Friday 14 December 2012

சங்கச் சான்றோர்


 மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்கப் புலவர்களுள் சிலர்,  தேவைப்பட்டபோது அவர்களுக்குத் தக்க அறிவுரை புகன்று நன்னெறியில் செலுத்தினர் என்பது புற நானூற்றால் தெரிகிறது.  

1 - உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை குறித்துச் சிந்தித்த குடபுலவியனார் அதற்கு அடிப்படை நில வளம்நீர் வளம் என்பதை ஓர்ந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் கூறினார்:
 
 

நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்; நீரையும் நிலத்தையும் ஒன்றாய்க் கூட்டியவர்கள் குடிமக்களின் உடலையும் உயிரையும் காத்தவர் ஆவார்கள். மழையை  எதிர்பார்க்கும் புன்செய் எவ்வளவு அகன்றதாயினும் முயற்சிக்குத் தக்க பலன் தராது. ஆதலால் மழைநீர், ஆற்றுநீரைக் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுதையும் வளப்படுத்து. இவ்வாறு  செய்த வேந்தர்கள் உலக இன்பமும் நிலைத்த புகழும் எய்துவார்கள்; செய்யாதார் அவற்றைப் பெறார்.
 
 
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
( பா 18 ). 

2 - பிசிராந்தையார் பற்றிப் பலரும் அறிந்திருப்பர். பாண்டியன் அறிவுடைநம்பி வரி வசூலிப்பதற்கு உரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட பிசிராந்தையார் அவனிடம், "அரசனொருவன் அறிவுள்ளவனாய் ஏற்ற வழியில் வரி வாங்கினால் பெரிய அளவில் பொருள் சேரும்; மக்களும் மேம்படுவார்கள்" என்று சொல்லி அதை விளக்குவதற்கு அருமையான எடுத்துக்காட்டும் தந்தார்:
 

" முற்றிய நெல்லை அறுவடை செய்து கவளங் கவளமாய் யானைக்கு ஊட்டினால் ஒரு மாவுக்கும் குறைந்த வயலின் விளைச்சலாயினும் பல நாளுக்கு வரும்மாறாக நூறு வேலி நிலமானாலும் தானே போய் மேயும்படி அதை விட்டால் அதன் வாயில் நுழையும் உணவைவிடக் காலால் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்" என்பது அந்தக் காட்டு.
 
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும், பன் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
 ( புறம் 184 ) 

சங்கப் புலவர்கள் நல்லமைச்சர்போல் மன்னர்களை அறவழியில் செலுத்தியமைக்கு அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையே காரணம்;   நாட்டின் முன்னேற்றம் , மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால் அவர்களைச் சங்கச் சான்றோர் என அழைக்கிறோம்.
 
(படங்கள் உதவி; இணையம்)