Thursday 29 December 2016

வல்லவனுக்கு வல்லவன் - 1



(மஞ்சரி 2016 ஜூன் இதழில் வெளிவந்தது)

15-ஆம் நூற்றாண்டில், ஒரு பிரஞ்சு நகைச்சுவைக் குறு நாடகம் பதினொரு காட்சிகள் உடையதாய், செய்யுளில் இயற்றப்பட்டது; ஆசிரியரின் பெயர் உறுதியாய்த் தெரியவில்லை. அதன் முக்கிய காட்சிகளை உரைநடையில், நீக்குப்போக்குடன், மொழிபெயர்த்துத் தருகிறேன்.

மூலத்தின் தலைப்பு: வழக்குரைஞர் பாத்லேன்


(படம் - நன்றி இணையம்)

  
காட்சி --- 1                                             
இடம் -- வீடு.
பாத்திரங்கள் --- வழக்குரைஞர் பிஏர் பாத்லேன், மனைவி கீய்மேத்.


பாத்லேன் -- கீய்மேத், பணஞ்சம்பாதிக்க நான் எவ்வளவோ முயன்றாலும், முடியவில்லை. புனித மேரியே, பேர் வாங்காமற்போனாலும், நான் கொஞ்ச காலம் தொழில் செய்தேனே!

கீய்மேத் -- மாதாவே, நானும் அதைத்தான் நினைத்தேன். வழக்கில் வெற்றி பெற, முன்பு கொஞ்சம் பேர் உங்களைத் தேடி வந்தார்கள். இப்போது, எல்லாரும் 'வெட்டி வழக்குரைஞர்' என்கிறார்கள்.

பாத்லேன் -- என்றாலும், இந்தப் பிரதேசத்தில், மேயரை விட்டால், அதிகப் புத்திசாலி என்னைக் காட்டிலும் வேறு யாருமில்லை; இதைத் தற்புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எந்த வழக்கிலாவது அக்கு வேறு ஆணி வேறாக நான் பிரிக்காமல் இருந்தேனா?

கீய்மேத் -- என்ன பயன்? வறுமையால் சாகிறோம். என்னுடைய உடைகள் கிழிந்துவிட்டன; வேறு உடை எப்படி வாங்குவது எனத் தெரியவில்லை. உங்கள் திறமை எதற்கு  உதவுகிறது?

பாத்லேன் -- உடைதானே? எனக்குத் தெரியும் எப்படிப் பெறுவதென்று.

                                                                      ------------------

காட்சி 2.
இடம் : துணிக் கடை.
பாத்திரங்கள் --  பாத்லேன், வியாபாரி ழெரோம்.

(பாத்லேன் துணிக்கடைக்குப் போய்க் கடைக்காரரைப் பலவாறு புகழ்ந்து, உச்சி குளிரச் செய்த பின்பு)

பாத்லேன் -- இது கம்பளி நூலால் ஆனதா?

வியாபாரி -- அசல் ரூஆன் நகரத்து அருமையான கம்பளித் துணி. நல்ல நெசவு என உத்தரவாதம் தருகிறேன்.

பாத்லேன் -- நான் துணி வாங்குகிற எண்ணத்தில் வரவில்லை. இந்தத் துணியும் நிறமும் பிடித்திருக்கின்றன. வீட்டில் எண்பது வெள்ளிக் காசு இருக்கிறது.

வியாபாரி -- வெள்ளிக் காசா? ஏ யப்பா!

பாத்லேன் -- எனக்குக் கோட்டும் மனைவிக்குக் கவுனும் தேவைதான்.

வியாபாரி -- கம்பளிதான் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள்.

பாத்லேன் -- ஒரு ஓன் என்ன விலை?

வியாபாரி -- இருபத்து நான்கு காசு.

பாத்லேன் -- வேண்டாம், வேண்டாம்; இருபத்து நான்கு காசு! மாதாவே!

வியாபாரி -- போன குளிர்காலத்திலே நிறைய ஆடு செத்துப்போனதால் கம்பளி இப்போது கிராக்கி.

பாத்லேன் -- சரி, என்ன செய்வது? ஆறு ஓன் அளங்கள். எவ்வளவு ஆயிற்று?

வியாபாரி -- ஒன்பது பிரான்.

பாத்லேன் -- மூன்று வெள்ளி ஆகிறது; வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.

வியாபாரி -- சரி, வருகிறேன்.

பாத்லேன் -- என் வீட்டில் சாராயம் குடிப்பதற்கு வேறு வாய்ப்பு கிடைக்காது.

வியாபாரி -- குடிப்பதைக் காட்டிலும் இன்பம் வேறென்ன? வருகிறேன்.

பாத்லேன் -- அப்படியே, என் மனைவி ரோஸ்ட் பண்ணுகிற வாத்துக்கறியும் சாப்பிடலாம்.

வியாபாரி -- ரொம்ப மகிழ்ச்சி; போங்கள்; நான் துணியை எடுத்துக்கொண்டு அப்புறம் வருகிறேன்.

பாத்லேன் -- இது ஒரு கனமா? நானே கக்கத்தில் இடுக்கிக்கொண்டு போய்விடுவேன்.

வியாபாரி -- அப்படியானால் சரி; தாமதம் செய்யாமல் பணம் கொடுத்துவிட வேண்டும்.

பாத்லேன் -- நிச்சயம். (போகிறார்)

வியாபாரி - இருபது காசு பெறாததை இருபத்து நான்குக்கு வாங்கியிருக்கிறார்.

    (ஒரு ஓன் : 1.2 மீட்டர்)

                                            +++++++++++++++++++++++++++++





Wednesday 14 December 2016

புதுப் பிரதேசங்களைத் தேடி






கடலில் நெடுந்தொலைப் பயணித்துப் புதியநிலப் பகுதிகளைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அதற்கான வசதி வாய்ப்பையும் சில  நாட்டினரே பெற்றிருந்தனர்.

  பொ.யு.மு.வுக்கு முன்பே யவனர் இந்தியாவரை கலஞ்செலுத்திவந்து, தமிழகம் இலங்கை பற்றி அறிந்து  ஆவணப்படுத்தியுள்ளனர். கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட Periplus என்னும் நூல் (பொ.யு.மு. 1 ஆம் நூ.) ரோமிலிருந்து கேரளம் வரைக்குஞ் செல்வதற்கான கடற்பாதையையும்  கடல் வாணிகத்துக்கான வாய்ப்புகளையும் தெரிவிக்கிறது;  Ptolemy என்பவரின் Geographia  (பொ.யு. 2-ஆம் நூ.) என்ற புத்தகம் ஐரோப்பாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் உள்ள நாடுகளைக் காட்டும் படங்களோடு (maps) ஏராள விவரங்களையும் கொண்டுள்ளது.

     ஆனால் பெருமளவு கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில்தான் நிகழ்ந்தன.
  13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெனீசு நகரத்து Marco Polo   தூரக் கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து எழுதிய விவரமான நூல் Book  of the Marvels of the World அங்கெல்லாம் போக வேண்டும் என்ற பேராவலை மாலுமிகளிடம்  தூண்டியிருந்தது. திசைகாட்டி, சுக்கான் முதலிய நவீன கருவிகளின் புனைவும் கப்பல் கட்டும் தொழில் நுட்ப முன்னேற்றமும் 15-ஆம் நூற்றாண்டில் பற்பல கடலோடிகளுக்குத் துணிச்சலூட்டியது.

  போர்த்துகீசியர் முந்திக்கொண்டனர். மன்னர் முதலாம் ஜானும் அவரது மகன் ஹென்றியும் வினைமாண் நன்கலன்களைக் கட்டிபயிற்சியும் திறமையும் ஒருங்கே பெற்ற வலவர்களையும் ஊழியர்களையும் உருவாக்கிமெல்லமெல்ல ஆனால் துல்லியமாய், பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்துமுடித்தனர். அவர்களின் கப்பல்கள் ஆப்பிரிக்காவின் மேலைக் கரையையொட்டித் தெற்கு நோக்கி வந்தன.  சொல்லொணாத் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது: பலத்த காற்று  பாய்களைக் கிழித்துத் தொங்க விட்டமையால் ஊர்திகள் ஸ்தம்பித்தன; உணவும் குடிநீரும் குறையத் தொடங்கின; ஆயினும் மாலுமிகள் மனந்தளராமல் முயன்று முன்னேறி 1471-இல் நிலநடுக் கோட்டைக்  கடந்து, கண்டத்தின் தென் முனையை 1487-இல் எட்டினர். அவர்களின் தலைவர் Bartholomeu Diaz ,  'புயல்முனைஎன அதற்குப் பெயரிட்டார்பின்னாளில் அது ' நன்னம்பிக்கை முனை' ஆயிற்று.

  இத்தாலியர் Christhopher Columbus,  ஸ்பெயின் அரசர் Ferdinand   உதவியால்,   மூன்று கப்பல்களில் 90 ஆட்களோடுமேற்குப் பக்கமாய்ப் போய் இந்தியாவை அடைய வேண்டும் எனற குறிக்கோளுடன், 1492-இல் புறப்பட்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தமை உலகறிந்த செய்தி. நான்கு பயணங்கள் செய்த அவர் ஒரு புதுக் கண்டத்தை அறிந்ததாய் நினைக்கவில்லை; இந்தியாவில் இருப்பதாய்த்தான் நம்பினார். அவருக்குப் பின், இத்தாலியர் Amerigo Vespucci அமெரிக்கா நோக்கிப் பல தடவை சென்று அக்கண்டத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கண்டறிந்தார்.

  போர்த்துகீசியர் Vasco de Gama  தம் நான்கு கலன்களோடு பயணித்துநன்னம்பிக்கை முனையைத் தாண்டி,   இந்தியப் பெருங்கடலில் நுழைந்தார்;     பருவக் காற்று ஒத்துழைத்தமையால் கள்ளிக்கோட்டைக்கு நல்லபடி வந்து  சேர்ந்தார்கள். அதே நாட்டினராகிய Magellan பசிபிக் பெருங்கடலைக் கடந்து, பிலிப்பைன்ஸ் தீவுகளை அடைந்தார்; ( பசிபிக் என்று பெயர் சூட்டியவர் அவர்தான். அமைதியானது என்று  பொருள்). அவ்விட மக்களால் அவர் கொல்லப்பட்டார்ஆயினும் அவரது உதவியாளர் Sebastian del Cano பயணத்தைத் தொடர்ந்துஇந்தியப் பெருங்கடல் வழியாய் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டுபுறப்பட்ட இடத்துக்கே (ஸ்பெயின்) வந்தடைந்தார். ஐந்து கப்பல்களுள் ஒன்று மாத்திரம் எஞ்சிற்று; 285 பேரில் 18 பேர் மட்டும் பிழைத்தார்கள்; ஆனால்,  'உலகம் உருண்டை' என்பதைத் தங்கள் அரிய முயற்சியால் நிரூபித்தனர்.

அர்ஜெண்டினாவுக்குத் தெற்கில் இரு பெருங்கடல்களையும் இணைக்கும் நீர்ப்பாதை அந்தத் தியாகியின் நினைவாய் Strait of Magellan என்று பெயர் பெற்றுள்ளது.

  15-ஆம் நூற்றாண்டில், ஸ்பானியர் Sebastian Cabot  தென்னமெரிக்கா சென்றுஅங்கே மக்கள் அணிந்திருந்த வெள்ளி நகைகளைக் கண்டு வியந்துவெள்ளிச் சுரங்கங்கள்  நிறைந்ததொரு பிரதேசத்தைக் கண்டு பிடித்ததாய்  நம்பி, ஒரு கழிமுகத்துக்கு Rio  de la Plata எனப் பெயர் வைத்தார். (அவரது மொழியில் plata =வெள்ளி)நாடு Argentina எனப்பட்டது. (லத்தீன் argentum  = வெள்ளி). தப்புக் கணக்கு என்பது தெரிந்த பின்பும் பெயர்கள் மாறவில்லை.

   கடைசி கடைசியாய் வெளிச்சத்துக்கு வந்தது ஆஸ்த்ரேலியாஅது டச்சுக்காரர் சாதனை. Tasman என்பவர் 17-ஆம் நூற்றாண்டில் ஒரு தீவை முதன்முதலாய் அடைந்தார்அக்கண்டத்திற்குத் தெற்கிலுள்ள அது Tasmania என்று அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது. 1770-இல் ஆங்கிலேயர் James Cook  கிழக்குப் பகுதியைக் கண்டு, அதற்கு New South Wales என்ற பெயரை சூட்டினார்.

  இவ்வாறு, பற்பல துணிச்சல்காரர்கள், உயிரைப் பணயம் வைத்துமுன்பின் தெரியாத பாதைகளில் பயணம் மேற்கொண்டு,   புதிய புதிய   நிலப் பகுதிகளைக் கண்டுபிடித்தமையால் முழு உலகத்தையும் அறிந்துகொண்டோம்.

                              \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\                                                                                                


Saturday 3 December 2016

அச்சம்


 (இதுவும் மொப்பசானின் கதை; என் மொழிபெயர்ப்பு; ஏப்ரல் 1998 மஞ்சரியில் வந்தது)

ஒரு குளிர்கால மாலையில்,  வடகிழக்குக் காட்டிலே பயணித்தேன்; வேட்டையாடுவது என் நோக்கம். வானம் மூடியிருந்தமையால்,  இருமணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு வந்துவிட்டது; வழிகாட்டியாய் ஒரு கிராமவாசி வந்தார்; ஊசியிலை மரங்களின் கீழே,  சிறு பாதையில் நடந்து சென்றோம். பலத்த காற்று அவற்றை அலறச் செய்தது; கிளைகளுக்கு இடையே தெரிந்த வானில்,  மேகங்கள் கலைந்து, பேரச்சத்துடன் ஓடியதைக் கண்டேன்; சூறைக் காற்றின் விளைவாய்,  எல்லா மரங்களும் எதிர்ப் பக்கமாய்ச் சாய்ந்து துன்பம் தாங்காமல் முனகின. கம்பளி உடையையும் விரைவான நடையையும் மீறிக் குளிர் என்னை நடுக்கிற்று.

  வனப் பாதுகாவலரொருவரின் வீட்டில் நாங்கள் இரவு சாப்பிட்டுத் தங்க வேண்டும். அவரைப் பற்றிய தகவல்களை வழிகாட்டி கூறினார்: இரண்டு ஆண்டுக்கு முன்பு,  திருட்டுத்தனமாய் மரம் வெட்டிய ஒருவனை அவர் கொன்றார்; அதிலிருந்து,  அந்த நினைவால் பாதிக்கப்பட்டவர்போல,  கலகலப்பை இழந்துவிட்டார்; புதல்வர் இருவரும் மணமாகி அவருடனேயே வசிக்கிறார்கள்.

 வீட்டை அடைந்தோம்; வழிகாட்டி கதவைத் தட்டினார்; பெண்களின் அலறல்கள் ஒலித்தன; கம்மிய ஆண்குரல் ஒன்று,  "யாரது?" எனக் கேட்டது; தம் பெயரை வழிகாட்டி சொன்னார்.

 கதவு திறந்ததும் நுழைந்தோம்.

 அங்கே நான் கண்டது மறக்கமுடியாத காட்சி: ஒரு முதியவர்,  நரைத்த தலையும் ஒளி உமிழும் கண்ணுமாய்,  கையில் வேட்டைத் துப்பாக்கியுடன்,  ஹாலின் நடுவே நின்றிருக்க,  இரு கட்டுமஸ்தான இளைஞர்கள்,  கோடரிகள் ஏந்தி,  கதவுக்குக் காவல் இருந்தார்கள்; இருள் படர்ந்த ஒரு மூலையில் பெண்கள் இருவர்,  முழங்காலிட்டு சுவரில் முகம் புதைத்திருந்தனர்.

 வழிகாட்டியின் விளக்கத்தை செவிமடுத்த பெரியவர்,  ஆயுதத்தை சுவரில் மாட்டிவிட்டு எனக்கு ஓர் அறையைத் தயார் செய்யக் கட்டளையிட்டார். சுற்றி வளைக்காமல் என்னிடம் பேசினார்: "நான் இரண்டு ஆண்டுக்கு முந்தி,  இதே தேதியில் இரவில் ஒரு திருடனைக் கொன்றேன்; போன ஆண்டு அவன் வந்து என்னைக் கூப்பிட்டான்; இன்றிரவும் வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."

 இவ்வாறு சொல்லிவிட்டு,  " ஆகையால் நாங்கள் அமைதியாக இருக்க முடியவில்லை" என்று அவர் முடித்தபோது,  அவரது குரலில் இருந்த நடுக்கம் என்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது.

 என்னால் முடிந்த அளவு அவரைத் தைரியப்படுத்தினேன்; சரியாய் அந்த சமயம் பார்த்து அங்கே போய் மூடநம்பிக்கை விளைவித்த அச்சச் சூழ்நிலையைக் காணும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருந்தது; பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை எடுத்துக் கூறி,  எல்லாரையும் அமைதிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டேன்.



 கணப்பின் அருகில் ஒரு நாய்,  அடர்த்தியான மீசையுடன்,  நீட்டிய கால்களில் மூக்கைப் புதைத்தபடி,  உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. கடும் புயல் அந்தச் சிறிய வீட்டைத் தாக்கிற்று; மரங்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டதைக் கதவருகே அமைந்திருந்த சன்னலின் கண்ணாடியின் ஊடே,  மின்னல் ஒளியில் கண்டேன்.

 நான் எவ்வளவோ முயன்றும்,  வீட்டாரைப் பிடித்தாட்டிய திகில் அகலவில்லை; பேச்சை நிறுத்தினேனோ இல்லையோ,  அவர்கள் யாவரும் தொலைவில் ஏதேனும் குரல் கேட்கிறதா என்பதைக் கவனிப்பதில் முனைந்தனர். மடத்தனமான அவர்களின் பீதியைக் கண்டு அலுப்புற்று நான் படுக்கப் போகலாம் என்று நினைத்த சமயம்,  பெரியவர் நாற்காலியினின்று திடீரெனக் குதித்து,  துப்பாக்கியை ஏந்தி,  குளறியபடி,  'வந்துட்டான்,  வந்துட்டான், குரல் கேக்குது!' என்றார்; ஆண்கள் கோடரிகளைத் தூக்கினார்கள். அவர்களை அமைதிப்படுத்த நான் எண்ணிய அதே கணம்,  நாய் திடுமென விழித்துத் தலையை நிமிர்த்திக் கழுத்தை நீட்டிக் கணப்பை நோக்கியபடி மரண பயமூட்டி ஊளையிட்டது. அனைவரின் கண்களும் அதை நோக்கின; அது எதையோ பார்த்து மிரண்டாற்போல,  எழுந்து அசையாமல் நின்றுகொண்டு,  கண்ணுக்குத் தெரியாத,  இன்னதென்று புரியாத,  எதையோ எதிர்த்து மீண்டும் ஓலமிடத் தொடங்கிற்று. உடல் முழுதும் ரோமம் குத்திட்டு நின்றமையால்,  பயங்கரமான எதுவோதான் அதன் ஊளைக்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

 முதியவர்,  'அவனை மோப்பம் பிடித்துவிட்டது; அதன் எதிரில்தானே கொன்றேன்!' எனக் கூவினார்; கலக்கமுற்ற பெண்கள் நாயோடு சேர்ந்து அலறினார்கள்.

 என்னையும் மீறி உடம்பு நடுங்கியது. அந்த இடத்தில்,  அந்த நேரத்தில்,  உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதர்களுக்கிடையே,  நாயின் அத்தோற்றம் கிலியூட்டத்தான் செய்தது. பேரச்சம் என்னையும் பற்றிக்கொண்டது; எது குறித்து? தெரியவில்லை.

 யாவரும் சலனமின்றி,  வெளிறிப்போய்,  ஒரு பயங்கர நிகழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு,  தீட்டிய காதும் படபடக்கும் இதயமுமாய்,  சிறு ஓசைக்கும் அதிர்ச்சி அடையும் நிலையில் காத்திருந்தோம். நாயோ ஹாலை சுற்றிச் சுற்றி வந்து,  சுவர்களை மோந்துகொண்டிருந்தது; அதன் செயல்கள் எங்களைப் பைத்தியமாக்கும்போல் இருந்தன. காற்றின் வேகம் குறைந்து வந்தது.  

 கிராமவாசி,  ஏதோ வெறியில்,  நாய்மீது பாய்ந்து பிடித்துத் தோட்டக் கதவைத் திறந்து,  வெளியே தள்ளினார்.  அது உடனே மெளனமாயிற்று.  எங்களுக்கோ அந்த அமைதி முன்பைவிட அதிகம் பயந்தந்தது.
 திடீரென அனைவர்க்கும் அதிர்ச்சி! உருவமொன்று வெளிச் சுவரில் உராய்ந்து சென்றது; கதவின் எதிரில் வந்து,  அதைத் தயக்கத்துடன் தொட்டாற்போல் தோன்றிற்று; சில நிமிட நிசப்தம். நாங்கள் திக்பிரமை அடைந்தோம். அது மீண்டும் வந்து சுவரை உராய்ந்தது; நகங்களால் சுரண்டியது.

 சன்னல் கண்ணாடிவழி,  திடீரென்று தோன்றியது தலையொன்று: காட்டு விலங்குகளின் கண்களையொத்த கண் கொண்ட வெள்ளைத் தலை; அதன் வாயினின்றும் வெளிப்பட்டது தெளிவற்ற ஒலி,  முறையிடுவது போன்ற முணுமுணுப்பு. அதே சமயம்,  வீட்டில் கேட்டது காதை செவிடாக்கும் சத்தம்: வன அலுவலர் சுட்டிருக்கிறார்! புதல்வர்கள் விரைந்தோடி மேசையைத் தூக்கி சன்னலை அடைத்து,  அந்த மேசைக்கு ஓர் அலமாரியை முட்டுக்கொடுத்தனர்.

 அந்த எதிர்பாராத வேட்டினால் எனக்கு ஏற்பட்ட உடல்,  மன அதிர்ச்சிகளால்,  நான் பிரக்ஞை இழந்து அச்சத்தால் இறந்துவிடுவேன் எனத் தோன்றிற்று.

 யாவரும் அதிகாலைவரை ஆடாமல் அசையாமல்,  ஒரு வார்த்தைகூடப் பேச இயலாமல்,  மதி மயங்கி முடங்கிக் கிடந்தோம். சூரியனின் கிரணம் ஒன்று துவாரம் வழியாய் உள்ளே வந்ததைக் கண்ட பின்தான் வெளியே போகத் துணிந்தோம்.

 அங்கே! சுவரை ஒட்டினாற்போல,  குண்டு பிளந்த வாயுடன்,  இறந்து கிடந்தது நாய்; தோட்டத்து வேலியின் அடியில் குழி தோண்டி,  அது தெருப் பக்கம் வந்துவிட்டிருந்தது!


        +++++++++++++++++++++++++++++++++++