Monday 17 July 2017

ஞாலம்




உலகம் எனப் பொருள்படும் ஞாலம் என்னுஞ்சொல் பழைய நூல்களில் பரவலாய்க் காணப்படுகிறது:

       1 -- தொல்காப்பியம் - பொருள். பா 88, அடி 19.
                    ஞாலத்து வரும்
       2 -- அக நானூறு -  பா 4, அடி 5.
                    மலர்ந்த ஞாலம்
       3 -- திருக்குறள் - 102.
                    ஞாலத்தின் மாணப் பெரிது
       4 --குறுந்தொகை - பா 267,  முதலடி.
                    இருங்கண் ஞாலத்து
        5 -- பெருங்கதை 1. 37.
                    ஞாலத்து இன்னுயிர் வாழ்வோர்

   இந்தச் சொல் ஞாலல் என்பதுடன் தொடர்பு உடையது; ஞாலல் என்றால்  தொங்குதல்; ஞான்று = தொங்கி; இதுநான்று என மாறலாம்; நான்று கொள்ளுதல் =  தூக்கில் தொங்குதல்.

  பூமியைத் தமிழர் ஞாலம் என்றனரே! அது அந்தரத்தில் தொங்குகிறது என்பதை அறிந்திருந்தனரா என்று சிந்திக்க இடமுண்டுஆனால் அது பற்றி  இலக்கியங்களில் எந்தக் குறிப்புமில்லை.

 நீண்ட நெடுங்கால நம்பிக்கைபூமி தட்டையானது என்பதே; அதைப் பாய்போலச் சுருட்டிக்கொண்டு போய்க் கடலில் ஒளிந்தான் அசுரனொருவன்  என்று புராணம் கூறுகிறது. தட்டையுலகை எட்டுத் திக்குகளிலும் ஆண் யானைகள் தாங்குகின்றன என்பது ஆரியரின் ஊகம்; அவற்றை, 'அஷ்ட திக் கஜங்கள்' என்றனர்; பெயருஞ் சூட்டினர்: அஞ்சனம்ஐராவதம்குமுதம், சார்வபெளமம்சுப்ரதீபம்புட்பதந்தம், புண்டரிகம், வாமனம்.
   அந்தக் கருத்தைத் தமிழரும் ஏற்றனர்:

1 -- மதுரைக் காஞ்சி அடி 14, 15.
                  மேதகு மிகப்பொலிந்த
                  ஓங்குநிலை வயக்களிறு
பொருள்: ஓங்குநிலை - உலகைத் தாங்குகிற, வயக்களிறு -  வலிமை வாய்ந்த ஆண் யானைகள்,மேதகு -  சுமை நீங்கி, மிகப் பொலிந்த -மிகுந்த  அழகு பெற்றன.

  கருத்து - பாண்டிய மன்னர்கள் உலகத்தைத் தாங்குகிற பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொண்டமையால் யானைகளின் பாரம் நீங்கிற்று.

    ஆயிரந்தலைபடைத்த ஆதிசேஷன் என்னும் பாம்பு தனது ஒரு தலையால் உலகத்தைத் தாங்குகிறது என்பது வேறொரு நம்பிக்கை: "புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்" என்றார் பிற்கால ஒளவையார்.

   கம்ப ராமாயணம் இந்த இரு நம்பிக்கைகளையும் சேர்த்துக் கூறுவதுடன்  மூன்றாம் நம்பிக்கை யொன்றையும் தெரிவிக்கிறது. சில மலைகளும் அந்தப் பணியைச் செய்கின்றனவாம்.
   பா---1412 :  அடி  3 , 4 :
    வையமென் புயத்திடை நுங்கள் மாட்சியால்
    ஐயிரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்
   பா -- 1414 :
    விரும்பிய மூப்பெனும் வீடுகண் டயான்
    இரும்பியல் அனந்தனும் இசைந்த யானையும்
    பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய
    அரும்பொறை இனிச்சிறி தாற்ற ஆற்றலேன்.

  பொருள் -- வீடு கண்ட யான் =  அரச பதவியிலிருந்து விடுதலை பெறுதற்குரிய காலத்தை அடைந்துவிட்ட நான்.

 விளக்கம் -- தசரதன் தன்னுடைய அமைச்சர்களிடம் கூறியது:                                     
  உலகை என் தோள்களில், உங்களது ஒத்துழைப்பால், அறுபதாயிரம் ஆண்டு சுமந்தேன்.

 மூப்பு வந்தமையால்பதவி துறக்க வேண்டும் எனத் தெரிந்த நான், ஆதிசேஷனும் யானைகளும் மலைகளும் பூமியைச் சுமக்கிற தத்தம் தொழிலிலிருந்து நீங்கும்படி இதுவரை நான் தாங்கிக்கொண்டிருந்த பாரத்தை இனியுஞ் சுமக்க என்னால் இயலாது.

  தசரதனால் பாம்புக்கும் களிறுகளுக்கும் மலைகளுக்கும் 60,000 ஆண்டு ஓய்வு கிடைத்தது.

   குடும்ப பாரம், அரச பாரம் என்பது மரபு; தந்தை குடும்பத்தைச் சுமக்கிறான், மன்னன் புவியைச் சுமக்கிறான்.

   யானைகளையும் ஆதிசேஷனையும் மலைகளையும் எது தாங்குகிறது என்ற வினாவுக்கு விடையில்லை!

++++++++++++++++++++++++++++++

Sunday 2 July 2017

சான்றோர் கவி

நூல்களிலிருந்து --- 14





புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் அ. பாண்டுரங்கன் இயற்றி, 2010 இல்  வெளிவந்திருக்கிற 'சான்றோர் கவி' என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியைப் பதிகிறேன்:

   காப்பியக் கதையின் தொடக்கம்

 காப்பியக் கதையை நாடகப் போக்கில் தொடங்குவது மேனாட்டுக் காப்பிய மரபு; உணர்ச்சி மிக்க இடைப்பகுதியிலிருந்து தொடங்கி முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கிளைக்கதைகள், உவமைகள் வாயிலாக விளக்கும் மரபு ஹோமருடைய காப்பியங்களில் காணப்படுகிறது; இலியாது (Iliad) அகமெம்னானுக்கும் (Agamemnon) அகில்லெசுக்கும் (Achilles)  அடிமைப்பெண் ஒருத்தியைப் பற்றிய சச்சரவிலிருந்து தொடங்குகிறது. துரோயன் (Trojan) நாட்டுக்கும் கிரேக்க நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பெரும் போரே  காப்பியத்தின் பாடுபொருளாக இருப்பதால், அப்பகுதியே முதன்மை பெறுகிறது.

 ஹோமர் எழுதிய மற்றொரு காப்பியமான ஒதிஸ்ஸி (Odyssey) துரோயன் போர் முடிந்து பத்து ஆண்டுகள் கழிந்து, அதில் பங்கு பெற்ற வீரர்கள் தங்கள் தாயகம் திரும்புவது பற்றிக் கிரேக்கக் கடவுளர் கூடி ஆலோசனை நடத்துவதிலிருந்து தொடங்குகிறது. இவ்வாறு நாடகப் போக்கில் கதையைத் தொடங்குவதால், கற்போரின் கவனம் முழுதும் முதலிலிருந்தே காப்பியத்தில் பதிந்து விடுகின்றது; மேலும் இம்முறை கிரேக்க நாடகங்களின் அமைப்பை ஒத்திருக்கின்றது. இம்முறையாற் கிட்டும் சிறந்த பயனைக் கருதியே வர்ஜில் (Virgil) மில்டன் (Milton) போன்ற மாபெரும் மேனாட்டுக் காப்பியப் புலவர்களும் தங்கள் கதைகளை இடையிலிருந்து நாடகப் போக்கில் தொடங்கிப் பாடுவாராயினர். ஹோராஸ் (Horace) என்ற இலக்கியத் திறனாய்வாளர் இதனை in medias res என்னும் விதியாக்கினார்.

  ஆனால் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்தியக் காப்பியங்களும்  சீவக சிந்தாமணி, சூளாமணி முதலிய தமிழ்க் காப்பியங்களும் காப்பியத் தலைவனின் பிறப்பில் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து செல்கின்றன. கதையைத் தொடங்கும்போதே நம் கவனம் முழுதும் கதையில் பதிந்துவிடுவதை இப்படிமுறை உத்தி (Chronological order of sequences ) சிதைத்து விடுகிறது. சிலப்பதிகாரம் ஓரளவிற்குக் கிரேக்கக் காப்பிய மரபைப் போன்று, திடுமென நாடகப் போக்கில், கண்ணகி - கோவலன் திருமணத்துடன் தொடங்குகின்றது. அடுத்தடுத்து வருகிற நிகழ்ச்சிகளும் மேற்கூறிய படிமுறை உத்தி மரபையொட்டி நிரலே அமைக்கப்படவில்லை. கண்ணகி- கோவலன் வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்ச்சிகள் நேரடியாகக் கூறப்படாமல் தனித்தனிக் கூற்றுகளாகவோ ஓரங்க நாடகக் காட்சிகளாகவோ பாடப்பட்டுள்ளன.

                
                 ===========================
படம் உதவி - இணையம்