Sunday 22 April 2012

வாழ்க்கைப் பாடம்




(எனக்கு 10, 12 வயதிருக்கும். தெருவோரக் குடிசை ஒன்றின் முன் சிறு கூட்டம் கூடியிருக்கக் கண்டு அறியும் ஆவலுடன் ஓடிப் போய்ப் பார்த்தேன். ஓர் இளம் பெண்ணை ஒருவன் திட்டியபடியே விளக்குமாற்றால் அடிக்க, அவள் தடுத்துக் கொண்டு அங்குமிங்கும் நகர்ந்தாள். இரக்கப்பட்ட நான் இந்தக் கூட்டத்தில் யாராவது எதிர்ப்புக் குரல் கொடுக்க மாட்டார்களா என எண்ணினேன்.

என் எண்ணத்தை உணர்ந்தவர் போல் ஒருவர், “ஏன்யா இப்படி மூர்க்கத்தனமா அடிக்கிறே?” என்று கேட்ட போது என் மனம் ஆறுதல் அடைந்தது. சற்று நேரந்தான். அவன் திருப்பிக் கேட்டான்: நீ யார்யா கேக்குறதுக்கு? என் பெண்டாட்டியை நான் அடிப்பேன், கொல்லுவேன். உனக்கென்ன?”.

அதே கணம் அவள் பேசினாள்: எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். இன்னைக்கு அடிச்சுக்குவோம், நாளைக்குக் கூடிக்குவோம். நீ என்னா கேக்குறது?” 

நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். அந்தக் காட்சி மீண்டும் நினைவுக்கு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்பு நான் ஒரு பிரெஞ்சு நாடகத்தைப் படித்த போது. தொடர்புள்ள காட்சியை மொழி பெயர்த்திருக்கிறேன்:-)  

 ***********************************************************

ஸ்கானாரேல் தன் மனைவி மர்த்தீனைக் கம்பால் அடிக்கிறான். 

ரொபேர்: அடாடா! அடாடா! சே! என்ன இது? எவ்வளவு மோசமான வேலை? மனைவியை அடிக்கிற மட்டமான ஆள் ப்ளேகில் போக! 

மர்த்தீன்:- (இடுப்பில் கைகளுடன் பேசியபடி முன்னேற, ரொபேர்
கொஞ்சங் கொஞ்சமாய்ப் பின்னால் நகர்கிறான்.)
அவர் என்னை அடிப்பதை நான் விரும்புகிறேன். 

ரொபேர்: அப்படியா? மனமார நான் ஏற்றுக் கொள்கிறேன்.

மர்த்தீன்:- உனக்கென்ன இதைப் பற்றி? 

ரொபேர்:- நான் சொன்னது தவறு தான். 

மர்த்தீன்:- இது உனக்குச் சம்பந்தப்பட்டதா? 

ரொபேர்: நீங்கள் கேட்பது சரிதான். 

மர்த்தீன்:- மனைவிகளைக் கணவன்மார் அடிப்பதைத் தடுக்க
விரும்புகிற நாகரிகம் இல்லாத ஆள். 

ரொபேர்:- நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். 

மர்த்தீன்:- இதிலே நீ தலையிட என்ன இருக்கிறது? 

ரொபேர்:- ஒன்றுமில்லை. 

மர்த்தீன்:- இதில் நீ மூக்கை நுழைக்க வேண்டுமா? 

ரொபேர்:- இல்லை. 

மர்த்தீன்:- உன் வேலையைப் பார். 

ரொபேர்:- நான் இனி வாயே திறக்கவில்லை. 

மர்த்தீன்:- அடி வாங்குவது எனக்குப் பிடிக்கிறது. 

ரொபேர்:- சரி. 

மர்த்தீன்:- உனக்கு இதில் ஒன்றும் நஷ்டமில்லை. 

ரொபேர்:- உண்மை தான். 

மர்த்தீன்:- ஜோலியில்லாத இடத்தில் நுழைகிற நீ ஒரு முட்டாள். (கன்னத்தில் அறைகிறாள்). 

ரொபேர்:- (கணவனிடம் சென்று) அன்பரே, உளமார உங்களிடம்
மன்னிப்பு கோருகிறேன். ஊம்! உதையுங்கள்! செம்மையாய்
அடியுங்கள்! நீங்கள் விரும்பினால் நானும் உதவுவேன்.  

ஸ்கானாரேல்: (இவன் முன்னேற, ரொபேர் முன்பு போலப் பின்
வாங்குகிறான்.) எனக்குப் பிடிக்கவில்லை. 

ரொபேர்:- ஆ! அது வேறு விஷயம். 

ஸ்கானாரேல்:- நான் விரும்பினால் அடிப்பேன், விரும்பாவிட்டால் அடிக்கமாட்டேன். 

ரொபேர்:- ரொம்பச் சரி. 

ஸ்கானாரேல்: அவள் என் மனைவி, உன் மனைவியல்ல. 

ரொபேர்:- சந்தேகமில்லாமல். 

ஸ்கானாரேல்: நீ எனக்கு உத்தரவு போட முடியாது. 

ரொபேர்:- சரி. 

ஸ்கானாரேல்: உன் உதவியும் எனக்குத் தேவையில்லை. 

ரொபேர்:- ரொம்ப மகிழ்ச்சி. 

ஸ்கானாரேல்:- பிறர் விஷயத்தில் தலையிடுகிற நீ நாகரிகம்
தெரியாதவன். 

(ரொபேரைக் கம்பால் அடிக்க அவன் ஓட்டம் பிடிக்கிறான்). 



(மொலியேர் (MOLIERE) இயற்றிய வலுக்கட்டாயமாய் வைத்தியன் ஆனவன்என்னும் நாடகத்தில் ஒரு காட்சி – 17 ஆம் நூற்றாண்டு)

(1987 டிசம்பர் மஞ்சரி இதழில் வெளிவந்தது)

5 comments:

  1. வலுக்கட்டாயமாய் வைத்தியன் ஆனவன்’!!!

    ReplyDelete
  2. எல்லா இடத்தும் ஒரே மனோபாவம்தானோ
    கால இட விதிவிலக்கு கிடையாது போலும்
    அருமையான ஒப்பீடு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Replies
    1. ஊர் மாறினாலும், இனம் மாறினாலும் கணவனிடம் மனைவி அடி வாங்குவது மட்டும் மாறாது போலிருக்கிறது. மொழியாக்கப் பதிவுக்கு நன்றி..

      Delete
  4. என்ன ஒரு அவலம்! அறியாமையா? ஆணவமா? அடிக்கும் கணவனைத் தடுக்கும் ஆடவனைக் கண்டிக்கும் பெண்மை? காலம் காலமாகத் தொடரும் இந்த நிகழ்வின் ஒப்புமை, நாடு, இனம், மொழி கடந்தும் நிலைத்திருப்பது வியப்பான வேதனை. அழகான மொழியாக்கப் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete