Thursday 10 May 2012

அரசனை நம்பி.....


 

நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ள பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'' என்பது. 

ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்வதாக அமைந்துள்ள இதன் விரிவான அர்த்தமாகக் கொள்ளப்படுவது என்ன? 

''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!'' 

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுதான் ஒரு கவிஞர் பழைய திரைப்படம் ஒன்றில் பாடல் புனைந்திருந்தார்.


"அரசனைப் பாத்த கண்ணுக்குப்

புருசனைப் பாத்தா புடிக்காது

அரசனைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டா

புருசனை நெஞ்சம் மறக்காது."

என்பவை அந்தப் பாட்டின் சில அடிகள். 

இப்படிப் பொருள் கொள்வது, பெண்ணை இழிவுபடுத்துகிறது; அவளின் கற்பை ஐயப்பட வைக்கிறது; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது. 

ஆனால், பழமொழியின் உண்மைப் பொருள் தெரிந்தால் மேற்கண்ட இழி கருத்து நீங்கும். என்ன ஐயா.. அந்த மெய்ப்பொருள் என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சொல்கிறேன். 

இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு. 

ஆல மரம் - ஆல்

வேல மரம் - வேல் (ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி)

வேப்ப மரம் - வேம்பு

புங்க மரம் - புங்கன்

ஒதிய மரம் - ஒதியன் (ஒதியன் பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது)

அரச மரம் - அரசன்


குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுற்றினால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கை. 

''அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்'' என்ற பழமொழி அவசரக்காரி ஒருத்தியைக் கிண்டல் செய்கிறது. 

இப்போது உண்மைப் பொருளை ஊகித்திருப்பீர்களே! உங்கள் ஊகம் சரி. அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.


(நிலாச்சாரலில் வெளிவந்த என் கட்டுரை)
(படம் உதவி : இணையம்)

1 comment:

  1. தெளிவு படுத்தும் பதிவு தொடருங்கள் .

    ReplyDelete