைவர்  நோய்வாய்ப்பட்டுச் சங்கடப்படுவார் என்பது நம்பிக்கை.
 

பொம்மையை எரித்தால் அவர் இறந்தேவிடுவாராம். இப்போது மந்திரம் இல்லை ஆனால் செயல் நிகழ்கிறது, காரணம் தெரியாமலே.
 
(படம் உதவி ; இணையம்)

Monday 27 August 2012

முன்னோடி


 

பயன்பாட்டுக்குக் கார் வருவதற்கு முன்பு பெருஞ் செல்வர்களுக்கு இரட்டைமாட்டு வில் வண்டிகள் உதவின; அவர்கள் பயணிக்கையில், முன்புறமாய் ஒருவர், "ஐயாவோட வண்டி வருது" என அறிவித்துக்கொண்டு ஓடுவார்.  
பாதசாரிகள் ஓரமாய் ஒதுங்கி வழிவிடுவார்கள்; படுத்திருப்போர், அமர்ந்திருப்போர் மரியாதைக்கு அறிகுறியாக எழுந்து நிற்பார்கள். 

முன்னால் ஓடுபவரை முன்னோடி (முன் + ஓடி) என்றார்கள்; முன்னோடும்பிள்ளை என்பதுமுண்டு.  

இதற்கு இணையான ஆங்கிலச் சொல் ப்ரிக்கர்சர் (Precursor ). ப்ரி - முன்; கர்சர் - ஓடுபவர். Forerunner என்பதும் அப்பொருள் உடையது.

முன்னோடி என்னும் சொல் இன்று வேறு அர்த்தத்தில் வழங்குகிறது.  

அறவழிப் போராட்டத்துக்கு முன்னோடி காந்தி, தமிழ்ப் புதினத்துக்கு முன்னோடி பிரதாப முதலியார் சரித்திரம் என ஒரு துறையில் பிறர்க்கு / பிறவற்றுக்கு வழிகாட்டிகளை அச் சொல் குறிக்கிறது.
*******************************************************************

படம் உதவி ; இணையம்

Tuesday 21 August 2012

நாடகத் தமிழ்




இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழை மூவகைப்படுத்துகிறோம் எது இயற்றமிழ், எது இசைத் தமிழ் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நாடகத் தமிழ் பற்றிச் சரியான விவரம் அறியாதார் பலர். நாடகங்களில் இடம் பெறும் உரையாடல்தான் நாடகத் தமிழ் என்று நினைப்பது தவறு.


ஆங்கிலேயரின் தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களது ட்ராமாவை நாடகம் என்றோம்; அதை முன்மாதிரியாய்க் கொண்டு அங்கம், காட்சி என்று பிரித்துப் பாட்டும் உரைநடையுமாய் நாடகங்கள் இயற்றினோம். ஆனால் பழங் காலத்தில் நாடகம் என்பது நாட்டியத்தைக் குறித்தது. இரு சங்க நூல்களுள் நாடகம் என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது:


1 - பட்டினப்பாலை அடி 113


பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் ( இதில் பாடலும் ஆடலும் கூறப்படுகின்றன)


2 - பெரும்பாணாற்றுப்படை 55 ஆம் அடி:


நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து ( நாட்டியப் பெண்டிர் ஆடும் களத்தைச் சொல்கிறது)


பிற்கால நூல்களிலும் நாடகம் என்ற வார்த்தை நடனம் என்கிற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது:



1 - சிலப்பதிகாரம் ( 22 - 142 ) :


நாடக மகளிர் ஆடரங்கு (நடன மாதர் ஆடுகின்ற மேடை)


2 - கம்பர் ( 1494 ) :


நாடக மயில் (ஆடும் மயில்). 

ஆகவே நாடகத் தமிழ் என்பது நாட்டியம் ஆடும்போது பாடுகிற பாட்டு. அந்தப் பாட்டுகளை எப்படிப் புனையவேண்டும், நடனம் எவ்வாறு ஆடவேண்டும் என வழி காட்டும் நாட்டிய இலக்கண நூல்களும் நாடகத் தமிழைச் சேர்ந்தவைதான். கூத்த நூல், சந்தம், சயந்தம், பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் அழிந்துவிட்டன. இப்போது ஒன்றுகூட எஞ்சியில்லை.

அபாத்

 

தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற ஊரும் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை என்னும் ஊரும் இருக்கின்றன.


வாலாஜா என்பது ஆர்க்காட்டு நவாபாய்ப் பதவி வகித்த முகம்மதலியின் வேறு பெயர். பாரசீக மொழியில் அபாத் என்றால் ஊர் என்பது பொருளாம்.


ஐதரபாத், சிக்கந்தரபாத், அகமதபாத் முதலியவை அபாத் என்று முடிகின்றன.


உசேன் என்பவரின் பெயரால் அமைந்த உசேனபாத் நாளடைவில் உசேனூர் என மருவி இப்போது ஒசூர் ஆகிவிட்டது.


(ஆதாரம்: ரா. பி. சேதுபிள்ளை இயற்றிய ஊரும் பேரும் என்னும் நூல்.)


அபாத் என்பது இந்தியில் ஆபாத் எனப் புழங்குகிறது. இதன் பொருள் மக்கள் வாழ்கிற என்பது.