Friday 31 May 2013

பிறப்பால் உயர்வு தாழ்வு


 சங்க காலத்தில் சில வகைத் தொழிலாளர் பிறப்புக் காரணமாய் இழிவாய்க் கருதப்பட்டனர் என்று சொன்னால் சிலர் ஏற்க மறுக்கலாம்; ஆனால் ஆதாரம் உண்டு: 

1 - புறம் 82 : கட்டில் நிணக்கும் இழிசினன் --- (கயிற்றுக் கட்டில் பின்னும் இழிமகன்). 

2 - புறம் 259 : முருகு மெய்ப்பட்ட புலைத்தி -- (தெய்வம் உடம்பில் ஏறியதால் ஆவேசம் கொண்ட கீழ் மகள்) 

3 - புறம் 287 :  துடி எறியும் புலைய! எறிகோல் கொள்ளும் இழிசின! (உடுக்கை அடிக்கிற கீழ்மகனே ! பறை முழக்குகிற கோலை உடைய இழிந்தவனே!) 

4 - புறம் 289 : தண்ணுமை இழிசினன் -- (மத்தளம் கொட்டுகிற இழிந்தவன்) 

5 - புறம் 311 : புலைத்தி கழீஇய தூவெள் அறுவை -- (கீழ்ப் பெண் துவைத்த வெள்ளைத் துணி) 

6 - புறம் 360 : புலையன் ஏவ-- (இழிந்தவன் கட்டளை இட) 

7 - புறம் 363 : இழிபிறப்பினோன் ஈய -- (தாழ்ந்த பிறப்பை உடையவன் தர) 

8 - நற்றிணை 90 : புலைத்தி எல்லித் தோய்த்த கலிங்கம் --(கீழ்மகள் பகலில் வெளுத்த துணி)  

பிற்கால சமயப் பெரியவர்களும் இக் கொள்கை உடையவரே: 

"ஆ உரித்துத் தின்று உழலும் புலையர்" என்பது அப்பர் வாக்கு. 

வேடன் குகனைத் திருமங்கை ஆழ்வார், "ஏழை ஏதலன் கீழ்மகன்" என்றார்.

Friday 24 May 2013

கலித்தொகை

 
சங்க நூல்களுள் ஒன்றென நம்பப்பட்ட கலித்தொகை, பிற்கால நூல் என்று திறனாய்வாளர் தெரிவிக்கின்றனர்.  
 
காரணங்கள்:
 
1 - சங்க நூல்கள் யாவும் அகவல்பாவால் ஆக்கப்பட்டிருக்க இது கலிப்பாவால் இயன்று வேறுபடுகின்றது. 
 
2 - முந்தைய அகத் திணை நூல்கள் இயல்பான காதலைப் பாடுகின்றன; அன்புடை நெஞ்சம் தாங் கலந்தன என்றபடி நிபந்தனை ஏதுமின்றி மனக் கலப்பு நிகழ்ந்தது. கலித்தொகையோ காளையை அடக்கவேண்டும் என்று விதிக்கிறது. 
 
" ஏறு தழுவினவர் அல்லாத எவரும் இவளை அடைய முடியாது என எல்லாரும் கேட்கும்படி பல தடவை அறிவிக்கப்பட்டவள் என்று தலைவி சுட்டப்படுகிறாள்.( பா - 2 ) 
 
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் (பா 3) 
 
பொருள்: ஏற்றுக் கோடு - காளையின் கொம்புகள் ; புல்லாளே - தழுவாளே. 
 
3 - பிற்காலப் புராணச் செய்தியைக் காண்கிறோம்: கைலை மலையை இராவணன் தூக்க முயன்றான். (38 )

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........
4 - பாலியல் வன்முறையும் அறம் தான் என்ற கருத்து இடம்பெற்றுள்ளது:
 "வௌவிக் கொளலும் அறன்" (62) 

5 - பழைய நூல் எதுவும் சொல்லாத மாற்றுத் திறனாளிகள் இருவரின் ஊடலுங் கூடலும் விவரிக்கப்படுகின்றன. (94) 
 
இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு எனக் கணித்தனர் ஆராய்ச்சியாளர்.
+++++++++++++++++++++++++++++++++

Thursday 16 May 2013

கேட்ட தாய்


 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்னும் குறள் பலரும் அறிந்தது. இதன் பொருள்: ஒரு தாய், தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்ல, அதனைக் கேட்டு அவனைப் பெற்றபோது தான் மகிழ்ந்ததைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள். 

கேட்ட தாய் என்பதற்கு உரை ஆசிரியர் பரிமேலழகர், பின் வரும் விளக்கத்தை எழுதியிருக்கிறார்: "பெண் இயல்பால் தானாக அறியாமையின்" அதாவது, பெண்ணின் இயல்பு காரணமாய் அவள் தானாகவே தெரிந்துகொள்ள மாட்டாள், மற்றவர் சொல்லித்தான் அறிவாள்; ஆகையால், அறிந்த தாய் என்னாமல், வள்ளுவர் கேட்ட தாய் என்றார் என்பது பரிமேலழகரின் விளக்கம். 

பெண்ணுக்குச் சொந்த அறிவு இல்லை என்பது ஆணாதிக்க மனப்பான்மை எனக் குற்றம் சாற்றுவோர் உண்டு. வள்ளுவரை ஆதரிக்கிறவர்களோ அதற்குச் சமாதானம் சொல்கினறனர்; என்ன சொல்கின்றனர் 

எந்தத் தாய்க்கும் தன் மகனைக் குழந்தையாகவே கருதும் இயல்பு உண்டு; அவனுக்கு ஒண்ணுமே தெரியாது என்று தாய்மார்கள் கூறக் கேட்கிறோம் அல்லவா? இந்த இயல்புதான் தன்னுடைய பிள்ளையின் அருமை பெருமைகளைச் சரியாக எடை போடவிடாமல் தாயைத் தடுக்கிறது. இதைத்தான் வள்ளுவர் சொன்னார் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  

இரு தரப்பு வாதங்களில் நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்; கருத்துச் சுதந்தரம் இருக்கிறதே!

                                                  ----------------------------------------------

Thursday 9 May 2013

ஐம்பெருங் காப்பியம்


 


சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐம்பெருங்காப்பியம் என்கிறோம். இந்தச் சொற்றொடரை உருவாக்கியவர் மயிலைநாதர் (14 ஆம் நூற்றாண்டு); இவர் இலக்கண நூலாகிய நன்னூலுக்கு உரை எழுதி இருக்கிறார்; அந்த உரையில்தான் "ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு" என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்றொடர்களையே நாம் பன்னெடுங்காலமாய்த் திருப்பிச் சொல்லிவருகிறோம்; எண்பெருந்தொகை மட்டும் எட்டுத்தொகை என்று சுருங்கிவிட்டது. 

அப்படி உரைத்த மயிலைநாதர் ஐம்பெருங்காப்பியம் இவை இவை எனச் சுட்டிக் காட்டவில்லை. 

பின்பு தோன்றிய "தமிழ்விடு தூது" என்னும் சிற்றிலக்கியமும், "கற்றார் வழங்கு பஞ்ச காப்பியமும்" என்றதே ஒழிய விரித்துரைக்கவில்லை. 

கந்தப்ப தேசிகர்தான் (19 ஆம் நூ.) தாம் இயற்றிய திருத்தணிகை உலாவில் காப்பியங்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்: 

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
சுந்தர மணிமே கலைபுனைந்தான் --- நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டல கேசிக்கும் ............... 

என்பது அவரது செய்யுள். இவற்றைத்தான் மயிலைநாதர் மனத்தில் எண்ணினாரா என்பது தெரியவில்லை. இவற்றுள் வளையாபதியில் 66 பாக்களும் குண்டலகேசியில் 224 பாக்களும் மட்டுமே கிடைத்துள்ளன. 

சிறு காப்பியங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிற சூளாமணி, பெருங்காப்பியம் என்னும் பெயர்க்குப் பொருத்தமானது எனத் திறனியர் கூறுகின்றனர். 

வடமொழியிலும் ஐங்காவியம் (பஞ்ச காவ்யம்) உண்டு. அவை: நைடதம், கிராதார்ச்சுனீயம், ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம்.

Saturday 4 May 2013

எள்ளி நகையாடுகிறதே!


 


மழைக் காலத்தில் தோன்றி இருந்த முல்லை அரும்புகளைக் கண்டார் சங்க காலக் கவிஞர் ஒருவர். அவற்றைப் பல்லுக்கு உவமை சொல்வது மரபு என்பது நினைவுக்கு வந்தது; உடனே கற்பனை பிறந்தது.

பொருள் தேடுவதற்காக நம் காலத்தில் அரபு நாடுகள் முதலிய வேற்றுத் தேசங்களுக்கு இளைஞர்கள் செல்கிறார்கள் அல்லவா? இதுபோல் பழங் காலத்தில் ஒருவன் தன் காதலியிடம், "செல்வம் சேர்த்துக்கொண்டு கார்காலத்தில் திரும்பி வருவேன்" என்று உறுதி மொழி கூறிப் பிரிந்து போனான், அயல் பிரதேசத்துக்கு.

அவன் சொன்ன காலம் வந்துவிட்டது, ஆனால் அவன் வரக் காணோம். அவனது பேச்சை நம்பி ஏமாறிய காதலியை நோக்கி, கார்காலமானது தன் பற்கள் தெரிய ஏளனமாக நகைக்கிறது என்பது அந்த நயமான கற்பனை.

இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ எனப்
பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கு எயிறாக
நகுமே தோழி நறுந் தண் காரே.

( குறுந்தொகை -- 126 )

பாட்டின் விரிந்த பொருள்:

"இளமையை எண்ணிப் பார்க்காமல், பொருளை விரும்பிப் பிரிந்து சென்றவர் இங்கு வரவில்லை, எங்கு இருக்கிறாரோ" என்று முல்லை அரும்புகளைப் பளிச்சென்ற பற்களாகக் கொண்டு கார்காலம் நகைக்கிறதே, தோழி!

(படம் : நன்றி கூகுள்)