Wednesday 28 March 2012

நெப்பெட்டீஸ்ம்



 

நெப்போஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு சகோதரன் அல்லது சகோதரி மகன் என்று பொருள். அது ஆறாம் வேற்றுமையில் நெப்போத்தீஸ் என மாறும். இதிலிருந்து பிறந்த பிரஞ்சு வார்த்தையான நெப்போத்தீஸ்ம், வேண்டியவர்க்குச் சலுகை வழங்குவதைக் குறிக்கும். இதை ஆங்கிலம் நெப்பெட்டீஸ்ம் ( Nepotism ) என்கிறது. 

இந்தச் சொல் உருவானமைக்கு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 

14 ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவராய்த் தேர்வு செய்யப்பெற்ற ஒரு பிரஞ்சுப் பாதிரியார், ஐந்தாம் க்ளேமான் என்னும் பட்டத்துடன் ரோமுக்குப் போகாமல் பிரான்சிலிருந்தே அதிகாரம் செலுத்தினார். இத்தாலியை இடைவிடாப் புரட்சிகளும் உள்நாட்டுப் போர்களும் அலைக்கழித்தமையால் அவருக்குப் பின் பதவி ஏற்றோரும் பிரான்சிலேயே தங்கினார்கள். 

1305 இலிருந்து 1378 வரை நீடித்த அந்தக் கால கட்டத்தில் அவர்கள் மத நிர்வாகிகளைப் பணியமர்த்தக் கையூட்டுப் பெற்றும் இயன்ற வேறு வழிகளிலும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெரும் செல்வம் ஈட்டி ஆடம்பரமாய் வாழ அதைச் செலவழித்தார்கள்.

தங்கள் உடன்பிறந்தாரின் புதல்வர்களுக்கு விலையுயர்ந்த அன்பளிப்புகளைத் தாராளமாய் வழங்கினார்கள். அப்போது நெப்போத்தீஸ்ம் என்னும் புதுச் சொல்லை மக்கள் படைத்துப் புழங்கினார்கள்.

Saturday 24 March 2012

லத்தீன் பழமொழிகள் இரண்டு



மக்களின் பட்டறிவால் பிறப்பவை பழமொழிகள் ; அவை எல்லா மொழிகளிலும் உண்டு.

தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:

1 - வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox populi vox Dei ) இதன் பொருள்: மக்களின் குரல் தெய்வத்தின் குரல்.

இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம் சொல்லுகிறோம்.

2 - எர்ராரே ஹுமானும் ஏஸ்த் ( Errare humanum est ) பொருள் : தவறுதல் மனித இயல்பு.

இதனை ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என மொழிபெயர்த்தார் . அவரிடமிருந்து நாம் பெற்றோம்.

Thursday 22 March 2012

பாண்டி பஜார்




"என்ன காரணம்?  பாண்டி பஜார் எனச் சென்னைத் தியாகராயர் நகரின் அங்காடித் தெரு அழைக்கப்படுவதேன்?  இப்போது புதுச்சேரி எனப்படும் பாண்டிச்சேரியின் சுருக்கம் அல்லவா பாண்டிஅந்த முன்னாள் பிரெஞ்சு இந்தியப் பகுதிக்கும் சென்னைக்கும் ஒரு தொடர்பும் இல்லையே?" என்று யாரும் குழம்பவேண்டாம். 

பெரியாரின் தொடக்கக் காலத் தளபதிகளுள் முக்கியமானவர் தென் தமிழகத்தின் பட்டிவீரன்பட்டி என்னும் ஊரினரான W.P.A.சவுந்தரபாண்டியன். 1929 இல் செங்கற்பட்டில் நிகழ்ந்த மாநில முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர். 

இவரது பெயரால் அமைக்கப்பட்ட சவுந்தரபாண்டியன் கடைத் தெரு சுருக்கமாய்ப் பாண்டியன் கடைத் தெரு ஆகிப் பின்பு பாண்டி பஜார் என மாறிற்று , தியாகராயர் நகர் தி.நகர் ஆனது போல. 

சென்னையின் அந்தப் பகுதி நீதிக் கட்சித் தலைவர் சிலரின் பெயர்களைத் தாங்கியுள்ளது : 

1 - கட்சி நிறுவுநர் சர். பிட்டி தியாகராயர் நினைவாய் ----  தியாகராயர் நகர்; 

2 . அவருக்குத் துணை நின்ற டி. மாதவன் நாயரின் பெயரால் ---- டாக்டர் நாயர் தெரு; 

3 . கட்சித் தூண் நடேசனைப் பெருமைப்படுத்துவது --- டாக்டர் நடேசன் தெரு; 

4 . கட்சி சார்பில் மாநில முதலமைச்சராய்ப் பதவி வகித்த பனகல் ராஜாவின் பெயர் கொண்டுள்ளது --- பனகல் பூங்கா.


கொசுறு -- சென்னைச் சைனா பஜாரும் இப்படித்தான்அங்கே சீனர் கடைகள் இருந்ததில்லை. 

சின்ன கடைத் தெரு என்பது Chinna bazaar என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு நாளடைவில் எழுத்துப் பிழையால் China bazaar ஆகிவிட்டது.  

சின்ன கடைத் தெரு சீனக் கடைத் தெரு ஆனமை விநோதம் தானே !

Saturday 17 March 2012

அவன்? - பிரெஞ்சுச் சிறுகதை






(பிரெஞ்சுச் சிறுகதை மன்னர் கீத மொப்பசான் (Guy de Mauppasant) (1850-1893) அகாலத்தில் இறந்தமைக்குக் காரணம் மனநோய். இதன் அறிகுறிகள் அவருடைய பிற்கால கதைகளில் தென்படலாயின. அப்படிப்பட்ட கதைகளுள் ஒன்று 'லுயீ? (lui?- அவன்?) . இது 1883 ல் வெளிவந்தது. அதன் நேரடி மொழிபெயர்ப்பு இது.)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



என் அருமை நண்பா, 

உனக்கு ஒன்றும் புரியவில்லையா? உன் நிலைமை எனக்குப் புரிகிறது. 

நான் பித்தன் ஆகிவிட்டதாய் நம்புகிறாயோ? நான் கொஞ்சம் பித்தனாய் இருக்கக் கூடும், ஆனால் நீ நினைக்கிற காரியங்களுக்காக அல்ல. 

ஆம், நான் மணஞ் செய்து கொள்கிறேன். அவ்வளவு தான். 

இருந்தாலும் என் கருத்துகளும் நம்பிக்கைகளும் மாறிவிடவில்லை. சட்ட பூர்வ மணம் ஒரு மடமை என்று நான் கருதுகிறேன். அந்த மடச்செயலைச் செய்வதற்கு என்னைத் தூண்டுகிற விபரீத, நம்ப இயலாக் காரணத்தை உன்னிடஞ் சொல்லத் தயங்குகிறேன். 

நான் மணம் புரிவது தனிமையைத் தவிர்ப்பதற்காக! 

அதை எப்படிச் சொல்வது, எவ்வாறு புரிய வைப்பது எனத் தெரியவில்லை. நீ என்மீது இரக்கப்படுவாய், அதே சமயம் என்னை இகழ்வாய். அந்த அளவு என் மனநிலை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 

இரவில் இனிமேல் தனியாக இருக்க நான் விரும்பவில்லை. பேசக் கூடிய, எதையாவது சொல்லக் கூடிய ஒருவர் என்னருகில் நெருக்கமாக இருப்பதை நான் உணர விழைகிறேன். அவரது தூக்கத்தைக் கலைக்க என்னால் முடிய வேண்டும் என விரும்புகிறேன். திடீரென அவரிடம் நான் ஏதேனும் ஒரு கேள்வியை, முட்டாள்தனமான கேள்வியானாலும் சரி, வினவ வேண்டும், ஒரு குரலை நான் கேட்பதற்காக, என் வீட்டில் ஆள் உண்டு என்று உணர்வதற்காக, ஒருவர் விழிப்புடன் இருக்கிறார், சிந்திக்கிறார் என்பதை அறிவதற்காக, ஒரு மெழுகுவர்த்தியைத் திடீரென்று கொளுத்தி என்னருகில் மனித உருவம் ஒன்றைப் பார்ப்பதற்காக..... 

ஏனென்றால்.... ஏனெனில்.....(ஒப்புக் கொள்ள வெட்கமாக இருக்கிறது) தனியாக இருக்க அஞ்சுகிறேன். 

ஆபத்து எதையும் பற்றிப் பயமில்லை. எவனாவது நுழைந்தால் கொன்று விடுவேன் நடுக்கம் இன்றி. பேய் பிசாசு பற்றிப் பீதி கிடையாது. இயற்கைக்கு மாறான எதையும் நான் நம்பாதவன். இறந்தவர்களின் ஆவி குறித்த கிலியில்லை. சாகிறவர் அனைவரும் மிச்சம் மீதியின்றி அடியோடு அழிந்து விடுகிறார் என்பது என் திட முடிவு. 

அப்படியானால்! ஆமாம், அப்படியென்றால்?

எனக்கு அச்சம் என்னைப் பற்றியே தான். பயத்தைப் பற்றிப் பயம்; குழம்புகிற என் மூளையின் ஒழுங்கற்ற செயல்பாடு பற்றி உதறல். புரிந்து கொள்ள இயலாத ஒரு திகிலின் பயங்கர அனுபவம் பற்றி அரட்டி. 

எள்ளி நகையாடு, நீ விரும்பினால். இது வெறுப்புக்கு உரியது; சிகிச்சையற்றது. சுவர்கள், தட்டுமுட்டு சாமான்கள் அன்றாடம் கையாளும் பொருட்கள் எல்லாம் விலங்குகள் போல இயங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. யாவற்றுக்கும் மேலாக என் எண்ணங்களில் ஏற்படும் பயங்கரக் குழப்பம் பற்றியும், என் அறிவு கலங்கி இனம்புரியாத் தவிப்புக்கு ஆளாவதைப் பற்றியும் பீதியுறுகிறேன்.  

நான் பேசுகிறேன்! என் குரல் அச்சுறுத்துகிறது; நடக்கிறேன்! கதவுக்குப் பின்புறம், திரை மறைவில், அலமாரிக்குள், கட்டிலுக்குக் கீழே இங்கெல்லாம் இருக்கிற அறியாத ஒன்றைக் குறித்து அஞ்சுகிறேன். எங்கும் எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும் தான். 

கலவரம் அடைகிறேன், என் பெருங் குழப்பம் அதிகரிப்பதை உணர்கிறேன். எனவே அறைக்குள் முடங்குகிறேன். கட்டிலில் படுத்து மெத்தை விரிப்புக்குள் பதுங்குகிறேன். உடலைக் குறுக்கி உருண்டை போல் சுருண்டு நம்பிக்கையிழந்த நிலையில் கண்மூடிக் கிடக்கிறேன், நீண்ட நேரம். மேசைமேல் வர்த்தி எரிகிறது, அதை அணைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியும் அதற்கான துணிவில்லை. 

இந்த என் நிலைமை படுமோசம் அல்லவா 

முன்பெல்லாம் இந்த மாதிரி அனுபவம் சிறிதும் ஏற்பட்டதில்லை. வீட்டுக்கு நிம்மதியாக வருவேன். என் மனத்தெளிவை எதுவும் கெடுக்காத நிலையில் செயல்படுவேன். யாராவது நம்ப முடியாத, மடத்தனமான, கொடூர அச்சம் என்னைப் பிடித்தாட்டும் என்று அப்போது சொல்லியிருந்தால் பெரிதாய் சிரித்திருப்பேன். இருட்டில் கதவுகளைத் துணிவுடன் திறப்பேன், தாழ் போடாமலே கவலையின்றிப் படுப்பேன். எல்லாம் சாத்தியிருக்கிறதா என்று சரிபார்க்கப் பாதியிரவில் எழுந்ததேயில்லை. 

இந்தத் தொல்லை சென்ற ஆண்டு விசித்திரமான முறையில் தொடங்கிற்று. 

இலையுதிர் காலத்து ஈரமான மாலை வேளை. இரவு சாப்பிட்ட பின்பு, வேலைக்காரி போனதும், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அறையில் குறுக்கும் நெடுக்கும் சற்று உலாவினேன். வேலை செய்ய இயலாமல், வாசிக்கக் கூட ஆற்றலற்றுக் காரணமின்றிச் சோர்வாய் இருந்தேன். சன்னல் கண்ணாடிகளை மழையின் சன்னமான துளிகள் நனைத்தன. உள்ளத்தில் துயரம், நம்மை அழத் தூண்டுகிற மனச்சுமையை இறக்கி வைக்க யாரிடமாவது பேச வேண்டும் என்று நம்மை உந்துகிற காரணமற்ற துயரங்களுள் ஒன்றில் ஆழ்ந்திருந்தேன். 

தனியனாய் என்னை உணர்ந்தேன். என்றுமில்லா அளவு வீடு சூனியமாய்க் காட்சியளித்தது. முடிவற்றதும் இதயத்தைப் பிசைகிறதுமான தனிமை என்னைச் சூழ்ந்தது. என்ன செய்யலாம்? அமர்ந்தேன். கால்களில் ஒருவிதப் படப்படப்பு உண்டாயிற்று. மறுபடி நடந்தேன். குளிரால் உடல் திடீரென நடுங்கியது. வெளியீரம் உள்ளே வந்துவிட்டது எனக்கருதிக் கணப்பை மூட்டினேன். சுவாலைகளைப் பார்த்தபடி உட்கார்ந்தேன். வெளியே போய் நண்பன் எவனையாவது பார்க்க முடிவு செய்து மூன்று பேர் வீட்டுக்குப் போனேன். ஒருவனையும் சந்திக்க இயலாமல் தெருவில் நடந்தேன், தெரிந்தவர் யாரையாவது பார்த்து விடுவது என்ற முடிவோடு. 

எங்கும் சோகச் சூழ்நிலை. நனைந்த நடைப்பாதைகள் ஒளி வீசின. நீரின் மித வெப்பம், திடீர் நடுக்கங்கள் உண்டாகும் படி குளிர் தரும் வெப்பம், மிக நுண்ணிய மழைத்துளிகளின் கனமான வெப்பம் சாலையை ஆக்கிரமித்துத் தெரு விளக்கின் ஒளியை மங்கச் செய்தது போலிருந்தது. 

லேசான அடியிட்டு நடந்தேன்; திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன்:"பேசுவதற்கு ஒருவனையும் காணமாட்டேன்". 

மதலேன் தேவாலயத்திலிருந்து புவாசோன்னியர் தெரு வரை பார்களைப் பலதடவை துருவினேன். சோக மனிதர்கள் மேசைகளின் எதிரில் அமர்ந்திருந்த கிளாஸ்களைக் காலி செய்வதற்குக் கூட சக்தியற்றவர்கள் போல் காணப்பட்டார்கள். 

நீண்ட நேரம் அலைந்து விட்டு நள்ளிரவில் இல்லத்துக்குத் திரும்பினேன்.

வீட்டில் நுழைந்தபோது நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைப்பதற்காக எடுத்தேன். நேரே பார்த்தபோது என் நாற்காலியில் யாரோ, முதுகு என்பக்கம் இருக்க அமர்ந்து தீயருகில் கால்களை நீட்டிச் சூடுபடுத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். 

எனக்குப் பயம் ஏற்படவில்லை. என்ன நடந்திருக்கிறது என்பது பற்றிய எண்ணம் என் மூளையில் தோன்றிற்று. நண்பன் எவனோ என்னைக் காண வந்திருக்கிறான். காவலாளியிடம் சாவியை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறான். 

அவனுடைய முடி என் பார்வையில் பட்டது. எனக்காகக் காத்திருந்தவன் தூங்கிவிட்டான். அவனை இரு கண்களாலும் தெளிவாய்ப் பார்த்தேன். எழுப்புவதற்கு நெருங்கினேன். வலக்கை தொங்கிக் கொண்டிருக்கக் கால் மேல் கால் போட்டிருந்தான். இடப்பக்கம் சற்றே சாய்ந்திருந்த தலை அவனது உறக்கத்தை நன்கு புலப்படுத்திற்று. 

"யாராக இருக்கும்?" எனக் கேட்டுக் கொண்டேன். அறையில் கொஞ்சந்தான் ஒளியிருந்தது. கையை நீட்டினேன் தோளைத் தொடுவதற்கு! கையில் பட்டது நாற்காலி! அதில் யாருமில்லை! வெற்று நாற்காலி! 

தூக்கி வாரிப் போட்டது! 

முதலில் பின்வாங்கினேன் பயங்கர ஆபத்தைக் கண்டது போல். பின்பு திரும்பிப் பார்த்தேன். முதுகுக்குப் பின்னால் யாரோ இருப்பதாய் உணர்ந்து. உடனே நாற்காலியை மறுபடியும் நோக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் என்னை மீண்டும் திரும்ப வைத்தது. பெருந் திகிலுக்கு ஆளாகி எந்தச் சிந்தனையும் இல்லா அளவுக்குப் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தேன், விழுந்து விடக் கூடிய நிலைமையில். 

ஆனால் நான் துணிச்சல் நிரம்பியவன். உடனடியாய் சிந்தனை மீண்டது.  

"உருவெளித் தோற்ற மொன்றைக் கண்டிருக்கிறேன். அவ்வளவே" என்று எண்ணினேன். உருவெளித் தோற்றந்தான். மறுக்க இயலா நிகழ்ச்சி. என் அறிவு ஒரு நொடியும் மங்கவேயில்லை. அதுபாட்டுக்கு ஒழுங்காயும் சரியாயும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆகவே மூளையில் கோளாறு இல்லை. கண்கள் மட்டுமே தவறு செய்து என்னை ஏமாற்றிவிட்டன.

அவை ஒரு காட்சியைக் கண்டுள்ளன. எதையும் நம்பக்கூடியவர்கள் அற்புதம் என்று கருதக் கூடிய ஒரு காட்சியை. பார்வை நரம்பில் சிக்கல், அவ்வளவு தான்; ரத்தக் கட்டாக இருக்கலாம். 

வர்த்தியை ஏற்றினேன், அதைக் கொளுத்துவதற்குக் கணப்பை நோக்கிக் குனிந்த போது உடல் உதறலை உணர்ந்தேன். பின்னாலிருந்து யாரோ தொட்டது போலிருக்கவே அதிர்ந்து நிமிர்ந்தேன்.

நான் நிம்மதியாக இல்லை நிச்சயமாய். 

சில அடிகள் எடுத்து வைத்தேன். உரத்த குரலில் பேசினேன். மெல்லிய குரலில் பாடினேன். கதவை இரட்டைப் பூட்டுப் பூட்டினேன். தெம்பு உண்டாயிற்று. இனி யாரும் உள்ளே வர இயலாது. உட்கார்ந்து நெடுநேரம் அந்தக் காட்சி பற்றி யோசித்து விட்டுப் படுத்து வர்த்தியை அணைத்தேன். மல்லாந்த நிலையில் சில நிமிடம் அமைதியாய்க் கிடந்த பின்பு நெருப்புப் பக்கம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அரும்பவே ஒருக்களித்தேன். 

நாற்காலியின் கால்களுக்கு மட்டுமே ஒளி தரக்கூடிய அளவு தீ மங்கியிருந்தது. நாற்காலியில் அவன் அமர்ந்திருப்பது போல் தோன்றியது. தீக்குச்சியைச் சடாரெனக் கொளுத்திப் பார்த்தேன். யாருமில்லை. 

தூங்க முயன்றேன். கண்ணை மூடிய சிறிது நேரத்தில் அந்தக் காட்சி கனவாய் வந்தது. பதற்றத்துடன் எழுந்து வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டு கட்டிலில் குந்தியிருந்தேன். படுக்கத் துணிவில்லை. என்னை மீறி இருதடவை கண்ணயர்ந்தேன். இரண்டு தடவையும் அதே கனவு. பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்தேன்.

விடிந்த பின்பு நலம் ஏற்பட்டதாய்த் தெரிந்தது. நண்பகல் வரை நிம்மதியாய் உறங்கினேன். எல்லாம் முடிந்து விட்டது, முழுதும் முடிந்து போனது. எனக்கு வந்தது காய்ச்சலா, பயங்கரக் கனவா? தெரியவில்லை.

ஆக நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறேன். எனினும் அடி முட்டாளாய் இருந்தேன் என எண்ணுகிறேன். 

அன்று மகிழ்ச்சியாய் இருந்தேன். உணவகத்தில் சாப்பிட்டு விட்டு நாடகத்துக்குச் சென்றேன். பின்பு திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஆனால் வீட்டை நெருங்கிய போது ஓர் அசாதாரண பதற்றம் என்னைப் பீடித்தது. மீண்டும் அந்த அவனைப் பார்ப்பேனோ என்ற பயம். அவனைப் பற்றியல்ல, அதைத் தான் நான் சிறிதும் நம்பவில்லையே! ஆனால்

கண்களுக்கு மறுபடியும் ஏற்படக்கூடிய குழப்பம் பற்றி, உருவெளித் தோற்றம் பற்றி, அதனால் நான் அடையக் கூடிய கலவரம் பற்றிப் பயம். 

ஒரு மணி நேரத்துக்கு மேலாக, ஆளோடியில் இங்குமங்கும் நடந்தேன்; வடிகட்டிய மடமை என்று கடைசியில் தெரியவே உள்ளே நுழைந்தேன். மாடிப்படியேற முடியாதபடி நெஞ்சு படபடத்தது. ஒருவாறு ஏறிக் கதவின் எதிரில் பத்து நிமிடத்துக்கு மேல் தயங்கி நின்ற பின்பு திடீரெனத் துணிச்சலும் மனத்திண்மையும் உண்டாயின. 

சாவியை நுழைத்துத் திறந்தேன். வேகமாய் முன்னேறினேன், கையில் மெழுகுவர்த்தியுடன். கதவை ஓர் உதையால் சாத்திவிட்டுக் கலக்கத்தோடு கணப்பை நோட்டமிட்டேன். ஒன்றுமில்லை. "அப்பாடா".

எவ்வளவு ஆறுதல்! எத்தகைய பரவசம்! எப்படிப்பட்ட விடுதலை! உற்சாகத்துடன் நடமாடினேன். இருப்பினும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. திடீர் திடீரெனத் திரும்பித் திரும்பிப் பார்க்க வேண்டியிருந்தது. மூலை நிழல்கள் சஞ்சலந் தந்தன. 

நல்லுறக்கமில்லை. கற்பனை ஒலிகள் கேட்டு அவ்வப்போது விழித்துக் கொண்டேன். ஆனால் அவனைக் காணோம். முடிந்தது!

அன்றிலிருந்து இரவில் தனிமை அச்சுறுத்துகிறது. அந்தத் தோற்றம் அங்கே, இங்கே, சுற்றுமுற்றும் இருப்பதாக உணர்கிறேன். மறுபடி காணவில்லை எனினும் அதைப் பற்றிய நினைப்பு என்னை வாட்டிக் கொண்டேயிருக்கிறது. 

யார் அவன்? உண்மையில் அவன் இல்லை என்பது தெரியும். என்னுடைய பயத்தில், என்னுடைய கலக்கத்தில் தான் அவன் இருக்கிறான். இப்படியெல்லாம் நான் சமாதானப்படுத்திக் கொண்டாலும் வீட்டில் தனியாக இருக்கப் பயம்தான்.  

இனி அவனை நான் காணமாட்டேன் என்பது தெரியும். அவன் மறுபடி தென்பட மாட்டான், இருப்பினும் அவன் இருக்கிறானே என் மனத்தில். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் இருக்கிறான். கதவுகளின் பின்னால், மூடியிருக்கிற அலமாரியினுள்ளே, கட்டிலுக்கு அடியில், எல்லா இருண்ட மூலைகளிலும், எல்லா நிழல்களிலும். 

இது மடத்தனம், இது கொடுமை. தவிர்க்கவோ முடியவில்லை. 

வீட்டில் இருவராக இருந்தால் அவன் ஒழிந்து விடுவான். இது சர்வ நிச்சயம். ஏனென்றால் அவன் இங்கே இருப்பது நான் தனியாள் என்ற ஒரே காரணத்தால் தான்!

Tuesday 13 March 2012

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....



எந்த ஆட்சியிலும் தங்களுக்கு நன்மை விளையவில்லை எனக் கருதுகிற ஏழை எளியவர்கள்,  " ராமன் ஆண்டால் என்ன?  ராவணன் ஆண்டால் என்ன? " என்ற பழமொழியைச் சொல்லித் தங்களின் விரக்தியை வெளிப்படுத்துவார்கள். 

இந்தப் பழமொழிக்கு மூலம் கம்ப ராமாயணம்.
யுத்த காண்டம் - மூல பல வதைப் படலம். 

அரக்கரின் பென்னம்பெரிய படையைப் போர்க்களத்தில் பார்த்த மாத்திரத்தில் திகிலடைந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது  இராமனின் வானரச் சேனை. அவனது கட்டளைப்படி அங்கதன் சென்று வானரர்களை அழைத்தபோது அவர்கள் வர மறுத்து

" அனுமன் , சுக்ரீவன்,  இராமன்,  இலக்குவன் ஆகியோரின் வலிமை தற்காப்புக்கே போதாதுஅவர்கள் எங்களை எப்படிக்  காப்பாற்றுவார்கள்ஆளை விடுங்கள். எங்களுக்கு உண்ணக் காய் கனிகள் உண்டுவாழக் குகைகள் உள்ளன.  உலகத்தை மனிதர் ஆண்டால் எங்களுக்கு என்ன?  அரக்கர் ஆண்டால் என்ன? " என்று வினவினார்கள். 

" மனிதர் ஆளின் என் இராக்கதர் ஆளின் என் வையம்?"
( வையம் - உலகம்) 

இதுவே சிறிது மாற்றம் பெற்றுப் பழமொழியாய்ப் புழங்குகிறது.

Tuesday 6 March 2012

இயால்மாரின் இதயம்


  

ஸ்வீடன் நாட்டுத் தொன்மக் கதையில் ஒரு கட்டம்: 

இல்மேர் என்னும் மன்னனின் மகளும் இயால்மார் என்பவனுங் காதலர்கள். அரசனின் எதிர்ப்பு இருவரையும் இணைய விடவில்லை. வீரத்தால் காதலியை அடைந்துவிடலாம் என்ற முடிவுடன் சிறுபடை திரட்டிச் சென்றான் காதலன். முழுத் தோல்விதான் போர்க்களத்தில் கிட்டியது. அதன் பின் 

19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர் லெக்கோன்த் தலில் (Leconte de Lisle ) அந்தக் கட்டத்தை இயல்மாரின் இதயம் என்ற தலைப்பில் கவிதையாய்த் தீட்டியுள்ளார்.  

பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் தருகிறேன். படித்துப் பாருங்கள்.



தெளிந்த இரவு, நடுக்குங் காற்று,

சிவந்த பனித்தரை,

ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்

கல்லறை இல்லாமலே.

வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,

அசைவில்லை மெய்யிலே.

தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை.



இயல்மார் சற்றே நிமிர்கிறான் ரத்தம்

உறைந்த உடல்களின்

இடையே வாள்மீது இருகையும் ஊன்றி.

"அடர்ந்த தோப்பிலே பறவைகள் போலவே

விடியலில் வையகம் அதிரவே பாடிச்

சிரித்துக் களித்த அத்தனைத் திண்டோள்

இளைஞரின் நடுவே

ஏன்'பா மூச்சுண்டா யாருக் கேனும்?"



இல்லை விடை. "என் தொப்பி உடைந்து நொறுங்கிற்று.

கவசமோ துளைபட்டு அதிலிருந்த ஆணிகளைச்

சுக்குநூ றாக்கிற்றுக் கோடரி. என்கண்கள்

சிந்துவது நீரா? செங்குருதி யன்றோ?

வா இங்கே, காக்கையே, மனிதர் தின்னி!

திறவுன்றன் இரும்பலகால் என்னெஞ் சத்தை.

எடுத்துச்செல் இதயத்தை இல்மேரின் புதல்வியிடம்,

சூட்டோடு சூடாக!



உப்சாலா வூரிலே உயர்தர மதுபருகிப்

பொற்கிண்ணம் உராய்ந்து பாடுகின்ற கும்பலில்

தேடென்றன் காதலியை.

புறாக்கூட்டம் உறைகின்ற கோபுரத்தின் உச்சியிலே

பால்வெண் உடலும் நீள்கருங் குழலுமாய்க்

காண்பாய் அவள் நிற்க.

வெள்ளி வளையங்கள் ஊசலிடுங் காதுகளில்.

அந்தி வெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்.



ஏகுவாய்! கருந்தூதா! யானந்தக் காரிகையைக்

காதலிக் கின்றேன் கழறுவாய் கன்னியிடம்.

இதோபார் இதயம் என்றே கொடுத்திடு.

அடையாளங் காண்பாள்; அதுசெக்கச் செவேலென்று

திண்ணியதாய்த் திகழ்கிறது, நடுங்கவில்லை,

வெண்ணிறமாய் மாறவில்லை என்பதனை நோக்கிப்

புன்னகைப்பாள் இல்மேரின் பொன்மகள் பறவையே!