Sunday 29 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 4




மறு - அடுத்த நாள்,   பெண் வீட்டுக்கு மணமக்கள் செல்வார்கள்: அதற்கு மறு என்று பெயர். மணமக்களுடன் மாப்பிள்ளையின் உறவுக் குடும்பம் ஒன்றும் போகும். ஒரு நாளாவது தங்கிபின், திரும்புவார்கள்இப்போது பெண்ணுக்குச் சொந்தக்காரக் குடும்பம் வரும்.

ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு உறவினர்கள் பயணிப்பார்கள். இதன் காரணமாய் மணமகளின் ஊர்வீடுஅக்கம்பக்கம் வாழ்வோர் ஆகியோரை மாப்பிள்ளை வீட்டாரும்இவர்களையும் சார்ந்தோரையும் பெண் வீட்டாரும்நன்கு அறிந்துகொள்வார்கள். அன்றுடன் உறவினர்கள் விடை பெற்றுச் செல்வார்கள்மூன்றாம் மறுவுக்குப் பின்பு யாரும்  இருக்கமாட்டார்கள்.

இக்காலத்தில் மாப்பிள்ளை ஓர் ஊர்,   பெண் வேறு ஊர்,   மணம் நடைபெறுவது இன்னோர் ஊரின் மண்டபத்தில்இந்த மண்டபம் மட்டுமே எல்லார்க்கும் தெரியும்.



இன்னமும் வேலை -- இரவல் வாங்கி வந்த பொருள்களை உரியவரிடம் திரும்பக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டாமா
சில பொருள்கள் காணாமல் போயிருக்கும்இழப்பீடு தரவேண்டும். இந்த வேலையும் முடிந்துவிட்டால், " அப்பாடா!" என்று ஆசுவாச மூச்சு விடலாம்.  சிலர் இரவு முழுதும் உறங்காமல் வேலை செய்திருப்பர். திருமண வேலைகள் அவ்வளவு சிரமம் பயப்பன;

ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல் உறவினர் பலர்  சேர்ந்து முழு  ஈடுபாட்டுடன் பல நாள் உழைத்தல் இன்றியமையாதது. ஆகவே தான் "கல்யாணம் பண்ணிப் பார்"  என்ற பழமொழி பிறந்தது.

தற்காலத்தில் பணம் இருந்தால் போதும்: எல்லா வித வேலைகளையும் செய்து தரப் பல குழுக்கள் ஆயத்தமாக இருக்கின்றனமண்டபங்களில் வசதியாக அமரவும் யாவரும் ஒரே நேரத்தில் உண்ணவும் முடிகிறது. வரவேற்கத்தக்க பெரிய முன்னேற்றம் தான். ஆனால் உறவு நெருக்கமும் அதனால் விளைந்த மனக் கலப்பும் மகிழ்ச்சியும் மறைந்து போயின.

ஒருபுறம் லாபம் மறுபுறம் இழப்பு:  இதுதானே வாழ்க்கையின் இயல்பு?

                                                                      (முடிந்தது)   


                                                ++++++++++++++++++++++++++++

(படங்களுக்கு நன்றி- கூகுள்)

Wednesday 25 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் -- 3



               

மதிய உணவு --- உண்பதற்கு என்று அக்கம் பக்கவீட்டார் தம் இல்லின் முன்பகுதியைக் காலி செய்து தருவர்ஒரு தடவையில் (பந்தி என்று பெயர்) முப்பது பேர் சாப்பிடலாம். இரட்டைக் கதவில் ஒன்று மட்டும் திறந்திருக்கும்: ஒருவர் மாத்திரம் நுழையலாம்.

மணமகன் உறவினர் ஒருவரும் பெண்ணின் சொந்தக்காரர் ஒருவரும் கதவின் அருகில் நின்று,    வரிசையாய் வருபவர்களுள் அந்நியர் இருந்தால்,  "நீங்கள் அப்புறம் சாப்பிடலாம்" என்று சொல்லி நீக்கிவிடுவார்கள். உள்ளே இடம் நிரம்பியதும் கதவு மூடப்படும்;
இனி அடுத்த பந்திதான். சாப்பாட்டுக்காக வரிசையில் நிற்பதே கேவலம் தான். கதவருகே போயும் திரும்பி வர வேண்டியிருந்தால், அதைவிட அவமானம். இரண்டையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்முதல் பந்தியில் இடம் கிடைத்தவர்,   நாம் இன்னம் உண்ணவில்லை என்பதை அறிந்து,   " பந்திக்கு முந்திக் கொள்ள வேண்டும்"  என்று உபதேசம் செய்கிற  பண்பாட்டுக் குறைவான பேச்சையும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்;   வேறு வழி இல்லை.

மின்விசிறிகள் அநேகமாய் இருக்காதுபனை மட்டையால் தயாரித்த அகலமான விசிறிகளை இரு பக்கமும் வீசி விருந்தினரின் புழுக்கத்தைக் குறைப்பது சிலரது பணி. 

மூன்று பந்திக்குப் பின்பு பெண்டிர்க்கும் குழந்தைகளுக்கும் பந்திபாவம் அதுவரை அவர்கள் பசியோடு காத்திருக்க வேண்டும். 

அதன் பின்புதான் கல்யாண வீட்டுக்காரர்களும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தோரும் உண்பார்கள். சாப்பிட்டு முடித்தோர் கை கழுவுவது எப்படிவீட்டின் வெளியே வைத்துள்ள நீர் நிரம்பிய பெரிய அண்டாவின் அருகில் சென்று இருவர் மூவராகக் குனிந்து கை நீட்டும்போதுஅங்கேகையில் சொம்பு நீருடன் தயாராய் நிற்கிற இருவர்கொஞ்சம் கொஞ்சமாய்நிறுத்தி நிறுத்தித் தண்ணீர் ஊற்றுவர்அண்டா அவ்வப்போது நிரப்பப்படும்.

மாலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் காரில் சேர்ந்து அமர்ந்து ஊர்வலம் வருவது உண்டு.  வசதி உடையவராயின் பந்தலில் இசைக் கச்சேரி நிகழும்.

  (பெண்ணழைப்புமாப்பிள்ளையழைப்புகச்சேரி ஆகியவை நாளடைவில் ஒவ்வொன்றாய்க் குறைந்து பின்பு மறைந்தேபோயின.)


                                                            (தொடரும்)

Monday 16 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் - 2


 மணவறை எனப்பட்ட மணமேடை,   முற்றத்திலும், இரு நாற்காலிகள்,   பந்தலிலும் மணமக்களுக்காகக் காத்திருக்கும்வாடகைக்குக் கிடைக்கும் அந்த மணமேடைதொங்கும் பல வண்ண மணிமாலைகளும் சட்டம் போட்ட மற்றும் எல்லாத் திசைகளிலும் ஒளி உமிழும் சிறு கண்ணாடிகளும் (mirrors) அணிந்து கண்ணுக்கு விருந்து நல்கும்.


  இரவில் பந்தல்வீட்டின் முன்கட்டு, பின்கட்டுசமைக்கும் இடம் முதலியவை பெட்ரோமாக்ஸ் விளக்குகளால் வெளிச்சம் பெறும்மின்  விளக்கொளி  போதாது.

 பெண் அழைப்பு -- மணம் பெரும்பாலும் மாப்பிள்ளை இல்லத்தில் நிகழும்.   அதற்கு முந்தைய நாள் பெண்ணையும் பெண்வீட்டாரையும் அழைத்துவந்து சொந்தக்காரர் நண்பர் அல்லது தெரிந்தவர் இல்லில் தங்கவைப்பார்கள். மாலை வேளை வந்ததும் "பெண் அழைப்பு" நடைபெறும்:

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, கூரையை மடக்கியதிறந்த காரில்பெண்ணை அமரவைத்து,   நாதஸ்வரக் குழு இன்னிசைமழை பொழியஇரு பக்கமும் ஆள்கள் சுமந்து வருகிற பெட்ரோமாக்ஸ் விளக்குகள் ஒளி பரப்ப, பெண்வீட்டாரும் பிறரும் சூழ்ந்து நடைபோடகார் மெதுவாகச் சில தெருக்களில் சுற்றி ஊர்வலம் வரும்.  

அங்கங்குச் சிறிது நேரம் நிற்பதும் உண்டு. மணவீட்டுக்கு அருகில் ஓர் இல்லத்தில் பெண்ணை இறங்கச் செய்வர்;   அங்கேதான் பெண்ணின் உறவினர்கள் தங்கி இருப்பார்கள். (பெண்வீட்டில் மணம் நிகழ்ந்தால் "மாப்பிள்ளை அழைப்பு" நடைபெறும்.

 மண நாள் -- வீட்டின் உள்ளும் திண்ணைகளிலும் பந்தலிலும் விரிக்கப்பட்டிருக்கும் சமக்காளங்களின்மீதும் பாய்களின்மேலும் ஆண்கள் சம்மணம்கொட்டி அமர்வார்கள்;   பெண்கள் வீட்டினுள் ஒரு பகுதியில் உட்கார்வார்கள்.


சடங்குகள் முடிந்த கையோடு மணமக்கள்  பந்தலில் வந்து  அமர்ந்ததும் மொய் எழுதும் சம்பிரதாயம் நிகழ்ந்து கொண்டிருக்கதாம்பாளங்களை ஏந்தி வரும் சிலர் முதலில் சந்தனம், அடுத்துச் சீனிகடைசியாய் வெற்றிலை என யாவர்க்கும் வழங்குவர்நெருக்கமாய் உட்கார்ந்திருப்போர் இடையேஅவர்களை மிதிக்காமல்உதைக்காமல்தலையில் தாம்பாளத்தைப் போட்டுடைக்காமல்எவரையும் விட்டுவிடாமல்எச்சரிக்கையாய் அடி வைத்து முன்னேறிகுனிந்து குனிந்து தாம்பாளம் நீட்டுவது கடினமான மற்றும் பழக்கம் தேவைப்படும் பணிதாம்பாளம் காலி ஆக ஆகநிரப்பிய வேறு தாம்பாளம் கொண்டுவந்து தரப்படும்.
(தொடரும்)

படங்கள் உதவி; இணையம்

Monday 9 September 2013

அரை நூற்றாண்டுக்குமுன் திருமணம் - 1



இப்போதைய திருமணங்கள் மண்டபங்களில் நிகழ்கின்றன. முன்பு எங்கே நடந்தனஎப்படி நடந்தன என்பதைப் பகிர்கிறேன்: பழைய பழக்க வழக்கங்கள் சிலவற்றை இப்பதிவு ஆவணப்படுத்தும்.

முன்னேற்பாடுகள் - வீடுகளில்தான் மணங்களை நடத்தினார்கள். உள்ளே இடம் போதாது என்பதால்வீட்டெதிரில், தென்னங்கீற்றுப் பந்தல் வேய்ந்தார்கள். நல்ல நாள் பார்த்துக் கால் நட்டு வேலை தொடங்குவர்; முடிந்தவுடன்உள்பக்கக் கூரை முழுதையும் வெள்ளை வேட்டிகளைக் கிடைமட்டமாய்க் கட்டிக் கீற்று தெரியாதபடி மூடிப் பாக்குக்குலை, ஈச்சங்குலை, தென்னங்குலை ஆகியவற்றை அங்கங்கே தொங்கவிட்டு அணிசெய்துகீழே ஆற்று மணல் கொட்டிப் பரப்பிஇரு பக்கமும் அமைத்துள்ள நுழைவாயிலில் தாறு தள்ளிய வாழை மரங்களை நிறுத்திக் கட்டுவார்கள்.

(எல்லாப் பொருள்களும் இயற்கைசுற்றுச் சூழலுக்குச் சிறு மாசும் இல்லை. போக்குவரவுக்கு வழி விட்டுப் பந்தல் அமையும்; குறுகிய தெருவாய் இருந்தால்இரண்டு மூன்று வீடுகளுக்குப் பந்தல் நீளும்)

உறவினர் கூடல் - அழைப்பிதழில்,  "நான்கு நாள் முன்னதாக வந்திருந்துஎன்னும் சொற்றொடர் தவறாமல் இடம் பெறும்அதற்கு ஏற்பநெருங்கிய உறவினர்கள் ஒரு வாரம் முன்பிருந்தே அன்றாடம் குடும்பங் குடும்பமாய் வந்து தங்குவார்கள். கூட்டுக் குடும்ப முறைக் காலமாதலால், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் பத்து உறுப்பினர்களாவது இருந்தனர்; அவர்களுள் சிலர் வந்து தங்க முடிந்தது.

பெண்களுக்கு என்ன வேலைஎல்லார்க்கும் உணவு சமைத்துப் பரிமாறுதல்தேவை திங்களுக்கெனப் பரண்களில் பத்திரப்படுத்தியிருந்த பென்னம்பெரிய பித்தளைப் பாத்திரங்களை இறக்கித் தரச்செய்து, புளி தேய்த்து விளக்கிப் பளபளப்பாக்கிக் கழுவித் திருமணச் சமையலுக்குத் தயார் செய்துவைத்தல்வாங்கி வருகிற அரிசிதுவரை முதலான மளிகைப் பொருள்களைப் புடைத்துக் கல்மண்கட்டி நீக்கித் தூய்மைப்படுத்திப் பானைகளில் கொட்டிவைத்தல் (தூய பொருள் கிடைக்காத காலம்), உலக்கை கொண்டு உரலில் மா இடித்தல்இட்டலிக்குத் தேவையான மாவைக் குடைகல்லில் அரைத்தல்இல்லத்தின் அகமும் புறமும் மாக்கோலம் இழைத்து அழகுபடுத்தல் முதலியவை.

ஆண்கள்குழுக்களாய்ப் பிரிந்து பந்தல் வேலையைக் கண்காணித்தல்பல ஊர்ச் சந்தைகளுக்குப் போய்க் காய்கறிகள், தேங்காய்வாழையிலைக் கட்டுகள்வாழைப்பழம்வெற்றிலை என வாங்கிப் பேருந்துக் கூரையில் போட்டுக் கொண்டுவருதல் முதலிய பணிகளை மேற்கொள்வார்கள். இலைக் கட்டுகளைப் பிரித்துக் கிழிசல்களை நீக்கி முழு நீள இலைகளைச் சாப்பாட்டுக்குசிற்றுண்டிக்கு எனத் தனித்தனி அளவாக நறுக்கி,  (இதற்குப் பழக்கம் அவசியம்: இலைகள் சேதம் உறாமல் கணித்து நறுக்கவேண்டும்) அடுக்கி வைப்பார்கள்.

கல்யாண வீட்டுக்கார ஆண்கள்வந்திருக்கிற உறவினர் சிலருடன் சேர்ந்து தெரிந்தவர்களிடம் சென்றுபெரும்பெரும் சமையல் பாத்திரங்கள், சமக்காளங்கள்பந்திப் பாய்கள், தாம்பாளங்கள் என்று தேவைப்படும் பொருள்களை இரவலாய்ப் பெற்றுப் பாரவண்டியில் ஏற்றி வந்து யார்யார் வீட்டில் வாங்கியது என்பதற்குச் சுண்ணாம்பால் அடையாளக் குறி போட்டு வைப்பார்கள்.

இப்படி எல்லாருக்கும் வேலை இருக்கச் சிறுவர்களுக்கு மட்டும் கொண்டாட்டமோ கொண்டாட்டம்: நிறையப் பிள்ளைகள் கூடியிருப்பதால், பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டுஓடியாடி உற்சாகமாக விளையாட அருமையான வாய்ப்பு அல்லவா?

                                                         (தொடரும்)
                     

                                                                                                               

Thursday 5 September 2013

கலம்பகம்

       
   தமிழ்ச்  சிற்றிலக்கிய  வகைகளுள்  சிறந்தவையாகக்  கருதப்படுபவற்றுள்  ஒன்று  கலம்பகம்.   புயம் , அம்மானை ,  மறம்  முதலான  18  உறுப்புகளைக்  கொண்டு  அகவற்பா ,  வெண்பா ,  கலிப்பா  முதலிய  பாக்களால்  பாடப்படுவது  அதன்  இலக்கணம் . பற்பல  உறுப்புகளும்  பலப்பல  பாக்களும்  கலந்து  வருவதால்  கலம்பகம்  எனப்  பெயர்  பெற்றது .  ( கலப்பு + அகம்)  என்று  பிரிப்பார்கள் .

   கடவுள் ,  வேந்தர் ,  முனிவர்மீது  பாடியவை  எனக்  கலம்பகத்தில்  மூன்று  விதம்  உண்டு .
 
   பல்லவ  மன்னன்  மூன்றாம்  நந்திவர்மன்மீது  ( 9 ஆம்  நூ . )  பாடப்பெற்றது    நந்திகலம்பகம் ;  ஆசிரியர்  பெயர்  தெரியவில்லை. அதில்  ஒரு  பாடல்.

   ஒருவன்  தன்  காதலியைப்  பிரிந்து  சென்றான்,   செல்வம்  ஈட்டுவதற்கு; அந்தப்  பிரிவைத்   தாங்க  இயலாமல்  துன்புறுகிறாள்  இவள்; உள்ளத்தைத்  துயரம்  கப்பி  இருக்கும்போது  வெளியுலக  இன்பம்  அந்தச்  சோகத்தை  அதிகப்படுத்துமே  ஒழிய  அதைக்  குறைக்காது  அல்லவா?   சுற்றுமுற்றும்  மகிழ்ச்சி  நிரம்பிய  சூழ்நிலை  நிலவினாலும்  இவளுக்கு  மட்டும்  துயரம்தான்.
                         
அதை  வெளிப்படுத்தினாள்   ஒரு  பாட்டில்:
                       
                         மலர்களில்  அமர்ந்து  வண்டுகள்  ஆரவாரிக்கும்  காலம்
                         மாந்தளிர்களில்  குயில்கள்  கோதும்  காலம்
                         சிலர்க்குத்  தென்றல்  இன்பம்  தரும்  காலம்
                         பாவி  எனக்கு  அதே  தென்றல்  தீயாய்  வீசும்  காலம்.
                                                                                   
                                          இனிப்  பாட்டை  வாசிப்போம் :


                   மலர்ச்சூழல்   அமர்ந்துஇனிய   வண்டுஆர்க்கும்   காலம் 

                     வரிக்குயில்கள்   மாவில் இளம்   தளிர்கோதும்   காலம் 

                   சிலர்க்குஎல்லாம்   செழும்தென்றல்   அமுதுஅளிக்கும்   காலம்

                     தீவினையேற்கு   அத்தென்றல்   தீவீசும்   காலம் .

                                                         (  பா  60 )
   
 

               
                       ===========================