Wednesday 6 September 2017

வெற்றிலை






  வெற்றிலைக் கொடியை அகத்தி மரத்தில் படர விடுவார்கள். அதற்கு விதை, காய் முதலானவை இல்லைஇலை மட்டுமே; ஆதலால் வெற்றிலை என்று மிகப் பொருத்தமாய்ப் பெயரிட்டார்கள். வெற்றிலை = வெறுமை + இலை. வெற்றிலை பயிரிடும் நிலப்பகுதி கொடிக்கால் எனப்படும்; கொடிக்கால் வேளாளர்கள் ஒரு தனிச் சாதி.
 வெற்றிலை பாக்கு இரண்டையுஞ் சேர்த்துக் குறிக்கிற வடசொல் 'தாம்பூலம்'; வெற்றிலை போடுதல் என்பதும் தாம்பூலந் தரித்தல் என்பதும் ஒன்றுதான். வெற்றிலை போடும் பழக்கம் எப்போது தொடங்கிற்று என்பது தெரியவில்லை. பழங்கால மன்னர்கள், பெருஞ்செல்வர்கள், தம் ஊழியர்களுள்அடப்பக்காரர் என்று ஒருவரை நியமித்திருந்தனர்;  தாம்பூலத்தைத் தயாராய் வைத்திருந்து, கேட்டவுடன் கொடுப்பது அவரது முழு நேரப் பணி.
  ஏறக்குறைய 80 ஆண்டுக்கு முன்புவரை, வெற்றிலை மெல்லும் பழக்கம் தமிழரைப் பிடித்தாட்டிற்று. வெற்றிலைத் தட்டில்லா வீடு இருந்ததில்லை; பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, பாக்குவெட்டி ஆகியவையுங் கொண்ட வெற்றிலைத் தட்டைவந்த விருந்தினர் எதிரில் வைப்பார்கள், இப்போது காப்பி தருவதுபோல. ஏற்கனவே அவரது வாயில் தாம்பூலம் இருந்தாலும் அதைத் துப்பிவிட்டுப் புதிதாகப் போட்டுக்கொள்வார். Chain  smoker  மாதிரிசங்கிலிவெற்றிலையர் நிறையப் பேர் இருந்தனர். வாய் மென்றுகொண்டே இருக்கும், மாடு அசை போடுவது போன்று. பேச நேர்ந்தால், தலையை அண்ணாந்து, முகவாய்க்கட்டையைக் கொஞ்சம் முன்னுக்கு நீட்டிகீழுதட்டை உயர்த்திஎச்சில் வழியாதபடி, லாகவமாகப் பேசுவார்கள்; சில  சமயம் சரியாய்ப் புரியாது.
  வெற்றிலைச் செல்லம் என்ற பிரியப் பெயருடைய சிறு பெட்டியொன்றும் பயன்பாட்டிலிருந்ததுபுத்தக வடிவமுடைய மற்றும் வெண்கலத்தாலான அது, (செல்வர்களிடம் வெள்ளிப் பெட்டி) எல்லாவற்றையுந் தனித்தனியாக வைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறுசிறு சிறு தடுப்புகள் கொண்டதுபயணங்களின்போது அதுவும் கூடப் போகும்.

 இள வெற்றிலைகொழுந்து வெற்றிலை எனப்பட்டது:
  கொட்டைப்பாக்கு கொழுந்து வெத்திலை
  போட்டா வாய் சிவக்கும்
   பாடல் நினைவுக்கு வருமே! கொட்டைப் பாக்கு அல்லாமல் வெட்டுப்பாக்கு, துவர் பாக்கு, களிப் பாக்கு என்று வேறு பாக்குகளும் இருந்தன. விருப்பமான பாக்கை யெடுத்துப் பாக்கு வெட்டி என்னுங் கருவியால் சின்ன சின்ன தூள்களாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்; இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் காம்பைக் கிள்ளி யெறிந்துவிட்டுபின் பக்கத்தில் சுண்ணாம்பு தடவி, முன்புறம் பாக்குத்தூள், கொஞ்சம் புகையிலை, வைத்து மடக்கிப் பொட்டலம் போல் சுருட்டி வாயில் போட்டு மென்றால் சிறிது நேரத்தில் நாக்கு ரத்தச் சிவப்பு நிறங் கொள்ளும்.
  மெல்ல இயலாத முதியோர் என்ன செய்வதுஒரு சிறிய இரும்பு  உரலும் அதற்குப் பொருத்தமான உலக்கையும் உதவின. வெற்றிலை  வகையறாவை அதில் போட்டு இடித்தால் மிருதுவான செந்நிறக் கலவை உருவாகும்; அதை எடுத்து வாயிலிட்டுக் குதப்பிச் சுவைக்கலாம்.
  வெற்றிலை மட்டுமே விற்கிற கடைகள் இருந்தனநூறு நூறாய் அடுக்கி மடக்கிவாழை நாரால் கட்டி வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு கவுளி எனப்பட்டது. மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கவுளி கவுளியாக வாங்குவர்.
  மூடியுடன் கூடிய சிறு டப்பியொன்றில் சுண்ணாம்பு இருக்கும்அதற்குச் சுண்ணாம்புக் கரண்டகம் என்பது பெயர்.
  சுருட்டுக் கடைகளில், சுமார் ஒரு முழ நீளமுடைய கருநிறப் புகையிலைகள் ஒவ்வொன்றையும் இரண்டாய் மடக்கி,  அடுக்கிஎப்போதும் ஈரப்பதத்தில், சாக்குப் போன்ற துணியால் மூடி வைத்திருப்பர். ஒரு நறுக்கு வேண்டுமெனக் கேட்டால்துணியை விலக்கிக் கத்தரிக்கோலால் மூன்று இஞ்ச் அளவுள்ளதாக ஒரு பகுதியை நறுக்கித் தருவர். 'புகையிலை விரித்தால் போச்சு!' என்பது பழமொழி; காரம் போய்விடுமாம்.
  செல்வர்களின் வீட்டுப் பெண்வயதுக்கு வந்தால்பூப்பு நீராட்டு விழாவையொட்டி, ஆடவர் மட்டுமே கலந்துகொள்ளும் ஜாலிக் கொண்டாட்டம் ஒன்று நிகழும்: இல்லத்தின் முன்கட்டில், வட்டமாக அமர்ந்திருக்கும் அவர்களின் நடுவிலே, ஓரிளந்தாசியாராவது ஒருவரை நெருங்கித் தாம்பூலம் வைத்த தட்டொன்றை நீட்டுவாள்; தாசி கையால் தாம்பூலம் பெறுதல் விபச்சாரத்துக்குச் சம்மதிப்பதைக் குறிக்குமாகையால், தட்டில் அவர் பணம் வைத்து வேறொருவரைச் சுட்டிக் காட்டுவார்; இவ்வாறு அவள் அங்குமிங்கும் சென்று தட்டு நீட்டுவதும் கூட்டத்தார் ஒருவரையொருவர் கிண்டல் செய்து மகிழ்வதும் இன்ப நிகழ்வாய்க் கருதப்பட்டது. அவளுக்கு நல்ல அறுவடையெனச் சொல்ல வேண்டுமோ? அது சிறிது சிறிதாய்க் கைவிடப்பட்டது.
  புகையிலைப் பழக்கத்தால் கன்னப் புற்று அபாயமுண்டு என அரசும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்தமையால்தாம்பூலம் தரிப்போர் எண்ணிக்கை குறைந்ததுஆயினும் புகையிலை இல்லாமல் வெற்றிலை போடுபவர்கள் கணிசமாய் இருந்தார்கள். பரப்புரை நீடித்தது. பாரதிதாசன் பாடினார்.
ஒருவேளை அல்லது இருவேளை வெற்றிலை போடு – அதைப் போடாது  ஒதுக்கலும் நல்ல ஏற்பாடு"
என்று.
 கோயம்புத்தூர் ஆர். எஸ். கிருஷ்ண செட்டியார் மாற்றி யோசித்தார்: பாக்கைத் தூளாக்கி மணமூட்டிச் சிறிய ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் அடக்கி, 'அசோகா சுகந்த பாக்குத்தூள்' என விளம்பரஞ் செய்தார்; வாணிகம் விரைவில் சூடு பிடித்தது. பாக்கை நறுக்கும் வேலையைப் பாக்குவெட்டி இழந்தது. அமோகாரோஜாநிஜாம்மலர் என்றெல்லாம் பாக்குப் பொட்டலங்கள் சந்தையை ஆக்ரமித்தன. மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆயத்த ஆடை மாதிரிஆயத்த தாம்பூலமாகிய பீடா வந்தது. வெற்றிலை போடும் வழக்கம் காலப்போக்கில் அறவே மறைந்ததுகண்ட இடங்களில் எச்சில் துப்பியதால் பொதுச் சுவர்கள் காவிக் கறை படிந்து அசிங்கப்பட்டதும் ஒழிந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் தாம்பூல முக்கியத்துவம் தொடர்ந்து நீடிக்கிறது.
  திருமணத்தை உறுதி செய்வதற்கு வெற்றிலைத் தட்டு மாற்றிக்கொள்கிறோம்; நிகழ்ச்சிக்குப் பெயரே ' நிச்சய தாம்பூலம்'.  நெருங்கிய உறவினர்களைத் திருமணத்துக்கு அழைக்கநேரில் போய்த் தட்டில் அழைப்பிதழுடன் வெற்றிலை, பாக்கு, பணம் வைத்து நீட்டுகிறோம்அது 'வெற்றிலை பாக்கு வைத்தல்எனப்படுகிறது. மங்கள நிகழ்வுகளின் இறுதியில்,  'தாம்பூலப் பை' கொடுத்து வழியனுப்புகிறோம். இசை, நடனம் முதலானவற்றுக்கு ஒப்புக்கொள்ளும் கலைஞர்தாம்பூலத் தட்டில் வைத்துத் தருகிற முன்பணத்தைப் பெற்றுக்கொள்வார்அது, 'வெற்றிலை பாக்கு வாங்குதல்'.  அர்ச்சனை, பூஜைவரிசைகள்தாம்பூலம் இல்லாமல் நடக்குமா?
  உண்பொருளாயும் பயன்பட்ட ஒன்று, இப்போது மங்கலச் சின்னமாய் மாத்திரம் விளங்குகிறது. என்னே, வெற்றிலையின் மாட்சியும் வீழ்ச்சியும்!

                                                        ===========================

13 comments:

  1. வெற்றிலை பற்றிய ஒரு தகவல் கள்ஞ்சியம் நன்றி என் வீட்டில் ஊருக்குச் சென்றிருந்தபோது கொண்டு வந்து வைத்தகொடி ஒன்று இப்போது எங்கள் வீட்டு மாமரம் பற்றி ஏறி இருக்கிறதுவெற்றிலையை சும்மாக் கொடுக்கக் கூடாதாமே

    ReplyDelete
    Replies
    1. வெற்றிலைக் கொடியை வாழவைக்கிற உங்களுக்குப் பாராட்டு . ஆமாம் , அப்படித்தான் சொல்வார்கள் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மதிய உணவுக்கு பிறகு வெற்றிலை பாக்கு போடுவதே அலாதியான சுகம்தான் நீங்கள் சொன்னதுபோல் கன்னப்புற்று நோய் விழிப்புணர்வுக்குப்பின் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியமும் கொடுப்பதும் நிறுத்தப்பட்டது தொழில் நலிந்த விவசாயிகள் மாற்றுப்பயிர் பயிரிட தெரியாமல் வேறு தொழில் தேடி இடம்பெயர்ந்து விட்டனர் . ரசிக்லால் பாக்கு என் அம்மாவுக்கு பிடித்த ஒன்று . அறிய தகவலுக்கு நன்றி ஐயா .

    ReplyDelete
    Replies
    1. வருக , உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அந்த அலாதியான சுகந்தான் நிறையப் பேரை addicts ஆக்கியிருந்தது .

      Delete
  4. வெற்றிலை பற்றிய தகவல்களை அறிந்தேன்

    ReplyDelete
  5. வெற்றிலை பற்றிய தகவல்களை அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாசித்துக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  6. வெற்றிலை பற்றிய அறியாத தகவல்கள் அறிந்தேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருக , வருக , நீண்ட நாள் ஆயிற்றே ! உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  7. பாராட்டிக் கருத்து தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  8. உண்பொருளாய் விளங்கியது, இப்போது மங்கல சின்னமாய் மட்டும் விளங்கும் வெற்றிலையைப் பற்றிய சுவையான தகவல்களை அறிந்து கொண்டேன்.
    அடப்பக்காரர் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். கூப்பிட்டவுடன் வராமல் தாமதப்படுத்தினாலோ, பிகு பண்ணினாலோ, “ ஒன்னை வெத்திலை பாக்கு வைச்சு அழைக்கணுமா?” என்று கேட்கும் பழக்கம் இன்றும் வீடுகளில் தொடர்கிறது.
    இந்தக் காலப் பிள்ளைகள் பாக்குவெட்டியைப் பார்த்தேயிருக்க வழியில்லை.
    பாக்குவெட்டியைப் பற்றிய ஒரு பாடல். ஊமைக்கனவுகள் ஒரு பதிவில் கொடுத்திருந்தார். அது கீழே:-
    “காலே இரண்டு நடந்தறியாள்! உறுகண் இரண்டும்
    மேலே சிமிட்டும்! விழிக்கறியாள் அந்த மெல்லிநல்லாள்!
    பாலே குடிக்க வழியறியாள்! கொஞ்ச பாக்குத்தின்பாள்!
    ஆளையறிந்து சொல்லுவோர்க் கிட்டபொன் ஆயிரமே!”

    ReplyDelete
  9. முப்பது வருடங்களுக்கு முன் என்னுடன் பணியாற்றிய இருவரை நினைவுக்குக் கொண்டு வ்ந்தீர்கள்.மதிய உணவுக்குப் பிறகு இருவரும் வெற்றிலை போட்டுக் கொள்வர். நாங்கள் ஏதேனும் கேட்டால், அவர்கள் முகவாயைத் தூக்கிக் கொண்டு (நீங்கள் அழகாக விவரித்தது போல ) சொல்லும் பதில் ஒன்றும் புரிந்து தொலைக்காது; எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
    ஒரு வெற்றிலையின் வரலாறை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள், மிக்க நன்றி.

    ReplyDelete