Sunday 21 June 2015

வாமன ஐரோப்பா (Mini Europe)


   


2008-இல்  நான், பெல்ஜியத்  தலைநகர்  பிரசல்சில்,   "மினி  யூரப்என்னும்  காட்சிச் சாலையைப்  போய்ப்  பார்த்தேன்;   கட்டணஞ் செலுத்திய  சீட்டுடன்  நுழைய  வேண்டும்.   ஐரோப்பிய  ஒன்றியத்தில்  சேர்ந்துள்ள  நாடுகளின்  முக்கிய  கட்டடங்களை   1/25 என்ற  அளவில்அச்சு  அசல்  அதே  மாதிரிஅதே  வண்ணங்களில்ஒரு  மிக  விசாலமான  நிலப் பரப்பில்  உருவாக்கி  வைத்திருக்கிறார்கள் .   நாட்டுக்கு  நாடுகட்டடங்களின்  எண்ணிக்கை  வேறுபடுகிறது;  (ஒன்று  முதல் பதினாறு வரை). விலங்ககத்தில்  பகுதி  பகுதியாய்ப்  பார்த்துக்கொண்டு  போவது போலப்  போக  வேண்டும்.

     பிரஞ்சு  மொழியில்  64  பக்கங்  கொண்ட ஒரு  கையேடு  தந்தார்கள். (வேறு மொழியிலும் உண்டு)அதில்   கட்டடங்களின்  படங்கள்ஒரிஜினல்  நிறங்களில்  விளங்குகின்றன.  அவற்றின்  பெயர்கள், சிறப்பம்சங்கள், வரலாற்றுக்  குறிப்புகள்,   நாடு  மற்றும்   மக்கள்  பற்றிய  முக்கிய  தகவல்கள்  கொண்ட   அந்தக்  கையேட்டின்  உதவியால்   நாம்  ஒவ்வொன்றையும்  நுணுக்கமாகப்  பார்த்தறியலாம்ஒரு  பொத்தானை  அழுத்தினால்  அந்தந்த  நாட்டின்   தேசியப்   பண்  ஒலிக்கும்.

   ஜூலைஆகஸ்ட்  மாத  இரவில்பிரகாசமான  ஓளியில்  மூழ்கியுள்ள  அந்தக்  கட்டடங்களைப்  புதுக்  கோணத்தில்  கண்டு  மகிழலாமாம்.

    கையேட்டின்  சில முக்கிய  தகவல்களை  இங்குப்  பதிகிறேன்:

    யூரப் என்பது   பினீசிய மொழிச்  சொல்லான    எரேப் (ereb) பிலிருந்து வந்ததுஅதன் பொருள்: மேற்கு

     பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, இத்தாலிலக்சம்பர்க்   ஆகிய ஆறு  நாடுகள்  கூடி,   9-5-1957 இல்,   ஐரோப்பிய ஒன்றியம்   என்னும்  அமைப்பைத்   தோற்றுவித்தனபிற  நாடுகள்  அவ்வப்போது  சேர்ந்து  சேர்ந்துஅது  2007 இல்  இருபத்தேழு  தேசங் கொண்டதாய்ப்  பரிணமித்தது. அதன்  தலைநகரம்  பிரசல்ஸ்கொடிகருநீலநிற  நீள்சதுரப்  பின்னணியில்  அகன்ற வட்டமாய்ப்  பொறித்த  பன்னிரண்டு  விண்மீன்கள்  கொண்டது.  இவை  செம்மைக்கு (perfection)  அடையாளமாம்.   நாணயம், யூரோ.

     இனிச்    சில  நாடுகளைப்    பற்றி:

   1 - பெல்ஜியம் – (16 கட்டடம்) - உலக   வைர  உற்பத்தியில்  70%  இந்  நாட்டினுடையது.

    2 --செக்  குடியரசு --(1)  --மக்களுள்   40% மேல்  நாத்திகர்.

    3 --டென்மார்க் -(3) -  406  தீவுகளால்  ஆன   நாடு;  97 இல்  மட்டும்  மக்கள்  வாழ்கிறார்கள்.

     4 -- எஸ்த்தோனியா -  (1) --அதிக  அளவில்    காளான்   உண்கிறார்கள்; கிட்டத்  தட்ட  அறுபது  வகை.

      5 -- பின்லாந்து --(1) -- 70%  பிரதேசம்  காடு.

      6 -- ஜெர்மனி -- (10) --ஐரோப்பியருள்  ரொட்டியை  மிகுதியாக  உண்பவர்கள்.

      7 -- ஹாலந்து - (15) -  பத்துப்  பேரில்   எட்டுப்  பேர்  மிதிவண்டி  வைத்திருக்கின்றனர் .   உலகஞ்  சுற்றுபவர்களுள்    இவர்களே  அதிகம்

      8 -- இத்தாலி - (10) -  உடைக்காக  எக்கச்சக்கமாய்ச்  செலவு  செய்பவர்கள்.

      9 -- லித்துவேனியா - (1) -   மொழி,   சமற்கிருதத்துடன்  மிக  நெருங்கிய  உறவு  உடையது

     10 -- போலந்து - (1) -- 97 %   பரப்பளவுகடல்  மட்டத்திலிருந்து   500  மீட்டருக்குமேல்  இல்லை.

      11 -- ஸ்பெயின் --(5) --ஆரஞ்சு  விளைச்சல்  அமோகம்.

       12 -- ஸ்வீடன் -- (1) --சொந்தப்  பெயர் ,   ஸ்வெரிட்ஜ். (ஸ்வேர்களின்  நாடு) . 8  ஆம்  நூற்றாண்டில்  இங்கு  வாழ்ந்த  மக்கள்  ஸ்வேர்.

       13 -- ஐக்கிய  அரசு , (U.K .) --(10) - லண்டன்  நாடாளுமன்றக்  கட்டடத்தின்  கடிகாரம்  பெஞ்சமின்  ஹால்  (Benjamin Hall) என்ற  ஒப்பந்தக்காரரால்  அமைக்கப்பட்டதுஅவர்  பருத்தவர்  ஆதலால்,  'பிக்  பெஞ்சமின்'  (Big  Benjamin)  எனப்பட்டார்; சுருக்கமாய்  பிக் பென்அதுவே  கடிகாரத்தின்  பெயராயிற்று.

                                                =================================

Sunday 7 June 2015

ரோமானியரின் இன்னொரு கொடை

       


 இப்போதைய இராக்கில் மிகப் பழங் காலத்தில் வாழ்ந்த சுமேரியர்களின் மன்னன் அம்முராபி (Hammurabi) -- பொ.யு.மு. 21 ஆம் நூற்றாண்டு -- உலகில் முதன்முதலாய்ச் சட்டங்கள் இயற்றியவன்; 282 ஷரத்து கொண்ட அவை எவ்வாறு அமல்படுத்தப்பட்டனவோ,தெரியாது; அரசனே நீதிபதியாய் இருந்திருப்பான்.

  அடுத்ததாக, சட்டம் பிறப்பித்தவர்கள் யூதர்கள்; அவர்களின் சட்டங்கள் விவிலியம் லேவியராகமம் அதிகாரம் 19, 20 இல் எழுதப்பட்டுள்ளன; இவற்றின் காலம் பொ.யு.மு. 13 ஆம் நூற்றாண்டு; இங்கும் வேந்தனே நீதிபதி. அரசன் சாலமன் சிறந்த முறையில் நீதி வழங்கினதாய் அறிகிறோம். இருந்தாலும் விசாரணை, சாட்சிகள் முதலியவை குறித்துத் தகவல் கிடைப்பதால் யூதரின் நடைமுறை சுமேரியருடையதைக் காட்டிலும் மேம்பட்டது எனத் தெரிகிறது.

 இக்காலத்தில் நீதித் துறை என ஒன்று, உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் இயங்குகிறது; எழுதப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை, விசாரணை, வாதப் பிரதிவாதம் முடிந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த முன்னேற்ற நடைமுறையானது பாருக்கு எழுத்தறிவித்த ரோமானியரின் இரண்டாம் கொடை.

 ரோமானியரின் ஆட்சியில், மேலவை (செனேட்) என்ற சபை, சட்டங்களை உருவாக்கிற்று; சட்டம் பயின்றவர்கள் வழக்குரைஞர் ஆயினர். ஆரம்பத்தில் எழுத்து வடிவம் பெறாதிருந்த சட்டங்கள் யாவும், பொ.யு.மு. 451 இல், பன்னிரண்டு வெண்கல ஏடுகளில் பொறிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன; அவை பல நூற்றாண்டுக் காலம் அமலில் இருந்தன. சிவில் சட்டம்,குற்றவியல் (க்ரிமினல்) சட்டம் எனப் பின்னர் பிரித்தார்கள்.

  பொ.யு.மு. 2 ஆம் நூற்றாண்டில், குற்றவியல் மன்றங்கள் தனியே அமைந்தன. நாட்டுக்கு எதிரான துரோகம், அதிகார முறைகேடு, பொதுப் பணம் கையாடல், கள்ள நாணயத் தயாரிப்பு, ஆவண மோசடி முதலியவற்றைக் க்ரிமினல் குற்றங்களாய்க் கொண்டு அவற்றுக்குத் தண்டனையாய், சவுக்கடி, நாடு கடத்தல், கைகால் வெட்டல், கொலைத் தண்டனை பெற்றவர்களை சிலுவையில் அறைதல் அல்லது சிங்கத்துக்கு இரையாக்கல் ஆகியவை விதிக்கப்பட்டன.

 கொலைத் தண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டோர் மேல் முறையீடு செய்யலாம்.

 நீதிபதிகளை மேலவை நியமித்தது; இவர்களுக்கு முக்கிய வழக்குகளில் உதவுவதற்கு  ஜூரிகள் சீட்டுக் குலுக்கல் முறையில் தேர்வானார்கள். சிறைக் கண்காணிப்புப் பணியைப் பட்டாளத்தாரிடம் ஒப்படைத்தனர்.

   பொ.யு. முதல் நூற்றாண்டில் முக்கிய சிவில் சட்டங்கள் அடங்கிய நூலொன்று வெளிவந்தது; அடுத்து விவரமான நூல்கள் தோன்றின. தேவைக்குத் தக்கவாறு புதுச் சட்டங்கள் பிறந்தன; பழையன நீங்கின அல்லது திருந்தின.

 சக்கரவர்த்தி ஜஸ்டினியன் (ஆறாம் நூ.) பதினாறு வழக்குரைஞர் கொண்ட குழுவொன்றை அமைத்துச் சட்டங்களைச் சீராக்கப் பணித்தார்; அது 11 ஆண்டு உழைத்துச் சுமார் 30 லட்சம் வரிகளில் விரிந்திருந்த சட்டங்களை ஒன்றரை லட்சமாய்த் தொகுத்தது. 'ரோமானிய சட்டத் தொகுப்பு' ( Digest Of Roman Law) என்கிற அது, உலகக் குடியரசு நாடுகள் யாவற்றுக்கும் நீதித் துறைக்கான வழிகாட்டி.

   ரோமானிய சட்டங்களுக்கு முக்கிய அடிப்படை இரண்டு:

   1 -- சட்டத்தின்முன் யாவரும் சமம்.

   2 -- குற்றவாளி தப்பிக்கலாம், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.

  இன்றைக்கும் இந்த அடிப்படை நீடிக்கிறது.

 1100 இலிருந்து பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் சட்டங்களைத் திருத்தியும் விரிவாக்கியும் மேம்படுத்தினர். அவை தொடக்கத்தில் ஐரோப்பா முழுதிலும் பின்பு அமெரிக்காவிலும் படிப்படியாய் அமலுக்கு வந்தன.

   ஆங்கிலேயர், பிரஞ்சியர் முதலானோர் ரோமானிய சட்டங்களைத் தத்தம் மொழியில் பெயர்த்தபோது, பற்பல லத்தீன் சொற்களையும் சொற்றொடர்களையும் மாற்றாமல் அப்படியப்படியே சேர்த்துக்கொண்டார்கள்.

    சிலவற்றின் பொருள்:

   -- அலிபி (alibi) - குற்றம் நிகழ்ந்த இடத்தில் தான் இல்லை என்பதற்கான சான்று.

   -- ஹேபியஸ் கார்ப்பஸ் (habeas corpus) - ஆள் கொணர் மனு.

   -- இன் கமேரா (in camera) - நீதி மன்றத்தில் அல்லாமல் தனியிடத்தில்.

   -- மலா ஃபிடே (mala fide) - கெட்ட நோக்கத்துடன்.

   -- போஸ்ட் மார்ட்டேம் (post mortem) - பிரேதப் பரிசோதனை.

   -- சப் ஜ்யூடிசி (sub judice) - கேஸ் விசாரணையில் இருக்கிறது.

   -- அல்ட்ரா வைரேஸ் (ultra vires) - உரிமை வரம்புக்கு அப்பாற்பட்ட.

     (பட்டியல் நீளமானது:  ad hoc, amicus curiae, bona fide, cui bono, de facto, de jure, interim, mutatis mutandi, persona non grata, prima facie, referundum, sine die, sine qua non, suo moto, veto)

     மரண வாக்குமூலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணால் கண்ட சாட்சி இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது சாவுப் படுக்கையில் வாக்குமூலமாகச் சொல்கிற எல்லாம் உண்மை என முழுமையாக ஏற்று அதை வழக்குக்கு முக்கிய ஆவணமாகக் கொள்வர். சாகப்போகிறவர் பொய் பேசமாட்டாரா? மாட்டாராம். ரோமானிய சட்ட வாக்கியம் கூறுகிறது:

   Nemo moriturus praesumitur mentire (யாரும் தமது உதட்டில் பொய்யோடு கடவுளைச் சந்திக்கமாட்டார்).

    இறுதியில் ஒரு லத்தீன் துணுக்கு:

  பொதுப்பணத்தைச் சுருட்டிய ஓரதிகாரி குற்றவாளிக் கூண்டில் நிற்கையில், அரசு வழக்குரைஞர் அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனத் தீவிரமாய் வாதாடினார். அவரது பெயர் கத்துலுஸ். (இதற்கு நாய்க்குட்டி என்றும் அர்த்தமுண்டு)

    ஒரு கட்டத்தில் எரிச்சலுற்ற அதிகாரி அவரை நோக்கி,

  "கத்துலுசே, ஏன் குரைக்கிறாய்?"

 என்று இரு பொருள்பட வினவிய  அடுத்த கணம் அவர் பதில் இறுத்தார்:

   "ஏனென்றால் திருடனைக் கண்முன் காண்கிறேன்" 

 (Catulle, quare latras?
 Quod prae me furem video).


               +++++++++++++++++++++++++