Thursday 27 October 2016

சங்கச் சான்றோர்


(14-8-2016 தினமணியில் வந்தது)

மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்க காலப்  புலவர்கள்தேவைப்பட்டபோது, அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி நன்னெறிப்படுத்தினர் என்பது புற நானூற்றின் மூலம் தெரிய வருகிறது.


 1  - உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை பற்றிச் சிந்தித்த குடபுலவியனார், அதற்கு அடிப்படையானவை நிலவளம், நீர்வளம் என்பதையோர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பின்வருமாறு கூறினார்:


  " நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்;   நீரையும் நிலத்தையும்  ஒன்றாய்க் கூட்டியவர் குடிமக்களின் உடலையும் உயிரையும் காத்தவராவார். மழையை எதிர்பார்க்கும் புன்செய், எவ்வளவு அகன்றதாய் இருந்தாலும், முயற்சிக்குத் தக்க பலன் தராது;   ஆதலால் மழைநீரையும் ஆற்றுநீரையும் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுவதையும் வளப்படுத்துவாயாக. இவ்வாறு செய்த மன்னர் உலக இன்பமும் நிலைத்த புகழும் அடைவர்;   செய்யாதார் அவற்றைப் பெறார்". (பாடல் 18)


  2  -  பாண்டியன் அறிவுடைநம்பிவரி பெறுவதற்குஉரிய வழியைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட பிசிராந்தையார்,   அவனிடம்,   "ஒரு வேந்தன் அறிவுள்ளவனாய்தக்க முறையில் வரி வாங்கினால், பெரிய அளவில் பொருள் கிடைக்கும்; மக்களும் மேம்படுவார்கள்" என்று கூறியதோடுஅதை விளக்க அருமையானதோர்  எடுத்துக்காட்டும் தந்தார்: "காய்ந்த நெல்லை அறுவடை செய்து கவளங்கவளமாய் யானைக்கு ஊட்டினால், ஒரு மாவுக்குங் குறைந்த வயலின் விளைச்சலாயினும்பல நாளுக்கு வரும்மாறாகநூறு வேலி  நிலமானாலும் தானே போய் மேயும்படி யானையை விட்டால், அதன் வாயில் நுழையும் உணவைவிடக் காலில் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்". அப்பாடல்:

                            காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
                            மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
                            நூறுசெறு ஆயினும் தனித்துப்புக்கு உணினே
                            வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
                            அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
                            கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும். (பா . 184)

  


3  -  மலையமானைப் போரில் வென்ற சோழன் கிள்ளிவளவன், அவனது சிறு பிள்ளைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து, மண்ணில் கழுத்தளவு புதைத்து, யானையின் காலால் தலையை இடறச்செய்ய முற்பட்டபோது, கோவூர்கிழார் குறுக்கிட்டுத் தடுத்தார். "இந்தச் சிறுவர்கள் யானையைக் கண்டால் அஞ்சி அழ வேண்டியதை மறந்து, புதிய சூழலை நோக்கிமருண்டு, இதுவரை அறிந்திராத துன்பத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள்; இப்படிப்பட்ட சின்னஞ்சிறுவரைக் கொல்வது தகாது" என நல்லுரை நவின்றார்:

                            களிறுகண்டு அழூம் அழால் மறந்த
                            புன்தலைச் சிறார் மன்றுமருண்டு நோக்கி
                            விருந்தின் புன்கணோ உடையர்   (பா 46)


    புலவர்களைத் தம்மினும் மேலோராய்க் கருதி மதித்துஅவர்களால் பாடப்பெறுதலைப் பெரும்பேறாய் எண்ணிய மன்னர்கள், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்றுச் செயல்பட்டிருப்பார்கள் என நம்பலாம்.

 சங்க காலப் புலவர்கள் நல்லமைச்சர் போல இயங்கி, வேந்தர்களை அறவழியில் செலுத்தியமைக்குக் காரணம்,   அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையேயாகும். நாட்டின் முன்னேற்றம், மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால்தான் அவர்களைச் 'சங்கச் சான்றோர்' என்று அழைக்கிறோம்.

                                                            ------------------------------

Sunday 16 October 2016

பிரஞ்சு இலக்கிய வரலாறு


லத்தீனிலிருந்து பொ.யு. 10-ஆம் நூற்றாண்டில் உருவாகிய பிரஞ்சுஅடுத்த ஆறாண்டுகளில், உரைநடையும் செய்யுளுமாகப் பலதுறை இலக்கியங்களை ஈன்றது.

Moliere

  16-ஆம் நூற்றாண்டுக் கவிஞர் Ronsard-இன் படைப்புகள் சுவை மிக்கவை. அதற்குப் பிந்தைய நூற்றாண்டில்துன்பியல் நாடகங்களை Corneille, Racine  என்னும் இருவர் செய்யுள் வடிவில் இயற்றினர்; இவர்களுக்குக் கருக்கள் கிரேக்க ரோமானிய வரலாறுகளிலிருந்து கிடைத்தன. இன்பியல் நாடகங்கள் Moliere -ஆல் உரைநடையிலும் எழுதப்பட்டன.

Rousseau

  அடுத்த நூற்றாண்டு, உரைநடைக் காலம்: Voltaire,  Rousseau  ஆகிய எழுத்துவல்லார் இருவர்மன்னனின் எதேச்சதிகாரத்தையும் சமுதாயத்தின்மீது மத பீடங்கள் செலுத்திய ஆதிக்கத்தையும் எதிர்த்து முழங்கிய கருத்துகள் 1789-இல் வெடித்த தீவிரமான, மக்கட் புரட்சிக்கான காரணங்களுள் குறிப்பிடத்தக்கவைமுடியாட்சி ஒழிந்து குடியரசு முகிழ்ப்பதற்கு அவை வித்திட்டன. Rousseau-வின் Le Contrat  Social (சமுதாய ஒப்பந்தம்) என்னும் நூல் மிக முக்கியமானதுஉலகம் முழுதும் மன்னனைத் தெய்வ அம்சமாய்க் கருதிப் போற்றிய காலத்தில், 'மக்களே நாட்டின் தலைவர்கள்' என்ற புதுமைக் கருத்தை அது பரப்பியது.

Maupassant

   19-ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த எழுத்தாளராய்த் திகழ்ந்த Victor Hugo, Balzac, Maupassant ஆகியோரைத் தமிழ் இலக்கிய உலகு அறியும். கவிஞர் Hugo  விழுமிய உரைநடையாளரும் ஆவார். அவரது Les Miserables  புதினம், 'ஏழை படும் பாடு' என்ற தலைப்பில் சுத்தானந்த பாரதியாரால் 75 ஆண்டுக்குமுன்பு பெயர்க்கப்பட்டுபிற்காலத்தில் அதே தலைப்புடன் திரைப்படமாயிற்று. Balzac,   80-க்கு மேற்பட்ட புதினங்களை எழுதிக் குவித்த கற்பனைக் களஞ்சியம். உலகச் சிறுகதை மன்னர் Maupassant   இயற்றிய 300-க்கும் அதிகமான கதைகளுள் பெரும்பாலானவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளனஅவரின் தாக்கம் பெற்ற புதுமைப்பித்தன் ஐந்தைப் பெயர்த்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக Emile Zola- வைச்  சொல்லலாம்; இவருடைய 17 புதினங்களுள் Nana   தமிழர்க்கு அறிமுகமானது.

    சிறந்த கவிஞர்களும் உதித்துக் கீர்த்தி அடைந்தார்கள்:

 Beaudelaire 

Arthur Rimbaud

   1 -- Beaudelaire -இன் Les Fleurs du mal  (துன்ப மலர்கள்) குறியீடுகளும் உருவகங்களும் நிரம்பிய படைப்பு.

     2  -- யாப்பிலக்கணத்தைப் புறக்கணித்த படைப்பாளி Arthur Rimbaud; இவர்,  Vers Libre (Free Verse) பயன்படுத்திப் பல வகை அடிகளில் புதுப்புதுப் படிமங்களை வாரி வழங்கியவர். உலகக் கவிஞர் பற்பலருக்கு வழிகாட்டிதமிழ்ப் புதுக்கவிதையிலும் அவரின் தாக்கம் காணப்படுகிறதாம்.

     இருவரும் குறியீட்டுக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய படைப்பாளிகளுள் நால்வர் நோபல் பரிசு பெற்றவர்கள்:

Jean  Paul  Sartre

    ---  Jean  Paul  Sartre   புதுத் தத்துவம் ஒன்றின் தந்தை;   அது பிரஞ்சில் existentialisme  (இருத்தலியல்) எனப்படுகிறது. சிறுகதைநாடகம், புதினம், இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் புகழ் எய்திய அவரது La  Nausee (குமட்டல்),  Les Mains sales (கறை படிந்த கைகள்), Huis clos (மூடிய கதவு) ஆகியவை பிரபலம். புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியர் வெ. ராஜகோபாலனால் Les Mains Sales  'மீண்டும் ஒரு விடுதலை' என்னுந்தலைப்பில் தமிழாக்கப்பட்டுள்ளது.

Albert Camus

    ---Albert Camus  பிரஞ்சு உரைநடையைச் சிறப்பாய்க் கையாண்டு மெருகேற்றியவர். அவர் படைத்த L'Etranger (அந்நியன்), La Peste  ( Plague என்ற கொடுநோய்) ஆகிய புதினங்கள் பிரஞ்சு இலக்கிய வானில் விண்மீன்கள். புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியை மதனகல்யாணி La Peste- ஐத் தமிழில் பெயர்த்திருக்கிறார். 

Claude simon

   --- 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுப்புதினம் என்ற இலக்கிய வகை பிரான்சில் தோன்றிற்று. அது பாத்திரப் படைப்பு, கால அளவு (chronology) முதலியவற்றைப் புறக்கணிக்கிறது. Claude Simon  புதுப்புதினர்களுள் தலைசிறந்தவர். அவர் 1-9-2005-இல் காலமானார்.

    ---  Le Clesieux  வாழுகின்ற புதினப் படைப்பாளி. இவருடைய La Tempete (சூறாவளி) Femme  sans Identite (அடையாளம் தேடி அலையும் பெண்) ஆகிய நூல்கள் புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியரும் குறுந்தொகையைப் பிரஞ்சில் பெயர்த்தவருமான முனைவர் சு.அ. வெங்கட சுப்ராய நாயகரால் தமிழாக்கம் செய்யப்பட்டு,  16-9-16 அன்று,   புதுச்சேரித் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டன. Le Clesieux-விடம் இந்தியச் சிந்தனைத் தாக்கம் காணப்படுகிறது என்பதை விளக்கிப் புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியர்  இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய Impact of Indian Thought on  Le Clesieux  என்ற கட்டுரை The Hindu   நாளிதழில் 5 ஆண்டுக்குமுன் வெளிவந்த தகவல் குறிப்பிடத்தக்கது.

  இலக்கிய வளஞ்செறிந்த மொழிகளுள் பிரஞ்சு முக்கியமானது. இது ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக உலகில் பரவியுள்ளது. இந்தச் சிறு கட்டுரை மிக முக்கிய படைப்பாளிகளை மட்டும் அறிமுகப்படுத்துகிறது.

                       ================================

 (படங்கள் உதவி - இணையம்)

Saturday 8 October 2016

பழந்தமிழ் என்பது பெருஞ்சொத்து

நூல்களிலிருந்து 9

 1994-2014 காலக்கட்டத்தில்,  'காலச்சுவடுபிரசுரித்திருந்த 29 கட்டுரை அடங்கிய நூல்,  'தமிழ் நவீன மயமாக்கல்என்னுந் தலைப்புடன்,  டிசம்பர் 2014-இல் வெளியாகியிருக்கிறது.

  28-ஆம் கட்டுரை ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவரைக் கனடா வாழ் எழுத்தாளர்  அ. முத்துலிங்கம் எடுத்த பேட்டி. (2005)

ஜார்ஜ் எல். ஹார்ட்


  அந்த அமெரிக்கர்கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்  பேராசிரியராய்ப் பணியாற்றியவர். பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்தவர்.

  1. The  Poems  of Ancient  Tamil --1975;
 2 -- The  Poems of Tamil Anthologies  -  1979;
  3 --The Forest Book of the Ramayana of Kampan -1988;
  4 -- The Four  Hundred Songs of War  and  Wisdom - 1999.

  இந்திய அரசின் பத்மஶ்ரீ பெற்ற அவரது செவ்வியிலிருந்து சில  பகுதிகளைப் பகிர்கிறேன். 

 கட்டுரையின் தலைப்பு:

   பழந்தமிழ் என்பது பெருஞ்சொத்து

 கிட்டத்தட்ட 3500 ஆண்டுக்கு முன்பு பாரசிகத்திலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்தோ - ஐரோப்பிய மொழி பேசிய ஓர் இனந்தான் ரிக் வேதத்தை இயற்றியதுஇந்தியாவில் பலர்ஆரியரின் வருகை அப்படியல்ல என்று வாதாடினாலும், மொழியியல் ஒப்பீடுகளின் மூலம், ரிக் வேதத்தைப் பாடியவர்கள் இந்தியாவில் தோன்றியவர்கள் அல்ல என்பதை நூறு சத விகிதம் நிரூபிக்க முடியும். வேறு இந்தோ- ஐரோப்பிய மொழி பேசிய ஆதி நாகரிகங்களைகிட்டத்தட்ட வேத காலத்து மக்களுடைய மொழிபோல ஒன்றைப் பேசிய ஈரானிய நாகரிகம் உட்பட, ஆராய்வோமானால், நாம் வர்ணம் என்றும் சாதி என்றும் ஒன்றைக் காண முடியாதுரிக் வேதத்தில்கூட சூத்திரர் என்ற வார்த்தை ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே வருகிறதுநாளாவட்டத்தில் நான்கு வர்ணங்களென்பது ஸ்திரமானதுஐந்தாவதாய்ப் பஞ்சமரும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

  சங்க இலக்கியங்களில் சாதிப் பிரிவுகளின் நிலைமை துலக்கமாய்க் காட்டப்பட்டிருக்கிறது; அடிமட்ட தலித் இனத்தினரிடையே பல்வேறு பிரிவுகள், இன்றுபோல், அன்றும் இருந்திருக்கின்றனஇவற்றை வைத்துக்கொண்டு பார்க்கும்போது சாதிப் பாகுபாடு ஆரியர்களால் திணிக்கப்பட்டது என்றோ ஓர் ஆரிய அமைப்பின் மூலம் உருவானது என்றோ எண்ண இடமில்லைஆதி ஆரியர்களுக்கு இடையில் அப்படியான  ஓர் அமைப்பும் இருந்தது கிடையாது. என் எண்ணம் என்னவென்றால்சாதி என்பது ஆதியிலிருந்த ஒரு தென்னாசிய வாழ்வுமுறைநேப்பாளத்திலிருந்து இலங்கைவரை. ஆரியர்களுடைய வருகைக்குப் பிறகு  வர்ண வேறுபாடு படிப்படியாய் வளர்ந்ததற்குக் காரணம் அவர்கள் வந்தபோது ஏற்கெனவே அங்கே  கண்ட சாதி வழக்கங்கள்தான்.

  சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர அமைப்புகளில் ஒவ்வொரு துறையில்  வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்ததைப் பல  குறிப்புகள் சொல்கின்றன; சாதி அமைப்பு இருந்ததையே இவை உறுதிப்படுத்துகின்றனஇன்னொன்றுஇலங்கைத் தமிழரிடையிலும் சாதி அமைப்பு தீவிரமாய் இருந்திருக்கிறது; ஆனால் அங்கே பிராமணர்கள் மிகக் குறைவு.

  சங்க இலக்கியம் உடனடியாய் வாயினால் பாடிய பண்புகளைக் கொண்டிருக்கவில்லைவாய்ப்பாடல்களைப் போலி செய்து எழுதி உருவானவை. திரும்பத் திரும்ப உபயோகிக்கும் வார்த்தைத் தொடர்களாலும் எடுத்துக்கொண்ட பொருள்களாலும் அது தெரியவரும். பழந்தமிழ் என்பது பெருஞ்சொத்து; இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் செலவிடும் அதே அளவு நேரத்தைப் பழந்தமிழ் இலக்கியங்களில் செலவிட்டால் அவர்களுடைய எழுத்தாற்றல் பலமடங்கு  உயரும் என்பது என் கருத்து."

                                           =================================

  (படம் உதவி - இணையம்)