Friday 3 February 2012

இத்தாலியில் ஓர் இரவு



( போல் லூய் குரியே என்ற பிரஞ்சுக்காரர் - 18 ஆம் நூற்றாண்டு - எழுதிய சிறு கதை ; நான் மொழிபெயர்த்து ஏப்ரல் 94 மஞ்சரி இதழில் வெளிவந்தது )


ஒரு தடவை நான் இத்தாலியின் மலைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தேன் . அது கொடியவர் வாழும் இடம் என்பதும் அவர்கள் யாரையும் நேசிப்பதில்லை என்பதும் என் நம்பிக்கை . சிறப்பாகப் பிரஞ்சுக்காரர்களை அவர்களுக்குத் துளியும் பிடிக்காது. இதற்கான காரணத்தைச் சொல்வதென்றால் மிக விரியும் . எங்களைப் பிறவிப் பகைவர்களாக அவர்கள் கருதுகிறார்கள் , அவர்களிடம் மாட்டிக்கொண்டால் எங்களுக்குப் பெருந்துன்பம் ஏற்படும் என்று சொல்வது போதும் .  

எனக்குத் துணை ஓர் இளைஞன் . ஆபத்து மிக்க மலைப் பதையில் எங்கள் குதிரைகள் நடக்கப் பெரிதும் இடர்ப்பட்டன . முன்னால் போய்க்கொண்டிருந்த என் கூட்டாளிக்கு வசதியாயும் குறுக்கு வழியாயும் தோன்றிய ஓர் ஒற்றையடிப் பாதை எங்களை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. 

தவறு என்னுடையது தான் ; இருபது வயதுப் பையனை நான் நம்பினேனே ! காடுகளுக்கு இடையில் பகல் முழுதும் வழியைத் தேடினோம் ; தேடித் தேடியே மேன்மேலும் வழி தவறிப் போனோம் . இரவும் வந்துவிட்டது , நாங்கள் ஓர் இருண்ட வீட்டை அணுகியபோது . 

எங்களுக்குச் சந்தேகந்தான் ; வேறு வழி ? நுழைந்தோம் .  

அங்கே கரி தயாரிப்பவர்களின் குடும்பத்தினர் உண்டுகொண்டிருந்தனர் ; எங்களைக் கண்ட உடனே உண்ண அழைத்தனர் . 

என் இளம் கூட்டாளி உடனே ஒப்புக்கொண்டுவிட்டான் . நாங்கள் சாப்பிட்டோம் , குடித்தோம் . இல்லை , அவன் உண்டான் , குடித்தான் .  

நானோ அந்த இடத்தையும் வீட்டாரின் தோற்றத்தையும் ஆராய்ந்துகொண்டிருந்தேன் .  

அவர்கள் கரி தயாரிப்பவர்கள் போலத்தான் இருந்தார்கள் ; ஐயம் இல்லை ; ஆனால் அந்த வீடு ! அதை ஆயுதத் தொழிற்சாலை என்றே கூறலாம் ; எங்கே பார்த்தாலும் துப்பாக்கி , ரிவாலவர் வாள் , கத்தி , பிச்சுவா , இவை எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. என்னையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன் . 

என் தோழனோ நேர் மாற்றம் : பேச்சும் சிரிப்பும் , அட்டகாசம் ! அந்தக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டான் . அவன் மடத்தனமாய் ( இதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும் ) நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதைச் சொன்னதோடு எங்கே போகிறோம் , நாங்கள் யார் என்பதையுங்கூட உளறிவிட்டான் . 

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் : எங்களுடைய பிறவிப் பகைவரின் நடுவில் , தனியாய் , திக்குத் தெரியாத நிலையில் , மனித உதவி எதுவுங்கிட்ட இயலாத் தொலைவிலே ! 

போதாக் குறைக்கு அவன் தன்னைப் பணக்காரன் போலக் காட்டிக்கொண்டு , உணவுக்கான தொகையைத் தருவதுடன் மறு நாள் வழிகாட்டியாய் வருவோர்க்கு விருப்பமான எதையும் கொடுப்பதாகவும் வாக்களித்தான் . 

இறுதியில் தன் கைப்பை பற்றிப் பேசத் தொடங்கி அதன்மீது மிக்க கவனம் செலுத்தும்படியும் தன் தலை மாட்டில் அதை வைக்குமாறும் கேட்டுக்கொண்டான் ! அதையே தலையணையாக வைத்துக்கொள்வானாம் ! 

! இளைஞர்களே ! இளைஞர்களே ! உங்கள் இளமை எவ்வளவு பரிதாபத்துக்கு உரியது ! அவன் சொன்னதைக் கேட்டவர்கள் அந்தப் பையில் அரச முடியின் வைரங்களை நாங்கள் எடுத்து வந்திருக்கிறோம் என்றே நம்பியிருப்பார்கள் ! 

ஆனால் அந்தப் பையின்மீது அவன் அவ்வளவு அக்கறை செலுத்தியதற்கான காரணம் அதில் அவனுடைய காதலியின் கடிதங்கள் இருந்தமையே . 

உண்ட பின்பு வீட்டுக்காரர்கள் கீழறையில் படுத்தார்கள் ; நாங்கள் சாப்பிட்ட மாடி அறையில் ஒரு பரண் இருந்தது ; 7 அல்லது 8 அடி உயரத்தில் இடம் பெற்றிருந்த அதில் ஏணி மூலம் ஏற வேண்டும் . அது ஒரு வகைக் கூடு என்றே சொல்ல வேண்டும் ; கூரையைத் தாங்கும் சாத்துகளுக்கு அடியில் மண்டி போட்டு அதில் நுழைய வேண்டும் .. உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்த அந்த இடத்தில்தான் எங்கள் படுக்கை . 

என் தோழன் விலை மதிப்பற்ற தன் பையைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினான் . நானோ ? விழித்திருக்க முடிவு செய்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தேன் . 

இரவு அமைதியாய்க் கழிந்தது . என்னைப் பீடித்திருந்த அச்சம் நீங்கத் தொடங்கியது .  

பொழுது விடியப் போகிறது என்று எனக்குத் தோன்றிய நேரத்தில் வீட்டுக்காரரும் அவரது மனைவியும் தர்க்கம் செய்வதை உணர்ந்தேன் ; காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனித்தேன். 

கணவர் வினவியது தெளிவாய்க் காதில் விழுந்தது : " சரி , முடிவாய் என்னதான் சொல்கிறாய் ? இரண்டு உயிரையும் போக்கிட வேண்டுமா ? " 

"ஆமாம் " என்றார் மனைவி . 

பின்பு ஒன்றுமே கேட்கவில்லை . 

எனக்கு மூச்சு திணறியது ; உடல் முழுதும் சலவைக் கல் போல் குளிர்ந்தது ; நான் உயிரோடு இருந்தேனா , செத்துவிட்டேனா என்பது பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்காது . 

நிராயுத பாணியான நாங்கள் இருவர் ஏராள ஆயுதங்களைக் கொண்ட பத்துப் பதினைந்து பேரை எதிர்ப்பதா ? என் தோழனோ களைத்துப் போய்த் தூங்கிக்கொண்டிருந்தான் , பிணம் போல ! அவனைக் கூப்பிடுவதா , கூச்சலிடுவதா ? துணிச்சல் இல்லை . தனியாய்த் தப்பிப்பதா ? இயலாது : சன்னல் சிறியது ; கீழே இரண்டு நாய்கள் ஓநாய் மாதிரி ஊளையிட்டுக் கொண்டிருந்தன . 

கால் மணி நேரம் கால் யுகமாய்க் கழிந்த பின்பு , மாடிப் படியில் காலடியோசை கேட்டது ; அறைக் கதவின் விரிசல் வழியாய்ப் பார்த்தபோது வீட்டுக்காரர் தெரிந்தார் . ஒரு கையில் விளக்கு மறு கையில் பெரிய கத்தி .முன்னால் கணவரும் பின்னால் மனைவியுமாய் ஏறி வந்தனர் . 

அவர் கதவைத் திறந்தார் ; அறைக்குள் நுழைவதற்கு முனபு அவர் கீழே வைத்த விளக்கை மனைவி எடுத்துக்கொண்டார் . காலணிகளைக் கழற்றிவிட்டு அவர் நுழைந்தபோது வெளியே நின்ற மனைவி , கையால் விளக்கு வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு , மெல்லிய குரலில் , " மெதுவாய் , மெதுவாய்ப் போ " என்றார். 

ஏணியை நெருங்கிய அவர் கத்தியை வாயில் கௌவியபடி ஏறி வந்தார்; கழுத்துப் பகுதியை நீட்டிக்கொண்டு படுத்திருந்த இளைஞனின் அருகில் வந்து , ஒரு கையால் கத்தியை எடுத்து , மறு கையால் , ... ஐயோ ! 

சாத்தில் தொங்கிக்கொண்டிருந்த பன்றி இறைச்சியைப் பிடித்து ஒரு துண்டை அறுத்துக்கொண்டு இறங்கிப் போய்விட்டார் . கதவு மூடியது ; விளக்கும் போய்விட்டது .  

தனியாய் நான் சிந்தனையில் ஆழ்ந்தேன் . 

பொழுது புலர்ந்ததும் குடும்பத்தார் யாவரும் வந்து எங்களை அழைத்தனர் . 

காலை உணவு மிகத் தூய்மையாய் , மிகச் சுவையாய் வழங்கப்பட்டது ; இரண்டு முழுச் சேவலையுங் கூடச் சமைத்து வைத்திருந்தனர் : ஒன்று உண்ணவாம் , மற்றது எடுத்துப் போகவாம் . அவற்றைப் பார்த்தபோது தான், " இரண்டு உயிரையும் போக்கிட வேண்டுமா ? " என்ற பயங்கரச் சொற்களின் பொருள் எனக்குப் புரிந்தது .

2 comments:

  1. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பிறவிப் பகைவர்களிடம் மாட்டியதோடு அவர்கள் பேச்சும் பூடகமாக இருந்தால் வேறெப்படி எண்ண முடியும்? விருந்து வைப்பார்கள் என்று கனவிலும் நினைக்க முடியாது. ஆனால் அவர்கள் விருந்தே வைத்துவிட்டார்கள். போதாதென்று போகும் வழிக்கு உணவும் தயார் செய்து தருகிறார்கள். மனித மனங்களின் போக்கை வெகு அழகாகச் சித்தரிக்கும் பிரமாதமான கதை. அழகுத் தமிழில் மொழிபெயர்த்து எங்களுக்கு வாசிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அலட்சியப்ப்டுத்துவது ஆபத்தாய் மாறுவதும் ஆபத்து எனக் கருதுவது நன்மையாய் முடிவதும் வாழ்வில் நேர்பவையே . கருத்துரைக்கு அகமார்ந்த நன்றி .

      Delete