Wednesday 10 January 2018

ஏன்?



   5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே! இதோ, பக்கத்தில், நீந்திக் கடக்கக்கூடிய சிறு கடலில் உள்ள தீவைத் தமிழர்கள் படித்துத் தங்கள் நாட்டுடன் சேர்த்திருந்தால் இன்று அங்கே நாம் சிறுபான்மையினராய் அவல வாழ்வுக்கு ஆளாகி அல்லல்பட நேர்ந்திராது அல்லவா? அப்படிச் செய்யாதது ஏன்?

   முடியாமைதான் காரணம்.

   சிங்களர்கள் சமமான வீரர்கள். அவர்கள் தமிழகத்துள் நுழைந்து சில பகுதிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

   நூல்: பாண்டியர் வரலாறு. ஆசிரியர்: சதாசிவ பண்டாரத்தார். பக். 79, 80;

   “இலங்காபுரித் தண்டநாயகன் பாண்டி நாட்டின் இராமேச்சரம், குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டு வந்த சிங்களப் படைக்கும் குலசேகரப் பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. இலங்காபுரித் தண்டநாயகன் பெருவெற்றி எய்தி, மதுரை மாநகரைக் கைப்பற்றினான். கீழை மங்கலம், மேலை மங்கலம், தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களும் அவன் வசமாயின.

   பாண்டியனுக்கு உதவியாய் வந்த சோழர் படைக்கும் சிங்களப் படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலிய ஊர்களில் நடைபெற்ற பெரும்போர்களில் சிங்களர் வென்றனர். இவர்களின் வெற்றி அந்நாள்களில் சோழ மண்டலத்திலும் பிற நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டது என்பது காஞ்சி மாநகரை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது.”

   வாசித்தீர்களா? பாண்டியன், சோழன் இருவரும் சேர்ந்தபோதிலும் தோற்றனர். பாண்டிநாடு முழுதும் இலங்கையின் பகுதியாகாமல் தப்பித்ததே தம்பிரான் புண்ணியம்! இந்த அழகில் இலங்கை மீது நாம் படையெடுப்பதாவது, கைப்பற்றுவதாவது!

   என்றாலும் சுமார் நூறு ஆண்டுக்குப் பின்பு, பாண்டியர் படை இலங்கை சென்று பல பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கி நகரங்களைக் கொள்ளையடித்து சுபகிரி என்னும் நகரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றியது. இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும்பொருளை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பிற்று. (மேற்படி நூல். பக். 109).


   உச்சக்கட்டச் சாதனை அவ்வளவுதான். முழுத்தீவையும் வசப்படுத்தப் போதிய படை வலிமையில்லை; கிடைத்த சிறு பகுதியையாவது காலனியாக்குவதற்குத் தேவையான வசதிகளோ organizing திறமையோ இல்லாமற் போயின. 

(படம் உதவி இணையம்)