Friday 29 January 2016

நூல்களிலிருந்து -- 2






     காந்தியடிகள் தம் வரலாற்றை 1925 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார்; நவஜீவன் என்ற குஜராத்தி வார இதழில் அது தொடர்ந்து வெளிவந்தது. அவருடைய 50 வயதுவரை வரலாறு கூறும் அது, 'சத்திய சோதனை' என்னுந் தலைப்பில் தமிழில் பெயர்க்கப்பட்டு 1964 இல்  நூலுருவம்  அடைந்தது. ஐந்து பாகங்கொண்ட அதில் 2 ஆம் பாகம் 20 ஆம் அத்தியாயத்தில், அவர் தென்னாப்ரிக்காவில் வழக்குரைஞராய்த் தொழில் நடத்தியபோது, நிகழ்ந்த சம்பவமொன்றை விவரித்திருக்கிறார்: தலைப்பு:  பாலசுந்தரம்

 "மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறிவிடுகிறது; இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே என் உள்ளத்தின்  அத்யந்த ஆசை; அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டுபோய்ச் சேர்த்தது; அதனால் அவர்களுள் ஒருவனாய் என்னை ஆக்கிக்கொள்ளவும்  முடிந்தது.

      நான் வழக்குரைஞர்  தொழிலை  ஆரம்பித்து 3, 4  மாதங்கூட ஆகவில்லை. அப்பொழுது ஒரு தமிழர்,  கந்தையணிந்து, முண்டாசுத் துணியைக்  கையில் வைத்துக்கொண்டு, முன்னம் பற்கள் இரண்டும் உடைந்துபோய், ரத்தம் வழியும் கோலத்தில் நடுங்கிக்கொண்டும் அழுதுகொண்டும் என் முன்னே வந்து நின்றார். அவர், தம்முடைய எஜமானால் கடுமையாய் அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா ஒரு தமிழர்; அவர்மூலம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். வந்தவரின் பெயர் பாலசுந்தரம். ஒரு  பிரபலமான ஐரோப்பியரின்கீழ் ஒப்பந்தக் கூலியாய் வேலை  செய்துவந்தார்; எஜமான் அவர்மீது கோபம் கொண்டார்; எல்லை மீறிப்போய் பலமாக அடித்துப் பற்களை உடைத்துவிட்டார்.

    அவரை ஒரு டாக்டரிடம்  அனுப்பினேன். பாலசுந்தரத்துக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் தன்மையைக் குறித்து டாக்டரிடமிருந்து ஓர் அத்தாட்சி வேண்டுமென்று கேட்டேன். அதைப் பெற்றேன். பாலசுந்தரத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்று, அவரிடம் காயமடைந்தவரின் பிரமாண வாக்குமூலத்தை சமர்ப்பித்தேன்;  அதைப் படித்ததும் மாஜிஸ்ட்ரேட் எரிச்சலுற்றார்;  எஜமானுக்கு சம்மன் அனுப்பினார்.

    எஜமான் தண்டிக்கப்படவேண்டும் என்பதல்ல என் விருப்பம். அவரிடமிருந்து பாலசுந்தரம் விடுதலை பெறவேண்டும் என்றே விரும்பினேன்.  ஒப்பந்தத் தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்தேன். சாதாரண வேலைக்காரன் ஒருவன், முன்கூட்டி அறிவிக்காமல் வேலையை விட்டுப் போய்விட்டால், அவன்மீது எஜமான் சிவில் மன்றத்தில் வழக்கு தொடரலாம்; ஆனால், ஒப்பந்தத் தொழிலாளியின் விஷயத்திலோ இம்முறை முற்றும் மாறானது; எஜமான் தொழிலாளிமேல் கிரிமினல் மன்றத்தில் வழக்கு போட்டுத் தண்டித்து சிறையில் இடலாம். ஓர் அடிமையைப் போன்றே ஒப்பந்தத் தொழிலாளியும் எஜமானின்  சொத்து.

  பாலசுந்தரத்தை விடுவிக்க இருந்த வழிகள் இரண்டு: ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைக்கொண்டு,  ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி செய்யலாம்; அல்லது வேறோர் எஜமானிடம் அவரை மாற்றிவிடச் செய்யலாம். எஜமானிடம் சென்று பேசினேன்; ஒப்பந்தத்தை ரத்து செய்ய சம்மதித்தார். பின்பு, பாதுகாப்பாளரைப் போய்ப் பார்த்தேன்; புதிய எஜமானரை நான்  கண்டுபிடித்தால், தானும்  சம்மதிப்பதாய்க்  கூறினார்.

     ஓர் எஜமானைத் தேடிப் புறப்பட்டேன்.  ஒப்பந்தத்  தொழிலாளியை  இந்தியர் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது; ஆகையால், அவர் வெள்ளைக்காரராகவே இருக்க வேண்டும். எனக்கு அப்போது மிகச் சில ஐரோப்பியர்களையே  தெரியும், அவர்களில்  ஒருவரை சந்தித்தேன்; அவர் மிக அன்புடன் ஒப்புக்கொண்டார்.

        பாலசுந்தரத்தின் பழைய எஜமான் குற்றம் புரிந்திருப்பதாய் மாஜிஸ்ட்ரேட் முடிவு  கூறினார்.

  வழக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் ஒவ்வொருவருடைய காதுக்கும் எட்டிவிட்டது; அவர்கள் என்னைத்  தங்களுடைய  நண்பனாய்க் கருதினார்கள். இந்தத் தொடர்பைக் குறித்து நான் அளவற்ற மகிழ்ச்சி  அடைந்தேன்.  அவர்கள் ஓயாமல் என் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுடைய இன்பதுன்பங்களை அறிந்துகொள்வதற்கு எனக்கு சிறந்த வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.

     அந்த வழக்கில் அதிக  விசேஷமானது எதுவுமில்லை;  ஆனால், தங்கள் கட்சியை எடுத்துப் பேசுவதற்கும் தங்களுக்காகப் பகிரங்கமாக வேலை செய்வதற்கும் நேட்டாலில் ஒருவர் இருக்கிறார் என்பது ஒப்பந்தத் தொழிலாளர்க்கு ஆனந்தத்தோடு கூடிய  அதிசயமாக இருந்ததோடு, அதனால் அவர்களுக்கு ஒரு  நம்பிக்கையும்  உண்டாயிற்று."

                                            -----------------------------------------------------    
  
(படம் உதவி - இணையம்)


Saturday 23 January 2016

பிரஞ்சு ஆய்வு நிறுவனம்





    முன்னாள் பிரஞ்சிந்தியாவை இந்தியாவிடம்  பிரஞ்சுக்காரர்கள் 1955 இல் ஒப்படைத்தபோது, இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, பிரஞ்சு ஆய்வு  நிறுவனமொன்றைப் புதுச்சேரியில் இயக்குவதற்குப் பிரான்சு அனுமதி  பெற்றது.

     அதன்  விளைவாய்,  புதுச்சேரியில்  மேற்சொன்ன  அமைப்பு  உடனடியாய் உருவாகிப்  பிரான்சின்  பண  உதவியால்   இயங்கி வருகிறது.  அதன்  பிரஞ்சுப் பெயர் ஐன்ஸ்த்தித்துய் பிரான்சே (Institut Francais). அதன்  60 ஆம் ஆண்டு நிறைவு விழா 18-11-2015 இல் கொண்டாடப்பட்டது. பழந்தமிழ் மற்றும் வடமொழி  இலக்கியச்  சுவடிகளை சேகரித்து, அவை   கெடாமல் இருப்பதற்கு ஏற்ற தட்ப வெப்ப சூழ்நிலையில் பத்திரப்படுத்தல், ஆராய்தல், மொழி பெயர்த்தல்,  நூல்  வெளியிடல் முதலியவை அதன்  நற்பணிகள். ஏறக்குறைய  8500  சுவடிகள்  அதன் வசம்  உள்ளன.

   முதல்  வெளியீடு,   காரைக்கால் அம்மையார்  இயற்றிய   நூல்களின்   பிரஞ்சு மொழிபெயர்ப்பு; ஏறக்குறை 50 ஆண்டுக்குமுன் இது வெளியாயிற்று. பெயர்ப்பாளர்  காரவேலன்  என்னும்  புனைபெயர் தரித்த லெஓன்  சேன்ழான்   (Leon Saint Jean) என்ற காரைக்காலின் புகழ் பெற்ற வழக்குரைஞர். தமிழ் ஆர்வலராகிய அவர், பாரதி கவிதை, தாயுமானவர் பாடல், சிலவற்றைப் பிரஞ்சில்  பெயர்த்தவர். 

   அவரது ஒத்துழைப்போடு, 1962 இல், தொடங்கியது நிறுவனத்தின்  'சங்க இலக்கியச் சொல்லடைவு' என்னும் நூல்; இடையில் அவர் காலமாகிவிடினும், நூல் முற்றுப்பெற்றது. சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது, இனியவை நாற்பது முதலான சிறுசிறு நூல்களிலும் பயின்றுள்ள எல்லாச் சொற்களையும் அகர வரிசைப்படி தொகுத்து, அவை எந்தெந்த  நூல்களில்,  எவ்விடங்களில் வருகின்றன என்னும் விவரங்களை வழங்குகிற  நூல் அது.

     காட்டுகள்:

    அஃகாமை  --   குறள்  178 - 1.
    அகநிலை   --  சிலப் . 8 - 39.
    அகப்படுத்து - பதிற்று  14; கலி 57-24; அகம் 36-21; பழமொழி 387 -  2.
    பரிசின்மாக்கள் -  புறம்  121-21

    ஆயிரம் பக்கங்களுக்கு மேலும், மூன்று தொகுதிகளும் உடைய அது, ஆய்வர்களுக்குக் கைகொடுக்கும் அருமையான நூல்; பிரம்மாண்ட பணி! எந்தத்  தமிழ்  அமைப்பும் அரசும்  மேற்கொள்ளாத ஆக்கம்!


 ////////////////////////////////////////////////////////////////////
(படம் உதவி - இணையம்)

Saturday 16 January 2016

அல்க்கெமி (ரசவாதம்)


      


     மரணமிலா வாழ்வை விழையாதார் யார்? இன்றுநேற்று ஏற்பட்ட ஆசையா? என்றைக்கு மனிதன் சிந்திக்கத் தொடங்கினானோ, அன்றைக்கே முளைவிட்டிருக்கும். கிட்டத்தட்ட  5000 ஆண்டுக்கு முற்பட்ட 'கில்காமேஷ்' என்னும் உலகின் முதல் இதிகாசத்தின் தலைவன், சாகாமலிருக்க வழி தேடியதாய்  அது  கூறுகிறது.

    இறப்பைத் தவிர்க்க இயலாவிடினும்   நீண்டநெடுங்காலம்  வாழ்வதற்காவது மருந்தொன்றைக் கண்டுபிடிக்க வேண்டும்,  மற்றும்  மட்ட  உலோகங்களைப் பொன்னாக  மாற்றுவதற்கு ஓருத்தியைக் காணவேண்டும் என்ற இரண்டு குறிக்கோளுடன் முதன்முதலாய் முயற்சி மேற்கொண்டவர்கள்  கிரேக்கர்கள்; அவர்களின் நம்பிக்கை, பாதரசமும் கந்தகமும்  சேர்த்து மருந்து தயாரித்து உட்கொண்டால் ஆயுள் நீளும் என்பது. அவர்களை அல்க்கெமிஸ்டுகள் (alchemists) என்கிறது ஆங்கிலம்; ரசவாதிகள் என்கிறோம் நாம்; இவர்கள்  கடைப்பிடித்த  உத்தி  ரசவாதம்.

   கிரேக்கத்தில் பிறந்த ரசவாதம் வெகுவிரைவில் எகிப்து, ஐரோப்பா, அரேபியா,  இந்தியா,  சீனா  எனப்  பற்பல நாடுகளில்  பரவிற்று.

    ஆங்கில ரசவாதிகளின் பேராசையையும் முயற்சிகளையும் நையாண்டி  செய்து,  பென் ஜான்சன்  (Ben Jonson)  இயற்றிய  அல்க்கெமிஸ்ட்  (The   Alchemist) என்னும்  நகைச்சுவை  நாடகம்  (1610) அவரது  நான்கு   சிறந்த   படைப்புகளுள் ஒன்றாக  மதிக்கப்படுகிறது.
   
      சீனர்கள்  கந்தகமும்  வெடியுப்பும்  கலந்து  பார்த்தார்கள் என்பது 4 ஆம் நூற்றாண்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது; இந்தக் கலவையுடன் 9 ஆம் நூற்றாண்டில் கார்பன் சேர்த்தபோது எதிர்பாரா விதமாய்க் கிடைத்தது துப்பாக்கி   மருந்து;  இது  அவர்களின் பெருங்  கண்டுபிடிப்புகளுள்  ஒன்று.   

      தமிழக  ரசவாதிகளும்  பாதரசத்தைத்தான்  முக்கிய   மூலமாய்க்    கொண்டு முயன்றனர்; பற்பல மூலிகைகளையும் வெவ்வேறு வேதிப்  பொருள்களையும் மாற்றிமாற்றிப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்திருப்பார்கள், 'செம்பு பொன்னாகும் சிவாய நம எனில்' என்று திருமூலர் ஓர் எளிய  வழியைக் காட்டினார் ;  அப்படியும்  உருப்   போட்டிருக்க  மாட்டார்களா,  என்ன?  வாய் வலியும்  தொண்டை  வறட்சியும் தான்  கண்ட  பலனாய்   இருந்திருக்கும்!

     சாதாரண  உலோகத்தைத்  தங்கமாக  மாற்றும்  பேராசை  தமிழரிடையே   ஓங்கி  வளர்ந்திருந்தது  ஒரு காலத்தில்  என்பதற்கு  சான்றாக  விளங்குகிறது பழமொழியொன்று:   "போதும்   என்ற   மனமே  பொன்   செய்யும்    மருந்து"     ரசவாதிகளை  நோக்கிக்  கூறப்பட்ட  அந்தப்   பழமொழியின்   விரிந்த  பொருள்:

    மலிவான  உலோகத்தை  விலை உயர்ந்த பொன்னாக  மாற்ற  வல்ல  வேதிப் பொருளைக்  கண்டுபிடிக்க அரும்பாடு படும் ரசவாதிகளே, உங்கள் குறிக்கோள் நிறைவேறித்   தங்கத்தைப்  பெருமளவில்  உற்பத்தி   செய்து  குவித்தாலும்  நீங்கள்  மனநிறைவு  அடையப்  போவதில்லை;   இன்னம்,  இன்னம்,  என்ற எண்ணமே  மேலோங்கி நிற்கும்;  'ஆசைக்கோர் அளவில்லை';  ஆகையால்   முயற்சியைக் கைவிட்டு, இருப்பது  போதும்  என்று  நினைத்து மனத்தைப்   பக்குவப்படுத்துவது   மேல்  எனப்  போதிக்கிறது  அந்தப்  பழமொழி.

      தாயுமானவர்,  ' கந்துக  மதக்  கரியை' எனத்  தொடங்கும்  பாட்டில், 
     "வெந்தழலில்  இரதம் வைத்து  ஐந்து  உலோகத்தையும்
      வேதித்து விற்றுண்ணலாம்" என்றார்.

(வெந்தழலில் = வெம்மையான நெருப்பில், இரதம் = இரசம் = பாதரசம், வேதித்து =  வேதியியல்  முறைப்படி பொன்னாக  மாற்றி.)

  மட்ட உலோகங்களைத் தங்கமாக்கி அதை விற்று செல்வம் பெற்றாலும்பெறலாம்; ஆனால் சிந்தையை அடக்கல் அரிது  என்பது  பாடலின்  கருத்து.

   உலக ரசவாதிகளின் இலக்கு, எட்டாக் கனியாய்ப் போய்விட்டாலும், அவர்களது உழைப்பால்  வேதியியல் என்னும்  அறிவியல் துறையும்  தொழில் நுட்பமும் மேம்பட்டன; கெமிஸ்ட்ரி என்ற சொல் அல்க்கெமியிலிருந்து பிறந்தது.

                                            +++++++++++++++++++++++++++++++++