Thursday 1 March 2012

வாதம்



வாதநோய் பற்றி எழுதப்போகிறேன் எனத் தவறாய் நினைத்து மருந்தை எதிர்பார்த்து ஆர்வமுடன் வாசித்து ஏமாறாதீர்கள். 

விவாதம், தருக்கம் என்ற பொருளில் வாதம் என்னுஞ்சொல்லை ஆள்கிறேன். தமிழில் சொற்போர் எனப்படும். தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கேட்டிருப்பீர்கள். அவை மக்களைச் சிரிக்கவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு குழுவால் (இசைக்குழு போல) நடத்தப்படுகிற பொழுதுபோக்கு நிகழ்ச்சி. நகைச்சுவைத் துணுக்குகள் குட்டிக்கதைகள் சொல்லி (சில சமயம் தலைப்புக்குச் சிறிதுத் தொடர்பற்றவை)யும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொண்டும் காலம் போக்குவர். நல்ல கருத்துகள் அரிதாகவே தலைகாட்டும். பட்டிமன்றத்தை வாதத்தில் சேர்க்கலாகாது. 

முன்காலத்தில் காமன் பண்டிகை மாசி மாதத்தில் 15 நாள் கொண்டாடப்பட்டபோது, மன்மதனைச் சிவன் எரித்தார் என்றப் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்ட வாதம் அநேகமாய் நாடோறும் மாலை வேளையில் நிகழ்ந்தது. மன்மதன் எரிந்தானா இல்லையா என்பது கேள்வி. எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இருவர் டேப் கொட்டியபடி மாறிமாறிப் பாட்டுப்பாடி வாதிட்டனர். அதன் பெயர் லாவணி. அதையும் தருக்கத்தில் சேர்க்கக்கூடாது. யார் யாரோ எழுதிய புத்தகங்களில் உள்ள பாடல்களை மனப்பாடஞ்செய்து பாடுவார்கள். கருத்து, எதிர்க்கருத்து என்பதை எதிர்பார்க்க முடியாது. 

இருவர் ஒரு கருத்தைத் தலைப்பாக வைத்து ஒட்டியும், வெட்டியும் பேசுவது வாதம். அதில் நான்கு வகையுண்டு.


1.சம்வாதம் 

எதிரி சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் ஏற்கத் தக்கவற்றை ஏற்று மேலே விவாதிப்பது அறிவுத் தெளிவுக்கு வழிவகுக்குமாதலால் இதை நல்லவாதம் என்கிறார்கள். 

1939 இல் கம்பராமாயணத்தை எரிக்கவேண்டும் என்று அண்ணாதுரையும், கூடாது என்று சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையும் சேலத்தில் சொற்போரிட்டனர். பின்பொரு தடவை இரண்டாஞ்சொற்போர் அண்ணாதுரைக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார்க்கும் (காலம், இடம் நினைவில்லை) இடையே நிகழ்ந்தது. இருவாத விவரங்களும் 'தீ பரவட்டும்' என்ற நூலில் உள்ளன. சம்வாதத்துக்கு அவை எடுத்துக்காட்டு. 

கற்றோரிடை நிகழ் குழு விவாதமும் (group discussion) சம்வாதமே.


2. கபிவாதம்


காட்டு:1 

வாதி: குடி குடியைக் கெடுக்கும்.

பிரதிவாதி: பிரம்மச்சாரியைக் கெடுக்காதா?  

(குடும்பத்தை விட்டு பிரம்மச்சாரிக்குத் தாவல்)



காட்டு:2 

வாதி: ஒளவை பாட்டில் குற்றம் இருக்கிறது.

பிரதிவாதி: சங்கப் பாடலிலும் உண்டு. 

(இங்கேயும் தாவல்தான்) 

கபி (குரங்கு) கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் தாவிச் செல்வது போல ஒருவர் ஒன்றைப் பற்றிப் பேசினால் மற்றவர் அதை விடுத்து வேறொன்றுக்குப் போவதால் இது கபிவாதம் எனப்படுகிறது. சாதாரண மக்கள் கபிவாதியை, 'ஏணின்னா கோணி என்கிறவன்' என்பார்கள். 

தாவித் தாவிக் கும்மாளம் போட கபிவாதிக்கு நிறையவே இடமுண்டு.  

பாருங்கள்: 'வண்டியிழுக்கும் நல்ல குதிரை' என்ற பாரதியாரின் பாடலைப் படித்ததும் கபிவாதிக்கு ஒரே குஷி! அவரைப் பிடித்துக் கொள்கிறார்: 

ஏன்'யா பாரதி!

1.கெட்ட குதிரை வண்டியிழுக்காதா?

2.குதிரை ஏர் உழாதா?

3.மாடுந்தான் வண்டியிழுக்கும்.

4.சில நாடுகளில் வண்டியைக் கழுதை இழுக்கிறது.

4.பனிப் பகுதிகளில் குதிரை இழுக்குமா? நாய்தான் இழுக்கும். 

பாவம், பாரதியார்!



3. சல்ப்பவாதம்

அ. தான் பேசுவது, மற்றவரைப் பேசவிடாமல் குறுக்கிடுவது.

ஆ. பிறர் சொல்வதற்குக் காது கொடுக்காமல் பேசுவது.

இரண்டும் சல்ப்பவாதம். 

இயல்பானதை (normal)ப் பேசாமல் இயல்பற்றதை(abnormal)ப் பேசுதலும் இதிற்சேரும். 

காட்டு:

1.முயலுக்கு 4 கால் என்றால்

நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது.

2.ஒரு கை விரல் 5 என்பதற்கு மறுப்பாகப்

பக்கத்து வீட்டுப் பையன் கையில் 6 என்பது.



4.விதண்டாவாதம் 

வாதி: விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது.

பிரதிவாதி: இல்லை, குறைகிறது. 


வாதி: இதோ, நாளேடு; விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. எட்டுக்காலத் தலைப்பு.

பிரதிவாதி: பத்திரிகையில் வருவதெல்லாம் உண்மையல்ல.


வாதி: நேற்றுத் தொலைக்காட்சியில் விலைவாசி உயர்வு பற்றி ஒருவர் உரை நிகழ்த்தினாரே!

பிரதிவாதி: எவரோ பேசியதை ஏற்கவேண்டுமா?


வாதி: விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பது தெரியுமா?

பிரதிவாதி: எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? வோட்டு வாங்குவதற்குத்தான் ஆர்ப்பாட்டமெல்லாம். அதற்கு ஏதாவது சாக்கு வேண்டுமே! அதான் விலைவாசி.


வாதி: இதோ பாருங்கள், போன மாதமும், இந்த மாதமும் வாங்கிய மளிகைப் பொருள் பட்டியல். இரண்டையும் ஒப்பிடுங்கள். உண்மை புலப்படும்.

பிரதிவாதி: நீங்கள் யாரோ கொள்ளைக்காரன் கடையில் வாங்கியிருப்பீர்கள்.


வாதி: சரி, விலை குறைகிறது என்று நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?

பிரதிவாதி: என்னிடம் ஆதாரமில்லாததால் விலைவாசி குறையவில்லை என்று ஆகிவிடாது.


இவ்வாறு பிறருடைய ஆதாரங்களை ஏற்காமலும், தான் எந்த ஆதாரமும் காட்டாமலும் தன் கருத்தை வலியுறுத்துவது விதண்டாவாதம் என்னும் பிடிவாதம். 

சம்வாதம் ஒன்றுதான் நற்பயன் விளைக்கும். 


சரி, இழிவு செய்வது, உள்நோக்கங்கற்பிப்பது, திட்டுவது இவையெல்லாம் எதிற்சேரும்? 

அவை ஆள் தாக்கு (personal attack). கருத்து எதுவும் முன்வைக்க வக்கில்லாதவர்கள் கையாளும் உத்தி. வாத வகையில் சேரா. 

ஓர் ஐயம். கருத்தை விளக்கக் குட்டிக்கதை சொல்லலாமா? தாராளமாக. ஆனால் நாட்டெலியும், நகரத்தெலியும், எருதுகளும் சிங்கமும் போன்ற அறிவுபூர்வமான கதைகளாக இருக்கவேண்டும். 

கொக்குக் கதை ஒன்றுண்டு. பால் எப்படியிருக்கும் என்று பார்வையில்லாதவர் கேட்டால் தண்ணீர் போல என்று சாதாரண அறிவுடையோரும் சொல்வார். வெள்ளையாக இருக்கும் என்பவனை என்னென்பது? கண் தெரியாதவர் நிறம் அறியார். அவர் தவறாகப் புரிந்துகொண்டார் என்று முடிவு சொல்வது சரியன்று. தவறாய்ப் புரிந்துகொள்ள வைக்கப்பட்டார் என்பதே சரி. இப்படிப்பட்ட அறிவுக்கொவ்வாக் கதை ஆதாரமாக அமையாது.

1 comment:

  1. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete