Thursday 9 June 2016

இறையனார் களவியல்


   தமிழ் இலக்கியவுலகில், பொய் வரலாறுகளுக்குப் பஞ்சமில்லை; ஆதாரங்களுடன் உண்மை நிகழ்ச்சிகளை எழுதாமற்போனமை நம் முன்னோரின் பெருங்குறையென்றால் கற்பனைகளை மெய் போலச் சித்திரித்தமை அதனினும் பெரிது; மோசடி என்றே அதைக் கூறலாம். உண்மை உரைத்தலை எத்தனையோ அற நூல்கள் வலியுறுத்தி இருந்தும், சிறிதும் சட்டை செய்யாமல், அண்டப் புளுகுகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்; அவற்றை நம் காலத்திலும் மெய்யென நம்பிப் பரப்புவோர் பற்பலர்.

  இது குறித்து மறைமலையடிகள், 'முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்' என்னும் நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
  "பிற்கால நூல்களை ஆக்கிய புலவர்கள், தாம் பாடுதற்கு எடுத்துக்கொண்ட கதைகளில் மெய் இவை, பொய் இவை, என்று ஆராய்ந்து உணர்ந்தவரல்லர்; பொய்யான கதைகளை ஆராயாது மெய்யெனக் கொண்டு தாம் நம்பியதல்லாமலும் அவற்றைப் பயில்வார் கேட்டார் எல்லாரும் அங்ஙனமே நம்புமாறு செய்து, உலகத்திற் பொய்யைப் பரப்பி மெய் விளங்கவொட்டாமலும் திரிபுபடுத்தினர். அவ்வாறு பொய்யை மெய்யாக நம்புவதிலும் அதனைப் பிறரும் நம்புமாறு செய்வதிலுமே பிற்காலத்துப்  புலவரிற் பெரும்பாலார் அழுந்திப் பழகிவிட்டனர்"

மறைமலையடிகள்

  அப்படிப் பொய்யைப் பரப்புகிற நூலொன்றை இங்குக் காணலாம்.

  இறையனார் களவியல் என்றும் இறையனார் அகப்பொருள் என்றும் சுட்டப்படும் ஒரு நூல், அறுபது பாக்களை மட்டுமே கொண்ட மிகச் சிறு படைப்பு; அதை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டிருக்கிறது.

 பதிப்புரை கீழ்க்காணும் தகவல்களைத் தெரிவிக்கிறது:

  "நக்கீரரின் உரையை உருத்திரசன்மன் கேட்ட காலம் கடைச் சங்க காலத்து உக்கிரப் பெருவழுதி அவைக்களம் எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது; கோவைகள் எழுந்த காலம் சங்க காலத்துக்குப் பிற்காலம்; அவை கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை; தொல்காப்பியர் காலத்திலோ அவருக்குப் பிற்பட்ட காலத்திலோ கட்டளைக் கலித்துறை பயிலவில்லை; தொல்காப்பிய செய்யுளியலில் இக்கலித்துறைக்கு விதியில்லை.

 நூலின் உரையில், உதாரணங்களுக்கு, கட்டளைக் கலித்துறையால் இயன்ற பாக்கள் காட்டப்பெற்றுள்ளன; அன்றியும், முதற் சூத்திர உரைக்கண்,' மதுரை ஆலவாயிற் பெருமானடிகளால் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமார சுவாமியாற் கேட்கப்பட்டது என்க' என்று கூறுவதையும் 7-ஆம் சூத்திர உரைக்கண் விளக்கம் உரைக்கும்போது, தாம் பாடிய பாடலாக (அகம் 36) பாடலில் வந்துள்ள 'தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது' என்ற அடியை எடுத்துக் காட்டி," என்று சான்றோர்  சொல்லியது' என்று கூறியிருப்பதையும் நோக்கினால், இவர் தம்மையே இவ்வாறு மாற்றிக் கூறுவரோ என்னும் எண்ணம் உந்த நக்கீரர் உரைதானோ என்ற ஐயம் எழுகின்றது.

 சங்க காலத்துப் பயிலாத வட  சொற்கள் உரையில் விரவிக் கிடக்கின்றன: சிட்டரை, பிராமணன், குமாரசுவாமி, மூத்திர புரீடம், சுவர்க்கம், வாசகம்."

 இந்தப் பதிப்புரையால் நாம் அறிவன:

  இறையனார் களவியல் சங்க காலத்து நூல் எனவும் அதற்கு உரை எழுதியவர் நக்கீரர் எனவும்  நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை.

 பெயர் தெரியா அந்த உரையாசிரியர், நூல் இயற்றப்பட்டதற்கான காரணம் குறித்துத் தொடக்கத்தில் எழுதியுள்ளார். பழங்கால நடையில் இருக்கிற அதை இன்றைய தமிழில் பெயர்க்கிறேன்; சில சொற்களுக்கு அடிக்கோடு இழுத்துள்ளேன்:

  'அக்காலத்து, பாண்டிய நாடு வறட்சியால் பீடிக்கப்பட்டது; அதனால் பசி யாவரையும் வாட்டி வதைக்கவே, அரசன் புலவரையெல்லாம் அழைத்து, "வருக, நான் உங்களைப்  பேண இயலாது; என் நாடு பெரிதும் வருந்துகின்றது; நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தேசங்களுக்குப் போய், இந்த நாடு வளம் பெற்ற பின்பு, என்னை நினைத்து வாருங்கள்" என்றான்.

  அரசனை விடுத்து எல்லாரும் போன பின்னர், பன்னிரண்டு ஆண்டு கழிந்தது. பிறகு நாடு செழிக்க மழை பெய்தது, அரசன், "நாடு இனி நன்னாடு ஆயிற்று; ஆகலால் நூல் வல்லாரைக் கொணர்கஎன்று எல்லாப் பக்கமும் ஆள் போக்கஅவர்கள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் யாப்பதிகாரம் வல்லவர்களை அழைத்து வந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும்  காணவில்லை.' என்றனர்.

  அரசன் மிக வருந்தி, "என்ன? எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்துக்காக அல்லவா? பொருளதிகாரம் கிடைக்கவில்லை என்றால், மற்றவை கிடைத்தும் கிடைக்காதது போலத்தான்என்றான்.

 மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்தித்தான்: "ஐயோ, பாவம்அரசனுக்குக் கவலை பெரிதாயிற்றுஅதுவும் ஞானத்தின் பொருட்டு; ஆகையால் யாம் அந்தக் கவலையைத் தீர்க்க வேண்டும் என்று இந்த அறுபது செய்யுள்களை இயற்றி மூன்று செப்பேடுகளில் எழுத்திப் பீடத்தின் கீழிட்டான்.

 காலம்கடை சங்க காலத்து செய்யப்பட்டது"

 திறனாய்வாளர்கள் இது பற்றி எழுப்பிய வினாக்களும் தெரிவித்த கருத்துகளும் கீழ்வரும்:

  1 -- அக்காலத்து என்றால் எக்காலத்து?
  2 --அரசன் -- அவன் பெயர் என்ன?
 இவை இரண்டும், 'மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்' என்பது போல விவரம் அற்றவை. பொய்யாதலால், 'ஒரு ஊரில் ஒரு ராஜா' என்னும் பாணியில் மொண்ணையாய் எழுதப்பட்டுள்ளன.
  3 -- பொருளதிகாரம் -- நம் காலம்வரை வாழ்கிற தொல்காப்பியப் பொருளதிகாரம் அப்போது எப்படிக் கிடைக்காமற் போயிருக்கும்?
  4 -- கடவுள் சிந்தித்தமையும் பாட்டு எழுதிப் பீடத்தின் அடியில் வைத்தமையும் புலவருக்கு எப்படித் தெரிந்தது? பக்கத்திலிருந்து பார்த்தவர் போல எழுதியிருக்கிறார்.
 5 -- சங்க கால நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுந்தான்; அவற்றுள் இந்த நூல்  இடம் பெறவில்லை. இது எட்டாம் நூற்றாண்டில் இறையனார் என்பவரால் இயற்றப்பட்டது என்னும் உண்மை ஆய்வால் தெரிந்துள்ளது.
                                                             (தொடரும்)
                               +++++++++++++++++++++++++++++++++++++++


4 comments:

  1. இதற்குப் பின்னூட்டமாக நான் முன்பொரு முறை எழுதிய பதிவின் சுட்டியைத் தருகிறேன் தயை கூர்ந்து வாசித்துக் கருத்துக் கூறவும் நன்றி http://gmbat1649.blogspot.in/2013/01/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .அவசியம் வாசிப்பேன் . தயை கூர்ந்து என்று நீங்கள் எழுதியிருக்க வேண்டாம் .

      Delete
  2. நல்லதொரு மிக முக்கியமான அலசல் கட்டுரையை. மிக அழகாக எழுதி வெளியிட்டுப் புரிய வைத்துள்ளீர்கள். தொடரட்டும்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    {இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக நான் வாங்கிய என் கணினி, கடந்த ஒரு வாரமாக, பழுதாகி நிறைய செலவுகளை இழுத்துவிட்டுவிட்டது. அதனால் இங்கு என் வருகையில் சற்றே தாமதம் ஆகிவிட்டது}

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .தாமதம் ஆனாலும் தொடர்ந்து வாசித்து என்னை ஊக்கப்படுத்துகிற உங்களுக்கு என் வாழ்த்தும் ஆசியும் .

      Delete