Wednesday 15 November 2017

வடமொழியின் ஆதிக்கம்




  கிடைத்த பண்டைத் தமிழ் நூல்களுள் மிகத் தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தின் காலம் பொ.யு.மு. 3-ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிட்டுள்ளனர். அதற்கும் முன்பே தமிழில் வடசொற்கள் கலந்துவிட்டிருந்தமையால் தொல்காப்பியர் ஒரு விதி வகுத்தார்:

   வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
   எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884)

இதன் பொருள்:
வடசொற்களை அவற்றுக்கேயுரிய எழுத்துகளை நீக்கிப் பொருத்தமான தமிழெழுத்துகளைப் பெய்து ஏற்க.

  இவ்விதிப்படி,

    பங்கஜம் – பங்கயம்
    விஷம்  - விடம்
    ஹீனம்  - ஈனம்

என்றெல்லாம் தமிழ்ப் புலவர்கள் எழுதினார்கள். சமற்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியவர்கள் அம்மொழியின் கருத்துகளையும் கற்பனைகளையுங்கூடத் தழுவிக் கொண்டார்கள்.

   ஆறுகளைப் பெண்ணாய்க் கருதிய ஆரியர், அவறுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா எனப் பொருத்தமான பெயர் சூட்டினர். அவர்களைப் பின்பற்றி நாமும் காவேரி, அமராவதி, பவானி எனப் பெயர் வைத்தோம்.

   ---------------  நடந்தாய் வாழி காவேரி
   நடந்த எல்லாம் நின் கணவன்  (சிலம்பு, கானல்வரி)

என்று இளங்கோ காவேரிக்குக் கணவனாகச் சோழனைக் கற்பனை செய்தார். வையையையும் அவர் பெண்ணாய்ப் பாவித்தார்.

   புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
   வையை என்னும் பொய்யாக் குலக்கொடி (புறஞ்சேரி 169,170)

  ஆரியர் உலகையும் மங்கையாக உருவகித்து பூமாதேவி என்றதற்கிணங்க நாமும் அவ்வாறே கொண்டோம்;

1.   நிலம் என்னும் நல்லாள் நகும் (குறள் 1040)
2.   பூதலம் என்னும் நங்கை (கம்பர் 7401)
3.   நீராருங் கடலுடுத்த நிலமடந்தை (மனோன்மணீயம்)

   பூமியின் மகன் நரகாசுரன் என்பதை நம்புகிறோம். அவன் இறந்த நாளைத் தீபாவளியெனக் குதூகலத்துடன் கொண்டாடுகிறோம். அவன் நமக்கு என்ன தீங்கு செய்தான்? ஒருவன் பரம எதிரியே ஆனாலும் அவனது சாவுக்கு மகிழ்வது பண்பாடல்ல என்று 21-ஆம் நூற்றாண்டிலும் நமக்குத் தோன்றவில்லை.

   நாணம் என்ற பண்பைத் திருவள்ளுவர், “நாண் என்னும் நல்லாள்” எனப் பெண்ணாகக் கூறியதேன்? பரிமேலழகர் காரணஞ்சொல்கிறார்; “பெண்பால் ஆக்கியது வடமொழி முறைமையைப் பற்றி.”

   அதாவது, சமற்கிருதத்தில் நாணம் ‘லஜ்ஜா’ எனப் படுகிறது; இது பெண்பாற்சொல். ஆகவே, நாண் ஒரு பெண்!

  பழைய இலக்கிய, இலக்கணப் படைப்புகளுக்கும் நாம் சமற்கிருதத்துக்குப் பெரிதுங் கடன்பட்டுள்ளோம்;

  கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் ஆகியவற்றுக்கு மூலம் வடமொழியிதிகாசங்கள் என்பது யாவரும் அறிந்தது; திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி, பெருங்கதை, நைடதம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், கந்த புராணம், குசேலோபாக்கியானம், அரிச்சந்திர புராணம், நளவெண்பா, தூது இலக்கியங்கள், மண்ணியல் சிறுதேர், தண்டியலங்காரம் முதலான படைப்புகளும் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் அல்லது சமற்கிருதத் தாக்கம் பெற்றவை.

   தொல்காப்பியங்கூட இந்திரன் என்பான் இயற்றி ஐந்திரம் என்ற வடமொழி இலக்கணத்தைத் தழுவியது என்பதை அதன் பாயிரம், “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனக் கூறுவதால் அறிகிறோம். குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடு வடமொழிப் பரத சாத்திரத்திலிருந்து பெறப்பட்டதாம். தொல்காப்பியர்,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெரும்புனல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள்-5)

என்று நால்வகை நிலத்துக்கும் தலைவர்களாக ஆரிய தெய்வங்களைத்தானே குறிக்கிறார்?
(வேந்தன் – தேவர்களின் மன்னன் – இந்திரன்)

  இந்திர விழா, பழந்தமிழரின் விழாக்களுள் குறிப்பிடத்தக்கது. கோவலன் – மாதவி பிரிவு இந்திர விழாவில்தான்.

  தமிழ் மன்னர்கள் அமல்படுத்தியது மனுச்சட்டம். ஆதித்த கரிகாலனைக் கொன்ற நான்கு பார்ப்பனர்களுக்குக் கொலைத்தண்டனை விதிக்கப்படாதது ஏன்? மனுச்சட்டம், பார்ப்பானைக் கொல்லக்கூடாது என்கிறதே! நமக்குப் பொருந்திய புதுச்சட்டங்களை இயற்ற வேண்டுமென ராஜராஜனுக்குக் கூடத் தோன்றவில்லை.

   இவ்வாறு நாம் சமற்கிருத ஆக்கங்களை முன்னோடியாய்க் கொண்டிருப்பதால், Tamil Literature is dependent on Sankskrit literature என்னும் ஆய்வு முடிவுக்கு வந்த மேனாட்டார் வடமொழிக்கே முக்கியந்தந்து போற்றுகின்றனர், கற்கின்றனர்.

  “கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பது” நல்லதுதான்; ஆனால், வடமொழி உரைநடை இலக்கியங்களைக் கற்றுக் களித்துத் தமிழில் அவற்றைத் தோற்றுவிக்காமற் போனது தமிழ்ப் புலவர்களின் தவறு; அப்படிச் செய்திருந்தால் வரலாறு, நாடகம், கட்டுரை, மருத்துவம், கதை, புதினம் முதலான புது வகைகளுள் சிலவாவது பிறந்து மொழியை வளப்படுத்தியிருக்கும். இதற்காக 19-ஆம் நூற்றாண்டு வரை, வெள்ளையர் வருகை வரைக்கும், காத்திருக்க வேண்டியதாயிற்று. 

&&&&&&& 
படம் உதவி - இணையம்

5 comments:

  1. இவற்றிக் கூறினால் தமிழை குறை கூறுகிறோம் என்னும் பொல்லாப்பு வரலாம்

    ReplyDelete
    Replies

    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சரியாய்ச் சொன்னீர்கள் ; தமிழ்த் துரோகி என்ற பட்டமும் கிடைக்கலாம் ; ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தினால் உண்மையை வெளியிட இயலாது . சில சான்றுகள் காட்டி என் கருத்துகளை முன்வைக்கிறேன் . அவை தவறென்று நினைப்போர்க்கு உரிமை உண்டு , ஆதாரத்துடன் மறுத்து உரைக்க .
      கண்ணதாசன் பாடினார் :
      போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
      தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
      ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
      எவர்வரினும் எடுத்துரைப்பேன் நில்லேன் அஞ்சே ன் .







      Delete
  2. தமிழில் வடமொழியின் ஆதிக்கம் குறித்து பல புதிய தகவல்கள் அறிந்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . கட்டுரை பயன் தந்தமை அறிந்து மகிழ்கிறேன் .

    ReplyDelete
  4. குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடு கூட வடமொழி பரதச் சாத்திரத்திலிருந்து பெறப்பட்டது என்பதை இன்று தான் அறிந்தேன். வடமொழியின் தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்த பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி!

    ReplyDelete