Friday 27 January 2012

நக்கீரரின் பெருமை



 புராணக்கதைகள் சிலவற்றைக் கோத்து உருவாக்கிய திருவிளையாடல் படத்தில் தருமி ஒரு பாத்திரம். 

அவன் எப்படிப்பட்டவன்? சொந்தமாகப் பிழையின்றிப் பாட்டெழுதத் தெரியாத அரைகுறைப் புலவன். பிறரது பாடலைத் தனதெனப் பொய் சொல்லி மன்னனை ஏமாற்றிப் பொற்கிழி பெறத் திட்டமிட்டு முயன்ற மோசடிப் பேர்வழி. பாவில் குற்றமுண்டு என்று கேள்விப்பட்டவன் குற்றமில்லை என மறுக்க இயலாமல், 'எவ்வளவு குற்றமிருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு' பணம் ஈயும்படி கெஞ்சிய கோமாளி. நக்கீரரைப் பற்றி எதுவும் அறியாதவன். 'இங்கே எல்லாமே நீர்தானோ?' என்று கேட்டபின்பு 'பாட்டில் குற்றஞ்சொல்லிப் பெயர் வாங்கும் புலவர்' என்று குறைகூறிவிட்டு வெளியேறியவன். பாட்டில் குற்றஞ்சொல்வது தவறல்ல என்பதையும் நேர்மையற்றவனாகிய தான் பிறரை நோக்கி விரல் நீட்டத் தகுதியில்லாதவன் என்பதையும் எண்ணிப் பார்க்க இயலாத பேதை. அவனுக்கு வயிற்றெரிச்சல்! பேராசையுடன் எதிர்பார்த்த பொருள் கிட்டவொட்டாமல் தட்டிவிட்டாரே என்ற ஆத்திரத்தில் அவரை இகழ்ந்தான். 

தருமி ஒரு கற்பனைப் பாத்திரம். நக்கீரரோ உண்மையாகவே தமிழகத்தில் வாழ்ந்தவர். அவர் எத்தகையவர்? 

சங்கப் புலவருள் தலை சிறந்த மூவர் யார் என்று தமிழறிந்த ஒருவரிடம் வினவின், அவர் சற்றுந் தயங்காமல் சட்டென விடையிறுப்பார் கபிலர், பரணர், நக்கீரர் என்று. நக்கீரர் யாருடைய பாட்டிலுங் குற்றஞ் சொன்னதாய் வரலாறு இல்லை. குறை கண்டு கூறவல்ல புலமை மிக்கவரே எனினும் அப்படியொரு வாய்ப்பு நேரவேயில்லை. 

பத்துப் பாட்டில் ஒன்றான, 188 அடி கொண்ட, நெடுநல்வாடையின் ஆசிரியரான அவரது புகழ் எங்கும் பரவியிருந்தமையால் புதல்வர்களுக்கு அவருடைய பெயரைப் பெற்றோர் சூட்டி மகிழ்ந்தனர் என அனுமானிக்கலாம். 

அவர்களுள் ஒருவர் பெரும் புலவராகித் திருமுருகாற்றுப் படையை இயற்றினார். பத்துப்பாட்டில் ஒன்றெனத் தவறாய்ச் சேர்க்கப்பெற்றிருந்த இது பிற்காலத்தது என ஆய்வாளர் நிறுவியுள்ளனர். இரு நக்கீரர்களுக்கும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கலாம். 

8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட களவியல் என்ற இலக்கண நூலுக்கு உரையெழுதிய அறிஞரின் பெயரும் நக்கீரர் என்பதிலிருந்து சங்க கால நக்கீரரின் பெருமை கிட்டத்தட்ட 1000 ஆண்டு வரை உணரப் பட்டிருந்தது என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment