Friday 27 October 2017

பாவம் அந்தப் பெண்கள்!




   

மங்கையர் பலருடன் தொடர்பு கொண்டு வாழ்ந்தவனைக் ‘காதல் மன்னன்’ என்று ஊடகங்கள் பெருமைப்படுத்தின; பல ஆடவருடன் பழகுகிற ஒருத்தியைக் ‘காதல் அரசி’ எனப் பாராட்டுவார்களா? மாட்டார்கள். மாறாக, ‘வேசி, விபசாரி, ஒழுக்கங்கெட்டவள்’ எனத் தூற்றுவார்கள்.

   காதல் மன்னனின் மகள் ஒரு பேட்டியில், “எங்கப்பா அழகானவர். அதனாலேயே பெண்கள் அவரை நாடினார்கள்” என்று பெருமை பொங்கக் கூறினார். அம்மா அழகாயிருந்து ஆண்கள் மொய்த்திருந்தால், பீற்றிக் கொள்வாரா?

   ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு வேறு நீதி.

   பெண்களுள் ஒரு சாராரைத் திருவள்ளுவர் ‘பொருட்பெண்டிர்’ என இழிவுபடுத்திப் பத்துக் குறள்கள் இயற்றினார். ஆண்களுக்கு அவரது அறிவுரை இரண்டுதான்;

1.   வரைவின் மகளிரைக் கூடாதீர்;
2.   பிறன் மனைவியை நாடாதீர்.

   மற்றபடி எத்தனைக் கன்னியர், கைம்பெண்களுடனும் பழகலாம்; அதை அவர் எதிர்க்கவில்லை. ஆண் அல்லவா? கற்பு என்ற ஒன்றைப் பெண்ணுக்கு வற்புறுத்திய ஆணாதிக்கச் சமுதாயம் ஆணுக்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை. பாரதி மட்டுந்தான் நியாயக்குரல் எழுப்பினார்:

   கற்புநெறி யென்று சொல்லவந்தார் இரு
   கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.

   பரத்தையர் பற்றிச் சங்க இலக்கியம் பலபடக் கூறுகிறது:

  மூன்று வகைப் பரத்தையர் இருந்தனர்:

1.   பொதுப் பரத்தை அல்லது ஊர்ப் பரத்தை – பொருள் தருவார்க்கு உரியவள்;

2.   காதற் பரத்தை – ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்;

3.   இற் பரத்தை – இல்லத்துக்கே கொண்டுவரப் பட்டவள்.
 
  காட்டு மயிலுக்குப் போர்வை நல்கிய வள்ளல் பேகன் வீட்டு மயிலைப் புறக்கணித்துப் பரத்தை யொருத்தியின் இல்லத்தில் தங்கி வாழலானான்; அதை யறிந்த புலவர்கள் பரணர், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர், கால இடைவெளியில் அவனிடம் சென்று, அவனுடைய மனைவியின் துயரத்தை எடுத்துக் கூறி அவளிடம் திரும்பிப் போய் வாழும்படி அறிவுறுத்தினர். அவனைக் கண்டிக்கவில்லை; சமூகத்தால் ஏற்கப்பட்ட வழக்கம் ஆயிற்றே! பேகன் திருந்தவில்லை யெனத் தெரிகிறது; அதனால்தான் புலவர்கள் அடுத்தடுத்து முயன்றிருக்கிறார்கள்.

   கோவலனைத் தந்தையோ கவுந்தியடிகளோ பிறரோ கண்டித்ததாய்த் தகவல் இல்லை. கண்ணகி மட்டுமே “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” என நளினமாய்ச் சாடினாள்.

   விலைமாதரைச் சகட்டுமேனிக்கு இழித்தல் தவறு.

1.   பொட்டுக் கட்டும் வழக்கம் பெண்களை வலுகட்டமாய்த் தாசிகளாக்கிற்று. அந்தக் கொடிய வழக்கம் ஆந்திராவின் சில பகுதிகளில் இன்றுங் கடைப்பிடிக்கப் படுவதாக அண்மைய Hindu–வில் (8.10.17) செய்தி விவரமாய்ப் பிரசுரமாகியுள்ளது.

2.   வறுமை போக்கத் தொழிலில் இறங்குவோர் உண்டு; அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

3.   கடத்தப்பட்டு / விற்கப்பட்டுச் சிவப்பு விளக்கு சிறையில் சிக்கி அல்லல் உழப்போர் ஆணாதிக்கத்துக்கு பலியானவர்கள், இரக்கத்துக்குப் பாத்திரங்கள்.


   ஆணுக்கு, அன்றுஞ் சரி, இன்றுஞ் சரி, முழுச் சுதந்தரம் இருந்தது, இருக்கிறது. வள்ளுவர் சொன்னாலென்ன, அவர் தாத்தா சொன்னாலென்ன, ஒழுக்கந் தவறி வாழும் ஆடவர் பற்பலர் உண்டு. அதைச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. “அவன் ஆம்பிளே!” என்ற சொற்றொடருக்கு அர்த்தங்கள் ஆயிரம். 

***************
(படம் உதவி - இணையம்)