Sunday 30 August 2015

செல்லாதா?

              

   (சிறு வயதில்  நான் படித்த சில கதைகளை  அன்பர்களுடன் பகிர விரும்புகிறேன்; சிலர்க்கு முன்னமே தெரிந்திருக்கலாம்)





   போக்குவரத்து  வசதி  இல்லாக் காலம்.

   ஆணிமுத்து செட்டியாரும்  அவருக்கு அறிமுகமான பூவழகனும்  சேர்ந்து வாணிகத்துக்காகப்  பணத்துடன் வேற்றூருக்கு நடந்து சென்றனர். வழியில் சிறு  காடொன்றைக்  கடக்க நேர்ந்தது. முற்பகல்தான்  எனினும்பலவகை மரங்களின்  கனத்த  அடர்த்தி  காரணமாய்ப்  போதிய வெளிச்சம் இல்லை.

  "மடியில்   கனமிருந்தால்  வழியில் பயம் " என்பது  பழமொழி . கள்ளர்கள்  வருவார்களோ  என்ற அச்சம்  மேலிட்டவர்களாய்கடவுளை வேண்டிக்கொண்டு  விரைந்த அவர்கள், தொலைவில்கும்பலாய் ஐவர்  வரக் கண்டனர்.

   செட்டியார்  சொன்னார்:

  "திருடராக இருக்கலாம். நீ அதோ  அந்த  மரத்தடியில்  படுத்துக்கொள்; நான் கொஞ்ச  தூரத்தில் படுக்கிறேன்;  கைகாலை அசைக்காமல்,  ஓசை எதுவும் வெளிப்படுத்தாமல், மூச்சைக்கூட  பலமாய் விடாமல், செத்ததுபோலக்  கிடந்தால்,  அவர்கள்  கவனிக்காமல் போய்விடுவார்கள்".

   அப்படியே  செய்தார்கள். கூட்டம் நெருங்கியது. ஒருவனின்  கால் பூவழகனுடைய  உடம்பின்மேல்  இடித்ததுஅவன்  குனிந்து  பார்த்து, "இங்கே ஒரு பிணம் கிடக்கிறது"  என்றான்.

    தன்னைப் பிணம் என்று சொல்லக் கேட்ட பூவழகன், கடுங் கோபம் கொண்டு, "உங்கள் வீட்டுப்  பிணம்  இப்படித்தான்  மடியில் பணத்தைக்  கட்டிக்கொண்டு  படுத்திருக்குமோ?" என  அதட்டும் குரலில் கேட்டான்.

    உடனே அவனைப் பிடித்துத் தூக்கிப் பணத்தைப்  பிடுங்கிக்கொண்டனர். அதில்  ஒரு  நாணயத்தை  உற்று  நோக்கிய ஒருவன், "இது செல்லாக்  காசு  என்று  நினைக்கிறேன்" என்றவுடன்,  பூவழகன்,  "செல்லாதா? செல்லும்  செல்லாததற்கு அதோ படுத்திருக்கிற  செட்டியாரைக் கேள்" என யோசனை சொன்னான். அப்போதுதான்  அவரைப் பார்த்தார்கள்அவரது பணமும் பறி போயிற்று என்று  சொல்லவேண்டுமோ?

   இந்தக்  கதையிலிருந்து, "செல்லுஞ்  செல்லாததற்குச்  செட்டியாரைக்  கேள் " என்னும்  பழமொழி  பிறந்தது. எது குறித்தாவது  ஐயம் தோன்றினால்  இந்தப்  பழமொழியைப்  பயன்படுத்துவார்கள்.

                   ----------------------------------------------------

 (படம் ; நன்றி இணையம்)

Wednesday 12 August 2015

உயர்ந்தவனா மனிதன்?

   
     பிற விலங்குகளைக் காட்டிலும் மேலானது மானிடப் பிறப்பு எனவும் நிறையப் புண்ணியம் 
செய்த உயிரே மனிதனாகும் எனவும் புல் பூண்டு பூச்சி பற்பல விலங்குகள் என்று மாறிமாறிப் 
பிறந்து இறுதியில்தான் மாந்தராவார் எனவும் மக்களிடையே நம்பிக்கை உண்டு; ஆனால் 
மனிதனும் ஒரு விலங்குதான் என  அறிவியல் பறைசாற்றுகிறது. குரங்கின் பரிணாமந்தானே 
மனிதன்?

    பறவை அறிஞர் சாலிம் அலி கூறியுள்ளார்:

   “பிற உயிர்களிலிருந்து மனிதன் எவ்வகையிலும் மாறுபட்டவனல்லன் என்று நான் 
உறுதியாக நம்புகிறேன். மற்ற விலங்குகளுக்கு உள்ள ஆதாரமான தூண்டுதல்கள், இயல்புகள், 
பழக்க வழக்கங்கள்தான் இவனிடமும் இருக்கின்றன; ஆனால் மனித மூளை அதிக வளர்ச்சி 
பெற்றுவிட்டது; அதைக் கொண்டு தன்  செயலையும் சிந்தனையையும் பகுத்தறிவு கொண்டு 
அமைத்துக்கொள்ள முடிகிறது; அதே சமயம் கடவுள் விதித்த விதி என்று நினைத்துப் 
பிற உயிர்களைவிடத் தானே   உயர்ந்தவன் என்ற பொய்யான ஒரு முடிவைத் தனக்குள்ளே 
கற்பித்துக்கொண்டிருக்கிறான்.

     டார்வின், மற்ற உயிர்களிலிருந்து இயற்கைத் தேர்வின் வழியாக உருவானவன்தான் 
மனிதன் என்று சொன்னார்; இதை நம்புவது எனக்கு எளிதாக  இருக்கிறது. எனவே மனிதன் 
என்பது உன்னதம் பெற்றதொரு வாலில்லாக் குரங்குதான் என்றே நம்புகிறேன். மனிதனைப் 
போலவே விலங்குகளிடமும் அழகியல் மற்றும் நெறிமுறை எண்ணங்கள் இருக்கத்தான் 
செய்கின்றன. எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் போவர் பறவைகள் குறித்துப் பார்க்கலாம்:
       
போவர் பறவை
     
     ஆண் பறவை கவனத்துடன் தரைப் பகுதியொன்றைத் தேர்ந்தெடுத்து சுத்தஞ்  செய்து 
அங்கே சுள்ளிகளைச் சேர்த்து வைத்துக் கூடு கட்டுகிறது; வண்ணப்  பொருட்களைக் கவனத்துடன்  
பார்த்து எடுத்து வந்து கூட்டின் உட்புறத்தினை அழகு  செய்கிறது; பல வேளைகளில் அந்தப் 
பொருட்களை வெகு தூரத்திலிருந்தும் கொண்டுவருகிறது; இவையெல்லாம் தன் 
பெட்டையை மகிழ்விக்கத்தான்.

தூக்கணாங்குருவி
     
     நம் நாட்டிலேயே தூக்கணங்குருவியை எடுத்துக்கொள்ளலாமே! இதிலும்  ஆண்தான் 
கூடு கட்டுகிறது; கூடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது இதே போன்ற பல கூடுகளைப்  
பார்த்து ஒன்றைப் பெண் குருவி தேர்ந்தெடுக்க அதற்குப்  பிறகு ஆண் குருவி கூட்டைக் 
களிமண்ணை  வைத்து வண்ண மயமான மலரிதழ்களைப் பொருத்தி அழகு செய்து முற்றாகக் 
கட்டி முடிக்கிறது. ஒரு பெண்துணையைக் கவர இவற்றையெல்லாம் செய்கிறது ஆண்!“
      
     (ச. முகமது அலி இயற்றிய “பறவையியல் அறிஞர் சாலிம் அலி“ என்னும்  நூல். 
பக்கம் 71 – 73)

                                +++++++++++++++
(படங்கள்: நன்றி இணையம்)

Sunday 2 August 2015

மாந்தர் வரலாறு (தொடர்ச்சி- 2)


    நிமிர்ந்த இனத்திலிருந்து  2 //மு  பரிணமித்தது  ஹொமோ செப்பியன்ஸ்  (Homo sapiens); செப்பியன்ஸ் = புத்திசாலி.  இதன்  பிரிவுகள் இரண்டு:

   1 --- ஹொமோ செப்பியன்ஸ் நீயெண்டெர்த்தாலென்சிஸ் -- நீயெண்டெர்த்தால்கள் 35,000 / முன்வரை மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள்  என்பதை  அறிவோம்.

   2 --- நவீன ஹொமோ செப்பியன்ஸ் (Modern Homo sapiens) -- கிழக்காப்ரிக்காவில் தோன்றி  அக் கண்டத்தின் வட பகுதியிலும் மேற்காசியாவிலும்  ஒரு //மு பரவினர். மேற்காசியாவில்தான், இஸ்ரேலின்  கலிலீ  (Galilee) பகுதியில், நாசரேத் அருகில், கஃப்ஜேஹ் (Qafzeh) குகையில், நவீனமனிதர்களின்  மிகமிகத் தொன்மையான எலும்புக் கூடுகள்  அகப்பட்டனஅங்கு   ஓர் இளம்பெண்ணும் அவளின் காலடியில் ஆறு வயதுக் குழந்தையும் புதைக்கப்பட்டிருந்தனர். ஏறக்குறைய  ஒரு /  பழமையான புதையல் அது. 1933 இல், ஐந்து மனிதக் கூடுகளும் பின்பு  1965 க்கும் 1975 க்கும்  இடையில், பிரான்சு நாட்டு பெர்நார் வாந்தேர்மீர்ஷ் (Bernard Vandermeersch) எனும் தொல்வரலாற்று நிபுணரால் பதின்மூன்றும் அகழ்ந்தெடுக்கப்பெற்றன. வயது வந்தோரும்  குழந்தைகளுமாக  எல்லாரும் புதையுண்டிருந்தனர்.

    இந்த மாதிரி  இடுகாடுகள்   பிரான்சு,  இத்தாலி, மத்திய ஆசியா, பாலஸ்தீனம் ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டன. இராக்கின் ஷனிடர் (shanidar) குகையில்  ஒன்பது கூடுகள் வெவ்வேறு ஆழங்களில் கிட்டின; அவற்றுள் அதிகப்  பழையதற்கு வயது  70,000 ஆண்டு.

    க்ரோ மஞ்ஞோன் இனம்,  'முற்பட்ட  ஹொமோ செப்பியன்ஸ்  செப்பியன்ஸ்' என்பதையறிவோம். இப்போது உலகம் முழுதும்  வாழ்கின்ற இனம் ஹொமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ்  எனப்படுகிறது. இதுவும்  கிழக்கு ஆப்ரிக்காவில் பிறந்தது; ஒரு  லட்சத்திலிருந்து  ஒன்றேகால் லட்சம்  ஆண்டுகளுக்கிடையே   அந்தக் கண்டத்தை விட்டு  அது  வெளியேறியிருக்க   வேண்டும்.

    மனிதர்களை வெள்ளை இனம், கருப்பினம், மங்கோலிய இனம், சிவப்பினம் எனப் பிரிப்பது இருபதாம்  நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்தது; ஆராய்ச்சி விரிவடைய அடைய, 'யாவரும் ஓரினம்,  வசித்த இடம்தட்பவெப்ப நிலை, சூழல் முதலானவற்றின் வேறுபாடும் மாறுபாடுமே அவர்களின்  தோற்ற வித்தியாசங்களுக்குக் காரணம்என்பது இறுதி  முடிவாய்  ஏற்கப்பட்டுள்ளது.


சிம்பன்சி


 மானிடர் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறலாம்:

              ஒரு பொது மூதாதை - பெருங்குரங்கு

   அதிலிருந்து ஒரு கிளை : பரிணாமம் உற்ற பெருங்குரங்குகள்; அதிலிருந்து  கிபன், ஒராங் உட்டான், கொரில்லா, சிம்பன்சி.

     மறு கிளை: ஆசைன்கள்; அதிலிருந்து ஹொமோ ஹெபிலிஸ், ஹொமோ இரேக்டஸ், ஹொமோ  செப்பியன்ஸ்.

   பற்பல  நாட்டு அறிவியல் வல்லுநர்கள்  கஷ்டம் பாராமல், காலங் கருதாமல், கடுமையாய் உழைத்து, ஆராய்ந்து, மனிதர் தோன்றிய வரலாற்றை அறிந்து கூறியிருக்கிறார்கள்அவர்கள் ஹோமரின் இதிகாசங்களிலோ ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலோ தகவல் திரட்டவில்லை; அறிவியல்  முறைப்படி, பல்லாண்டு  களப்பணி செய்து, கைக்கெட்டிய பொருள்களை அளந்து,  ஒப்பிட்டு, காலம் நிர்ணயித்து, ஊகித்து, கலந்தாலோசித்து, விவாதித்து, முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் பின்காணும் வெவ்வேறு  அறிவியல் துறைகளில் நிபுணர்கள்:

    -- மண்ணூல்.  Geology

     --அகழ்வு ஆய்வியல்.  Archaeology

     --புதைபடிவ ஆய்வியல் . Palaeontology

     -- மானிட இயல். Anthropology

     --விலங்கு  இயல்.

     -- தாவர இயல்.

     - இயற்கை இயல்.

    -- உடற்கூற்று இயல். Anatomy

    --  மரபணு இயல். Genetics

   --  வேதியியல். Chemistry

   --  இயற்பியல்.  Physics

   ---  புவி இயல்.  Geography

   ஆராய்ச்சிகள் தொடர்கின்றன: 29 - 5 - 15 இந்து  ஆங்கில நாளிதழில்  ஒரு  செய்தி:

  "வடக்கு ஸ்பெய்னில் 43 //முந்தைய, கிட்டத்தட்ட முழுமையான, எலும்புக் கூடொன்று கிடைத்துள்ளது; 13 மீட்டர் செங்குத்து ஆழத்தில் மேற்கொண்டும் கூடுகள் காணப்படுகின்றன எனவும் குறைந்தது 28 இருக்கலாம்  எனவும்  ஆய்வர்கள் தெரிவித்தார்கள்."  

  ஆகவே, புதுக்கருத்து தோன்றலாம், பழையது, தவறு எனக்  கைவிடப்படலாம் அல்லது உறுதியுறலாம். எதுவானாலும் அடிப்படைக் கண்டுபிடிப்பான  'குரங்குதான் மனிதனின் மூலம் '  என்பது மாறாது.

   மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் பொதுவான மூதாதை பற்றிய முடிவு  நன்கு வேரூன்றிவிட்டது; 1960 இலிருந்து செய்த டி.என். (DNA) மற்றும் மூலக்கூறு ஆய்வுகள்  மனிதர்களும்  சிம்பன்சிகளும் ஒரே குடும்ப  உறுப்பினர்கள் என்று  உறுதிப்படுத்தியுள்ளன.

 பழங்காலத்தைக் குறித்த எல்லாக் கோட்பாடுகளும் எலும்பாராய்ச்சியால் மட்டுமே பெறப்பட்டவையல்ல; மரபணு, தட்ப வெப்பம், சுற்றுச் சூழல், பிற விலங்குகள் முதலானவற்றின் ஆய்வாலுந்தான். புதையெலும்பு ஆய்வர் எலும்புகளைத் தேடுகிறார்; எங்கே தோண்டவேண்டும் என்பதை ஊகிக்கிறார் மண்ணூலார்; அகழ்வர்கள் தோண்டுகிறார்கள்; வேதியியலாரும் இயற்பியலாரும் எலும்புகளின் காலத்தைக்  கணக்கிட, மரபணு  இயலார்  செல்களில்  பரிணாம வரலாற்றைக்  காண்கிறார்.

  பரிணாமம் பற்றிய கொள்கை பலமாக நிலைபெற்றுவிட்டது. மனிதப் பரிணாமம் என்பது  விலங்குத் தன்மை, கரடுமுரடு  ஆகியவற்றிலிருந்து  மேம்பாடு, பண்பாடு, நாகரிகம்   நோக்கிய  படிப்படியான முன்னேற்றம்  அல்ல; வாழும் வழிகளைத் தேடி மேற்கொள்ளப்பட்ட முடிவற்ற முயற்சிகள், எண்ணற்ற  மற்றும்  திரும்பத் திரும்ப  நடந்த  சோதனைகள்  (experiments) ஆகியவற்றின் விளைவே  பரிணாமம்சாத்தியமான  ஒவ்வொரு திசையிலும் நிகழ்ந்த அந்தச் சோதனைகளே வாழ்வில் நாம் பார்க்கிற வேறுபட்ட  தோற்றங்களுக்குக் காரணம்.

  வாழும்  உயிர்கள் தலைமுறைக்குத் தலைமுறை பெரிய அளவிலோ  சிறிய அளவிலோ மாறிக்கொண்டிருக்கின்றன.

 காட்டு: இரு தலைமுறைக்கு முன்பு  சிறுவர்களுக்கு 28  பற்கள் இருந்தன; வாலிபத்தில்  4 கடைவாய்ப் பற்கள்  முளைத்தன; ஆக மனிதனுக்கு 32  பற்கள் எனக் கணக்கிட்டோம். இன்றைய இளைஞர்களுக்கு அவை  முளைக்காமையால்   28 தான்.

  நம் குறுகிய ஆயுட்காலத்தில் எல்லா மாற்றங்களையும் அறிய முடிவதில்லை.

   புறப்பொருள் வெண்பா மாலை என்றோர்  இலக்கண நூல் உண்டு; சங்க காலத்துக்குப் பிற்பட்ட அதில், உதாரணத்துக்காகப் பாவொன்று  காட்டப்பெற்றுள்ளது:

    கல்தோன்றி  மண்தோன்றாக்  காலத்தே  வாளோடு
    முன்தோன்றி மூத்த  குடி.

 என்று தமிழ்க் குடியின் பழமையை அது பறைசாற்றுகிறது. பிறக்கும்போதே வாள் வைத்திருந்ததாம்! இடுப்பில் தொங்கியதா அல்லது கையில் பிடித்திருந்ததா என்பது  சொல்லப்படவில்லை. புலவரின்  கற்பனை எனப்  பாராட்டலாமே யொழிய  வரலாற்று உண்மையெனக் கொண்டு ஆதாரமாய்க் காட்டுதல் தவறு. முன் தோன்றியது ஆப்ரிக்கக் குடியே! அதுவும் மண் தோன்றாக்காலத்தில் அல்ல; கல் தோன்றிமண் தோன்றி, மணல் தோன்றி, ஒரு  செல்லுயிர் தோன்றி, பல  செல்லுயிராய்ப் பரிணமித்து, கணக்கற்ற உயிரினங்கள் உருவாகிப் பெருகிப் பரவிப் பாரை நிறைத்ததற்குப் பல நூறாயிரம் ஆண்டுக்குப் பின்னர்எடுத்துக்காட்டாக, பாம்புகள் ஊரத் தொடங்கியது  13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு; மானிடர் வந்து  சில லட்ச வருடங்களே ஆயின.

                          முற்றிற்று.


                    ++++++++++++++++++++++++++