Friday 20 January 2012

பயனில்லா வாழ்வு



புலவர்களின் புரவலரும் பலரோடு உண்ணும் பழக்கம் உடையவருமான பாண்டியன் அறிவுடைநம்பி ஒருநாள் பகல் வேளையில் அவையிலிருந்து உள்ளே போய்த் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த மகனின் பால் வடியும் முகத்தையுஞ் சின்னஞ்சிறு கைகால்களையுஞ் சற்றுநேரம் அன்புடனும் ஆசையுடனுங் கண்டுகளித்து சைகை காட்டி அழைக்க, மனைவியும் விருப்பமுடன் விரைந்து வந்து கணவனை உராய்ந்து நின்று குழந்தை தூங்கிய எழிலைக் கண்ணால் பருகிப் பெருமிதமுங் குதூகலமும் ஒருங்கே உற்றாள். பலநாள் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்த காட்சிதான் எனினும் எத்தனை முறையானாலும் அலுக்காத சலிக்காத காட்சியல்லவோ?

சாப்பாட்டு நேரம் நெருங்கியதும் அவையில் காத்திருந்த புலவர் இருவரையும் அழைத்து வர ஏவலரை அனுப்பினார்.

மூவரும் வரிசையாய் அமர்ந்தனர். இலையின் ஓரத்தில் கொழுவிய துவை, சுரைக்கூட்டு, கத்தரி வதக்கல், கீரை மசியல் எனக் கறிகளும் நடுவில் எண்ணெய் மணந்த ஊண்சோறும் பரிமாறப்பட்டன.

உண்ணத் தொடங்கினர். குழந்தை கை கால்களை அசைத்து, தான் விழித்துக் கொண்ட செய்தியை ஆங், ஊங் எனக் குதலை மொழியில் அறிவிக்கவே பணியாள் ஓடிப்போய் வாஞ்சையுடன் மலர் போல் நலுங்காமல் தூக்கிக் கீழே விட்டார்.

சாப்பிடுவதை நிறுத்திய மன்னர் கண்கொட்டாமல் நோக்க, அது பொக்கைவாயைப் பெரிதாய்த் திறந்து சிரித்தவாறு தத்தக்கா புத்தக்கா என்று சிற்றடியிட்டு நடந்துவந்து தந்தையின் இலையருகே உட்கார்ந்தது. புலவர்களின் கண்களும் குழந்தையின்மீது மொய்த்தன.

அது கீரையைத் தொட்டு நாவில் தடவிக்கொண்டு ஒரு கத்தரித்துண்டை எடுத்து சுரைக்காய்க் கூட்டில் போட்டு வேறு துண்டை வாயில் கவ்விப் பின்பு துப்பிவிட்டு சோற்றைத் துழாவி அள்ளி விரல்களை விரித்தபடியே உள்ளங்கையால் வாயில் வைத்தது. சில பருக்கைகள் நாக்கில் தங்க, மற்றவை கழுத்திலும் வயிற்றிலும் கால்களிலுமாக சிதறி விழுந்து ஒட்டிக்கொண்டன. சிலை போன்று அசையாமல் ஆனந்த பரவசராய் அந்த இனிய இன்பக் காட்சியை அணு அணுவாய் சுவைத்தார் அரசர்.

குழந்தையைப் பணியாள் தூக்கிச் சென்று தூய்மை செய்தார். உண்டு முடித்தனர் மூவரும்.

அவையில் மீண்டுங் கூட்டம் கூடியபோது ஒரு புலவர் கூறினார்:

"இளவரசரிடம் வேந்தர்க்கு இருக்கிற பாசம் இவ்வளவு அவ்வளவு என்று கணிக்க முடியாது என்பதை நான் நன்கு தெரிந்துகொண்டேன்."

மற்ற புலவர், "நானுந்தான்" என வழிமொழிந்தார்.

அவர்களைப் பார்த்து மன்னர் விளக்கினார்:

"நிறைய சொத்து சேர்த்து நாள்தோறும் பலரோடு கூடியுண்ணும் அளவுக்குப் பெருஞ்செல்வராய் ஒருவர் வாழ்ந்தாலும் சின்னச் சின்ன அடி வைத்து நடந்து வந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழாவியும் எண்ணெய் கலந்த சோற்றை உண்ணும்போது உடலில் அங்குமிங்கும் சிதறிக்கொண்டும் களிப்பில் மயங்கவைக்கிற குழந்தை இல்லாமற்போனால் அவரது வாழ்வு பயனற்றதே."

"உண்மை, உண்மை, முக்காலும் உண்மை" என்று ஆமோதித்தனர் இருவரும்.

(மையக் கருத்தைத் தந்தது கீழ்க்காணும் பாடல். பாடியவர் பாண்டியன் அறிவுடைநம்பி.)

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.

(புறநானூறு.188)

No comments:

Post a Comment