Saturday 27 April 2013

காதல்


பல மொழியினர் தத்தம் கதைகளிலும் நாடகங்களிலும் காதலையும் காதலரையும் போற்றியிருக்கிறார்கள்: அம்பிகாபதி - அமராவதி , லைலா - மஜ்நூன் , அனார்கலி - சலீம் , ரோமியோ - ஜூலியட் முதலான காதல் இணைகள் வாசகர் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள். 

ஷேக்ஸ்பியரின் "வெனீஸ் வணிகன்" நாடகத்தில் வரும் "லவ் இஸ் ப்லைண்ட்" என்ற வசனத்தைத் தமிழில், "காதலுக்குக் கண்ணில்லை" என மொழிபெயர்த்துக் காதல் மதமறியாது, சாதி அறியாது, ஏழை - செல்வர் வேறுபாடு அறியாது, எந்தப் பேதமும் அறியாது என்று விளக்கந்தந்து திரைப்படங்களில் பேசுகிறார்கள், பாடுகிறார்கள்; ஆனால் அதே படங்கள் காதலுக்குக் கண் உண்டு என்பதற்குச் சான்று பகர்கின்றன. 
 
காதல்  

1 - பால் அறியும்: ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தான் முகிழ்க்கிறது. 

2 - நிறம் அறியும்: ஒரு கருப்புப் பெண்ணை சூப்பர் ஃபிகர் என எவரும் சொல்வதில்லை; காதலனும் கருப்பாய் இருப்பதில்லை. 

3 - அழகு அறியும்: காதலர் அசிங்கமாய் இருக்கக் காணோம். 

4 - உயரம் அறியும்: தலைவனைக் காட்டிலும் தலைவி குள்ளமாக இருக்கிறாள். 

5 - வயது அறியும்: தன்னினும் குறைந்த வயதுடையவளையே ஒருவன் காதலிக்கிறான். 

6 - மண நிலை அறியும்: மணமாகாத ஒருத்தியும் ஒருவனுமே காதலிக்கின்றனர். 

இவற்றால் என்ன தெரிகிறது? காதலுக்குக் கழுகு பார்வை உண்டு, அது தேர்ந்தெடுக்கிறது என்பது புரிகிறது. 

காதல் மிக உயர்வாகச் சித்திரிக்கப்படுகிறது: அது தெய்விகமானது, புனிதம் வாய்ந்தது, ஒரு மனத்தில் ஒருவர்க்கு மட்டும் இடமளிப்பது, காதல் இன்றேல் சாதல் என்றெல்லாம் காதலைப் பற்றிக் கூறுகிறார்கள். ஆனல் அதில் என்ன தெய்விகம் உள்ளது, அது எப்படிப் புனிதம் என யாரும் கேட்பதில்லை, சொல்வதுமில்லை. 

நட்பை யொத்ததே காதல். ஒரேயொரு வேறுபாடு : நட்பு நம்மை ஆணோடும் இணைக்கும், பெண்ணோடும் பிணைக்கும்; ஆனால் ஆணும் பெண்ணுமே காதல் வயப்படுகிறார்கள். நம் பழைய இலக்கியம் காதலை நட்பு என்றே கூறுவதும் உண்டு: 

1 - குறுந்தொகை - 3 - தலைவி கூற்று: 

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 

2 - திருக்குறள் - 1122 - தலைவன் கூற்று: 

மடந்தையொடு எம்மிடை நட்பு. 

நட்பு தெய்விகமானதா? புனிதமானதா? அல்லவே! அது நிரந்தரமாக நீடிக்குமா? நிச்சயமில்லை. ஒரே ஊரில் வாழ்ந்தாலும் நண்பர்கள் பிரிந்துவிடுவது உண்டு; பகைப்பதும் கூடும். நட்பைப் போன்ற காதலும் அப்படித் தான் காலப் போக்கில் மாறலாம். 

முன்பு வயதுக்கு வந்த பெண்களை வீட்டுக்குள் முடக்கினர் . (இது சங்க காலத்தில் இற்செறிப்பு - இல் + செறிப்பு எனப்பட்டது) திருமணத்துக்குப் பின்புதான் பெண்கள் படி தாண்டினர். முறைப்பெண், முறைமாப்பிள்ளை என்று நெருங்கிய உறவில் மணம் நிகழ்ந்தது. காலப்போக்கில் பெண்கள் உயர்கல்வி கற்கவும் அலுவல் புரியவும் உரிமை பெற்றதால் ஆண்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. அதனால் இன்றைய இளைஞர்கள் காதலிக்கிறார்கள்ஆனால் ஒவ்வொரு காதலும் கல்யாணத்துக்கு இட்டுச் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் இறுதிவரை இணங்கி இணைந்து வாழ்வாரும் உண்டு, இடையில் பிணங்கிப் பிரிந்து போவாரும் உண்டு. ஏமாற்றப்பட்டுச் சீரழியும் காதலிகளும் அநேகர். மேனாட்டாரைப் போல மணமின்றிக் கூடி வாழ்வதும் தலை காட்டுகிறது. 

இவை யெல்லாம் கால மாறுதல்; உலக மயமாதலின் விளைவு. இவற்றைத் தடுக்க இயலாது. 

எதுவும் நன்மையாக முடியுமாயின் நன்றே.

1 comment: