Wednesday 18 January 2012

அளந்த கோல் - நாடகம்




காட்சி 1
இடம் - வீட்டு வரவேற்பறை
காலம் - மாலை

நாளேட்டை வாசித்துக் கொண்டிருந்த எழிலன் திடீரென அலறுகிறார் ;

ஐயோ ! ஐயோ ! போயிற்று ! போயிற்று !

குழலி - ( உள்ளீருந்து ஓடி வந்து ) : என்னங்க ? என்ன போயிற்று ?

எழிலன் - எல்லாம் போய்விட்டது ! குழலி , நான் பெரிய தவறு செய்துவிட்டேன் .

குழலி - பதறாதீர்கள் , அமைதியாக இருங்கள் . என்ன ஆகிவிட்டது ? என்ன தவறு ?

எழிலன் - நன்னம்பிக்கை நல நிதியை மூடிவிட்டார்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள் ; எல்லாப் பணமும் அதில்தான் செலுத்தியிருந்தேன் ; போயிற்றே ! அடியோடு போய்விட்டதே !

குழலி - பணம் தானேங்க ? போனால் போகட்டும் ! மறுபடி சம்பாதித்துக் கொள்ளலாம் .

எழிலன் - எவ்வளவு எளிதாய்ச் சொல்லிவிட்டாய் ! ஐம்பதாயிரம் என்ன சிறு தொகையா ? உண்ணாமல் தின்னாமல் இப்படி அநியாயமாய்ப் பறிகொடுத்தேனே!

குழலி - எவ்வளவு பெரிய தொகையாய் இருந்தால் தான் என்ன ? இன்ப வாழ்வுக்கு அன்பும் ஒற்றுமையும் போதும் ; அவை நம்மிடம் நிறைய இருக்கின்றன ; ஆகையால் நீங்கள் மனந்தளர வேண்டியதில்லை.

எழிலன் - தங்கை திருமணத்துக்குப் பணமல்லவோ தேவை ? எப்படிச் சமாளிப்பது ?

குழலி - ஏங்க ? வங்கியில் தானே பணத்தைச் செலுத்தப்போவதாய்ச் சொன்னீர்கள் ; இப்போது நிதி என்கிறீர்கள் !

எழிலன் -- முதலில் அப்படித்தான் முடிவு செய்திருந்தேன் ; ஆனால் நிதியில் வட்டி அதிகம் என்பதை அறிந்து அதில் போட்டேன் .

குழலி - அப்படியா ? அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது ; மனத்தை விட்டுவிடாதீர்கள் .இடுக்கண் வருங்கால் நகுக . திருமணச் செலவுக்கு வேறு வழி தேடுவோம்.

( மூவர் நுழைகின்றனர் ; குழலி உள்ளே போகிறார் )

காட்சி 2

மாரன் - என்ன எழில் ? ஏன் வாட்டமாக இருக்கிறாய் ?

எழிலன் - மோசம் போய்விட்டேன் , நண்பர்களே ! நமக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை கிடைத்தது அல்லவா ? அவ்வளவையும் வைப்பு நிதியாய் ஒரு நல நிதியில் செலுத்தியிருந்தேன் ; அந்த நிறுவனத்தை மூடிவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது . நான் என்ன செய்யப்போகிறேன் ?

மணிவேல் - அடாடா ! பேரிழப்புத் தான் ; நல நிதிகள் நம்புவதற்கு உரியவை அல்ல ; நாங்கள் அப்போதே உன்னை எச்சரித்தோமே ! நீ சட்டை செய்யவில்லை எனத் தெரிகிறது .

பொறையன் - நல நிதியில் போட்டுவிட்டு வங்கியில் செலுத்தியதாய்ப் பொய் வேறு சொல்லியிருக்கிறாய் ! அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் ; பேராசை பெரு நஷ்டம் .

எழிலன் - ஆமாம் ; ஆசை அறிவை மழுக்கிவிட்டது . அடுத்த மாதம் தங்கை திருமணத்துக்காக அப்பாவுக்கு அந்தத் தொகை முழுதையும் அனுப்பத் தீர்மானித்திருந்தேன் ; அப்பா என்னை நம்பிக்கொண்டிருக்கிறார் ; அவருக்குக் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பாற்றுவேன் ?

மணிவேல் - கடினந்தான் ; அவ்வளவு பெருந்தொகையைப் புரட்டுவது எளிதா ?

எழிலன் - நீங்கள் மனம் வைத்தால் முடியும் . நீங்கள் மூன்று பேருந்தான் என் நெருங்கிய நண்பர்கள் ; உங்களை அல்லாமல் வேறு யார் எனக்கு உதவுவார் ? ஆளுக்குப் பதினைந்தாயிரம் கடனாகத் தாருங்கள் ; சமாளித்துக்கொள்வேன் ; தருவீர்களா ?

பொறையன் - உனக்கு இல்லாமலா ? ஆனால் பார் , என் சிறிய தந்தையின் மகன் கார் வாங்கப் போகிறான் ; பணம் போதவில்லையாம் ; அவனுக்கு முழுத் தொகையையும் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் .

மணிவேல் -- என்னையும் மன்னித்துவிடு , எழில் . நான் ஊரப்பாக்கத்தில் ஒரு மனை வாங்கப் போகிறேன் ; நெடு நாள் ஆசை. எனக்கே மேற்கொண்டு பணம் தேவைப்படும் போல் இருக்கிறது ; இந்த நிலையில் நான் எப்படி உனக்கு உதவ முடியும் ?

எழிலன் -- இப்படிக் கை விரிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை . நீ என்ன சொல்லப்போகிறாய் , மாரா ?

மாரன் -- என் தந்தை தம் தொழிலை விரிவு படுத்துவதற்காகப் பணம் கேட்டிருக்கிறார் ; கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறேன் . ஆனால் நீ சோர்வு கொள்ளாதே ! உன் தங்கை மணத்துக்கே முதலிடம் ; அது நல்லபடி நடக்க வேண்டும் . என் ஐம்பதாயிரத்தையும் தருவேன் ; மகிழ்ச்சி தானே ?

எழிலன் - ஆனால் உன் தந்தையார் ..........

மாரன் - அதைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.

மணிவேல் - ஆமாம் , தொழிலைக் கொஞ்சங் கொஞ்சமாய் விரிவு படுத்தலாம்.

பொறையன் - இப்போது உன் கவலை தீர்ந்தது . நாம் இனி மகிழ்ச்சியாய்ச் சீட்டு ஆடலாம்.

எழிலன் - முடியாது ; இனிமேல் நான் சீட்டு ஆட மாட்டேன் . ஒவ்வொரு நொடியையும் நல்ல விதமாய்ப் பயன் படுத்திச் சிறிது சிறிதாய்ப் பணம் சேர்த்து மாரனின் கடனை அடைக்க வேண்டும் ; அதற்கு இப்போதே திட்டம் தீட்டப் போகிறேன் நீங்கள் இனி இங்கே வந்து என் நேரத்தை வீணாக்காதீர்கள் . நீங்கள் போகலாம் . மாரா , நீ மட்டும் இரு ; உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது.

( இருவரும் முக வாட்டத்துடன் வெளியேறுகிறார்கள் )

மாரன் - உனக்கு எப்போது பணம் தேவை ?

எழிலன் - சொல்கிறேன் . குழலீ ! நீயும் வா !

( குழலி வந்தமர்கிறார் )

காட்சி 3

எழிலன் - குழலி , இங்கே நடந்த உரையாடலை நீ கேட்டுக்கொண்டிருந்தாயா ?

குழலி - ஆமாம் , காதில் விழுந்தது .

எழிலன் - உதவி கேட்டவுடன் அவனவனும் கழன்று கொண்டான் ; எவ்வளவு நெருங்கிப் பழகிவந்தோம் ! ஆறுதலாய்க் கூடப் பேசவில்லை . மாரன் மட்டுமே உற்ற நண்பன் எனத் தெரிந்துகொண்டேன் .

மாரன் - அதிருக்கட்டும் . திட்டம் தீட்டப் போவதாய்ச் சொன்னாயே ! நான் ஒரு யோசனை சொல்கிறேன் : மாணவர்களுக்கு வீட்டில் தனிப் பாடங் கற்பி .

எழிலன் - தேவையில்லை .

மாரன் - பின்னே ?

எழிலன் - இருவரும் கேளுங்கள் : எந்த நல நிதி மூடப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை ; பணம் பத்திரமாய் வங்கியில் இருக்கிறது .

குழலி - அப்படியானால் , எதற்காக ................

எழிலன் - சொல்கிறேன் . " கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் " என்று குறள் கூறுகிறது அல்லவா? அது பற்றி நான் பல மூறை எண்ணிப் பார்த்திருக்கீறேன். கேடு வந்த பின்பு நண்பர்களின் போக்கை அறிந்து என்ன பயன் ? முன்னாலேயே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது என முடிவு செய்தேன ;. அப்போது தான், " கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு " என்ற திருவள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்றுவது எளிது என எனக்குத் தோன்றிற்று. அதற்கு வழி தேடிக்கொண்டிருந்தேன் . நல நிதிச் செய்தியைப் பயன்படுத்தி ஒரு நாடகம் ஆடினேன் . என் நோக்கம் நிறைவேறிற்று ; நண்பர்களை அளந்து விட்டேன் ; இனி மாரனுடன் மட்டுமே எனது நட்பு நீடிக்கும்.

மாரன் - எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி : உன் சோதனையில் தேறிவிட்டேன் ; என் தகப்பனார்க்கும் உதவ முடியும் .

குழலி - பிரமாதமான நடிப்புத் திறமை உங்களிடம் இருக்கிறது என்பதை நான் இன்றுதான் தெரிந்து கொண்டேன் ; முழுக்க முழுக்க நம்பிவிட்டேன் .

எழிலன் - நம்பினாலும் என்னை இடித்துரைக்காமல் அன்பாய் , ஆறுதலாய்த் தெம்பூட்டும் வகையில் பேசினாயே ! மெய்யாகவே நீ என் வாழ்க்கைத் துணை தான் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதியாயிற்று.

5 comments:

  1. நட்பை அளக்க இப்படியுமா?நண்பர்களிடமும் இல்லையென்றால்?அல்லது நண்பர்களும் ஏழையாக இருந்தால்,,,,,,?

    ReplyDelete
  2. நட்பை அளக்கவும் ஒரு அளவுகோலா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் இப்படி எண்ணியிருப்பது வியப்பை அளிக்கிறது. அருமையான குறளையும் அதன் பொருளையும் அழகிய நாடகம் வாயிலாய் அறியச் செய்ததற்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு உள்ளம் நிறை நன்றி

      Delete
  3. கருத்துரைக்கு அகமார்ந்த நன்றி . ஏழை நண்பரிடத்தில் இந்தச் சோதனை நடத்தக் கூடாது . இவர்களிடத்தில் பணமுண்டு . தந்து உதவாவிட்டால் பரவாயில்லை; ஆனால் ஆறுதலாய்ப் பேசியிருக்கலாம் . பொய் சொன்னதாய்க் குற்றம் சுமத்தினார்கள் . அது தவறு .

    ReplyDelete
  4. கருத்துரைக்கு உள்ளம் நிறை நன்றி

    ReplyDelete