Friday, 11 August 2017

மரணத்தின் பின்பு

சம வளர்ச்சியற்ற இரு நாகரிகங்கள் சந்திக்க நேர்ந்தால் மிகுதியாக முன்னேறியிருப்பது எதுவோ,  அது மற்றதைத் தன் வசப்படுத்தும்.
ரோமானியர் கிரேக்கத்தின்மீது படையெடுத்து அடிப்படுத்தினாலும் அதன் மகத்தான நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு,  அதனுடைய இலக்கியங்கள் தெய்வங்கள் புராணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றை யேற்று மேற்கொண்டனர்: வீரத்தால் வென்றது ரோம்,  கலையால் கிரேக்கம்!

  அது போன்றே,  ஆரிய,  தமிழ் நாகரிகங்கள் கலந்தபோது,  அகம் புறம் அல்லாமல் வேறெதுவும் இல்லாத தமிழர்,  அடிபணிந்து,  வடமொழி இலக்கியங்கள் சாஸ்திரங்கள் தொன்மங்கள் கடவுள்கள் தத்துவம் வேதம் சட்டம் முதலானவற்றைப் போற்றிக் கடைப்பிடித்தனர்,  மொழிபெயர்த்தனர்; அம்மொழியைத் தேவபாடையென உயர்த்திப் புகழ்ந்தனர்;  இன்னமும் அடிமைகளாய்த்தான் வாழ்கிறோம்: சோதிடம்,  நல்ல நேரம் கெட்ட நேரம்,  ராகுகாலம்,  எமகண்டம்,  வாஸ்து,  கோவிலிலும் இல்லத்து நிகழ்ச்சிகளிலும் வடமொழி மந்திரங்கள்,  என்று எத்தனையோ! நம் ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரியமே அடிப்படை. மறுபிறவிக் கொள்கையும் நம்முடையதல்ல; அது ஆரிய அறிஞர்கள் சிந்தித்துக் கண்ட முடிவு.

 மக்களுக்குள் அழகு,  தோற்றம்,  வாழ்க்கைவசதி முதலானவை வேறுபடுவதேன் என்ற வினாவை எழுப்பி யோசித்தார்கள் அவர்கள்: கடவுள் காரணமல்ல,  அவர் தம்முடைய பிள்ளைகளை ஏற்றத்தாழ்வுடன் படைப்பாரா? ஆகையால்,  அவரவரே காரணம்; பல பிறவிகள் உண்டு; ஒன்றில் செய்த வினைகளின் பலனை அடுத்ததில் அனுபவிக்கிறோம்; புண்ணியம் புரிந்தவன் மேலானவனாய்ப் பிறக்கிறான்,  பாவி தாழ்நிலையில் உழல்கிறான். எனவே,  அடுத்த பிறப்பில் இன்ப வாழ்வை விரும்புவோர்,  இப்போது அறச்செயல்களைச் செய்து புண்ணியம் தேடவேண்டும்.

 அதைத் தமிழறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள். இந்தப் பிறவியை இம்மை எனவும் அடுத்த பிறப்பை மறுமை எனவும் இலக்கியங்கள் கூறுகின்றன:

         இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்  - புறம் 134

           (இப்பிறவியில் செய்தது மறுமையில் பயன் விளைவிக்கும்)

        இம்மைப் பிறப்பில் பிரியலம்  - குறள் 115

           (இந்தப் பிறப்பில் நாம் பிரியமாட்டோம்)

        இம்மைச் செய்தன யானறி நல்வினை  - சிலப். 15 - 91

 (மாடலன் கோவலனிடம் சொன்னது: இப் பிறவியில் நீ செய்தவை எனக்குத் தெரிந்து நற்செயல்களே)

        இம்மை மாறி மறுமை ஆயினும்
        நீயாகியர் என் கணவனை
        யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே - குறுந். 49

 (என்று ஒரு தலைவி தலைவனிடங் கூறினாள்: இந்தப் பிறப்பு போய் மறு பிறப்பு வந்தால் நீதான் என் கணவனாக வேண்டும்; நான்தான் உன் நெஞ்சத்துக்கு உகந்தவள் ஆகவேண்டும்).

 ஆரியரில் ஒருசாரார் வேறொரு நம்பிக்கையைப் பரப்பினர்: புண்ணியஞ் செய்தவன் மோட்சவுலகில் அந்தமொன்றில்லா ஆனந்தம் எய்திக் கவலை சிறிதும் இல்லாமல் காலம் கழிப்பான்; பாவம் புரிந்தவன் நரகத்தில் தண்டிக்கப்படுவான். (மோட்ச நரகங்கள் பிற மதங்களிலும் உண்டு).
சிந்திப்போம்: வினைக்கேற்ற பலனைச் சுவர்க்கத்திலோ நரகத்திலோ பெற்றுவிட்டால்,  அப்புறம் மறுபிறவி எதற்கு? நல்வினைக்கு இரு கட்டப் பரிசா? தீவினைக்கு இரண்டு முறை தண்டனையா? அவ்வாறு இருக்க முடியாது அல்லவா? ஆகையால் இரண்டு நம்பிக்கைகளும் முரண்படுகின்றன; இருப்பினும் இரண்டையும் ஏற்றுள்ளோம்.

 ஆராய்ச்சிகள் தோன்றாத பழங்கால நம்பிக்கைகள் அவை;  இப்போது எல்லாத் துறைகளிலும் நிகழ்கின்ற ஆய்வுகளால் புதுப் புது உண்மைகள் அறியப்படுகின்றன பூமியைத் தவிர வேறெங்கும் உயிர் இருப்பதாய் இதுவரை தெரியவில்லை; கற்பனைக்கெட்டாத் தொலைவுக்குக் கருவிகளை யனுப்பித் துருவித் துருவித் தேடியும் இந்திரலோகம்,  கைலாசம்,  வைகுந்தம்,  கந்தர்வர் உலகம், வித்தியாதரர் நாடு,  எமலோகம்,  மேலே ஏழு உலகு,  கீழே ஏழு  என எதுவும் காணப்படவில்லை; அதேபோல்தான் சுவர்க்க நரகங்களும்.

 சிலர் கூறலாம்,  நரக அச்சம் தேவைதான், இல்லாவிடில் உலகில் தீமை மிகுந்துவிடும் என்று. ஆதாரமற்ற கூற்று அது. தண்டனை பெற்றுச் சிறைகளில் காலந்தள்ளும் கோடிக்கணக்கானவர்கள் கடவுள் நம்பிக்கை, நரக நம்பிக்கை உடையவர்கள்தான்; அவர்கள் குற்றம் புரிவதற்கு அவை தடையாய் இல்லை.

 நரகம் சுவர்க்கம் இல்லையென்றால்,  மறு பிறவிக் கொள்கைதான் சரியா? அதுவுந் தவறே. யோசிப்போம்: முற்பிறப்பின் பலனை அடுத்ததில் அனுபவிக்கிறோம் எனில் முதன்முதல் பிறவி ஏனேற்பட்டது? பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் இறக்கின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் உண்டு; அந்தச் சில நிமிடங்களில் பிறவிப் பயனை அவை அடைந்துவிட்டனவா? உயிரின்றி வெளிவருகின்ற குழந்தைகள்,  தாயின் வயிற்றிலேயே,  அதாவது பிறக்காமலேயே,  முன் பிறப்பின் விளைவுகளை நுகர்ந்துவிட்டனவா? விடையற்ற வினாக்கள்! ஆகவே ஒரு பிறவி மட்டுமே உண்டு.
 பின்,  மாந்தரின் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணந்தான் என்ன? ஒரு காரணமும் இல்லை; அது இயற்கை நியதி; எல்லா உயிரினங்களுக்கும் பொருந்துவது:

சிங்கம்,  புலி -------------மான், ஆடு.
யானை,  காண்டாமிருகம் ---------எலி, கீரி.
உடும்பு ----- பல்லி.
பலவண்ணக்கிளி ------------கல்லுக்குருவி.       
செந்தாமரை மலர் ----------------- எருக்கம் பூ.
ஆலமரம் ------ முருங்கை மரம்.

சரி,  செத்தபின் மனிதன் என்ன ஆகிறான்? மண்ணாகிறான்,  மற்ற உயிரினங்களைப் போல.

                   ---------------------

(படம் -நன்றி இணையம்)

9 comments:

 1. சிந்திக்க வைத்த கேள்விகள்... முடிவில் தெளிவு...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 2. ஏற்ற தாழ்வுகளுக்குக் காரணம் மனிதனின் சொந்த வெறுப்பு விருப்பால்தான் ஆண்டைகள் அடிமைகள் என்றெல்லாம் பாகுபடுத்தி அவற்றை நில்சை நாட்டப் பல கதைகளும் கூறி மனிதனை சிந்திக்கவிடாமல் செய்த்தது காலத்தின்கோலம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் ஒரு சின்ன கதை முற்பிறப்பு இப்பிறப்பு பற்றியது ஒரு சிறுவன் கரப்பான் பூச்சி ஒன்றை வைத்து அதை நூலால் க்கட்டி விளையாடிக் கொண்டிருந்தானாம் ஒரு பெரியவர் அதைப் பார்த்து அதைதுன்பப்படுத்தாதே உன் மறு பிறப்பில் நீகரப்பான் பூச்சியாகி அது மனிதனாகி உன்னைத் துன்புறுத்தலாம் என்றாராம் அடற்குச் சிறுவன் போன ஜென்மத்தில் நான் கரப்பானாக இருந்து அது நானாக இருந்து என்னை வருத்தி இருக்குமோ என்னவோ என்றானாம் ....!

  ReplyDelete
  Replies
  1. வேறுபட்ட கருத்தைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு ; ஆனால் அது தவறான கருத்து . ஒருவர் பலசாலியாய் இருப்பதற்கும் மற்றவர் நோஞ்சானாய்ப் பிறந்தமைக்கும் அவர்களுடைய விருப்பமா காரணம் ? அசிங்கமாய் இருப்பது , மாற்றுத் திறனாளியாய் இருப்பது முதலானவையும் விரும்பிப் பெற்றவையா ? கரப்பான் பூச்சிக் கதையை நான் கேள்விப்பட்டுள்ளேன் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete


 3. வினைகளின்படிதான் வாழ்க்கை அமையும்ன்னா இத்தனை கடவுள் எதுக்கு?!

  ReplyDelete
  Replies
  1. வருக , உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சரியான கேள்வி கேட்டீர்கள் .

   Delete
 4. மன்னிக்க வேண்டும் வேறு பட்ட கருத்தாக நான் என்ன சொல்லி விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. மன்னிப்பு எதற்கு ? உங்கள் கருத்தை எழுதினீர்கள் கட்டுரையில் அவரவர் வினையே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுவதை ஆய்வு செய்துள்ளேன் . நீங்கள் அதுபற்றி எதுவும் கூறாமல் விருப்பு வெறுப்பே காரணம் என வேறொன்றைச் சொல்லியிருக்கிறீர்கள் , அதைத்தான் வேறுபட்ட கருத்து என்றேன் . மீண்டும் சொல்கிறேன் : சொல்ல உரிமையுண்டு .

   Delete
 5. மனிதருக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு; இறந்த பின் மனிதன் மண்ணாகிறான்; சொர்க்கம், நரகம் எல்லாம் கட்டுக்கதை, ஏற்றத்தாழ்வுகள் அனைத்துமே நம் விருப்பு வெறுப்பின் படி அமைவதில்லை; அது இயற்கை நியதி என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். இக்காலத்துக்குத் தேவையான ஒரு பதிவுக்கு நன்றி.

  ReplyDelete