Saturday 8 November 2014

ஒரு கருமி பற்றிய குட்டிக் கதை

 ஒரு  கருமி  பற்றிய  குட்டிக்  கதை 
நான்  சிறு  வயதில்  படித்தது  




    அடிப்படைத்  தேவைகளுக்குக்கூட   செலவு  செய்யாமல்  கஞ்சனாக  இருப்பது  தவறு.   ஆயினும்   சிலர்   அப்படித்தான்  வாழ்கின்றனர்.

    ஒரு  பேர்பெற்ற  கருமி   தற்செயலாய்ப்   பூனைக்  குட்டி யொன்றைக்  கொன்றுவிட்டான்அது  பெரும்   பாவம்  என்பது  நம்பிக்கை  யல்லவாஅதனால்    நரகத்தில்  உழல   நேருமே  என்றெண்ணிக்    கவலை  கொண்டான்.

   எல்லாப் பாவங்களுக்கும்  பரிகாரம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களேஇதற்கு   இல்லாமலா  போகும் என  நினைத்து   ஒரு  புரோகிதரை  அணுகி,

  "ஐயாஒரு  பூனைக்   குட்டி  சாக  நான்   காரணமாய்  இருந்துவிட்டேன்கொல்வது  என்   நோக்கமல்ல;   இருந்தாலும்    அது  பாவந்தான்  என்று  நம்புகிறேன் .   என்ன  பரிகாரம்    செய்ய  வேண்டும்     என்பதைச்  சொல்லுங்கள்”  என்று  கேட்டான்.  

அகப்பட்டான்  ஒருவன்    என்று  மகிழ்ந்த   அவர் , " பசுவைக்  கொல்வது   எவ்வளவு  பாவமோ   அவ்வளவு  பாவம்  பூனையைக்  கொல்வதும்   என்று  சாஸ்திரம்   சொல்லுகிறது ;   அதைப்  போக்குவதற்கு   வழியையும்  காட்டுகிறதுஎன்று  பதில்  அளித்தார்.  

   ---   அதைச்  சொல்லுங்கள்  என்றுதான்  கேட்கிறேன்.

   ----  தங்கத்தால்   பூனை   செய்து  எனக்குத்  தானம்  கொடுத்தாயானால் ,
பாவம்  நீங்கிவிடும்.

    ----  தங்கமாஐயோஅவ்வளவு  பணம்   என்னிடம்   இல்லையே!

   ----   அப்படி   யென்றால்வெள்ளிச்  சிலை    கொடு.

    ----  அதற்கும்  வழி  இல்லைஐயரே.

    ----  செம்புதர  முடியுமே?

    ----  ஊகூம்,   இன்னம்   குறைவான  செலவாக   இருக்க  வேண்டும்.

    ---- பெரிய   பாவத்துக்கு  உரிய  பரிகாரம்  தேவை;    நீ  என்ன  இப்படிப்  பேரம்  பேசுகிறாய்போனால்  போகிறது,    வெல்லத்தால்  கொடு.

    ----  அது  முடியும்.   அதைக்  கொடுத்தால்    பாவம்     போய்விடும்  என்பது  நிச்சயந்தானே?

     ----  அதிலென்ன  சந்தேகம்?   அந்தப்  பாவத்தை    நான்   ஏற்றுக்கொண்டுவிடுவேன்.   அதிலிருந்து  நான்   நீங்குவதற்கு   எங்கள்  மொழியில் மந்திரம்   உண்டு.

     ---   இதோ   தருகிறேன்.

   கருமி  ஒரு    கைப்பிடி  வெல்லத்தில்  பூனை   உருவாக்கிக்  கொடுத்தான் . கிடைத்தவரைக்கும்   லாபம்  என  மகிழ்ந்த   புரோகிதர்  அதைக்  கையில் வாங்கியதுதான்  தாமதம்,   கருமி   அதைத்   தட்டிப்   பறித்துக்   கொண்டான்.
  
    கைக்கு  எட்டியது   வாய்க்கு  எட்டவில்லையே    என்ற  சோகத்துடன்  புரோகிதர்,  "அடப்   பாவி!   தானத்தைப்  பிடுங்கிக்கொண்டாயே!   யாராவது   இப்படிச்  செய்வார்களா?"      எனக்   கேட்டதற்கு,   அவன்,   "பூனையைக்  கொன்ற பாவம்  உங்களுக்குவெல்லம்  பிடுங்கிய  பாவம்   எனக்கு;   போய்  வாருங்கள்என்று  விடை   தந்தான்.

                                                 +++++++++++++++++++++++++